DEVARAM AND THIRUMURAI MP3 SONGS FREE DOWNLOAD.

crop_175x175_70013

பாடியவர் தருமபுரம் ப.சுவாமிநாதன்

பதிவிறக்கம் செய்ய :

http://www.mediafire.com/download/dsaq955dq38fh12/Apparin_Devaram.rar

சொற்றுணை வேதியன்

பதிக எண்: 4.11                                         கடலில் அருளியது

பண்:  காந்தாரபஞ்சமம்

பின்னணி

தருமசேனர் என்ற பெயருடன் தங்களுக்கு குருவாக இருந்து வழிகாட்டி வந்தவர் சைவ சமயத்திற்கு மாறினார் என்பதை அறிந்த சமணர்கள் தங்களுக்கு பல்லவ மன்னனிடம் இருந்த செல்வாக்கினை பயன்படுத்தி, நாவுக்கரசுப் பெருமானை கொல்வதற்கு பல வகையிலும் சூழ்ச்சிகள் செய்தனர். நீற்றறையில் இடுதல், நஞ்சு கலந்த சோறு அளித்தல், என்ற பல சூழ்ச்சிகள் பயன் தராத நிலையில், பட்டத்து யானையைக் கொண்டு அவரது தலையை இடறச் செய்ய ஏற்பாடு செய்தனர். திருநாவுக்கரசர் மீது ஏவப்பட்ட யானை அவரை வலம் வந்து அவரை வணங்கியது; யானைப்பாகன் யானையை மறுபடியும் நாவுக்கரசர் மீது ஏவியபோது, யானை பாகனை வீசி எறிந்ததும் அல்லாமல் அருகிலிருந்த சமணர்களையும் துரத்திக் கொண்டு ஓடியது. தப்பிச் சென்ற சில சமணர்கள் மன்னனிடம் சென்று, நாவுக்கரசரைக் கொன்றால் தான், யானையிடமிருந்து அவர் தப்பியதால் மன்னனுக்கு நேர்ந்த அபகீர்த்தி மறையும் என்றும் கூறினார்கள். மேலும் அவர்கள் கல்லோடு பிணைத்து நாவுக்கரசரை கடலில் விட்டுவிடலாம் என்றும் ஆலோசனை கூறினார்கள். மன்னனின் கட்டளையை அவனது காவலாளர்கள் நிறைவேற்ற, நாவுக்கரசர் தான் எந்த நிலையிலும் சிவபிரானை புகழ்ந்து பாடுவேன் என்று அருளிய பதிகம் தான் இந்தப் பதிகம்.. இதனை சேக்கிழார் குறிக்கும் பெரியபுராண பாடல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

அப்பரிசு அவ்வினை முற்றி அவர் அகன்று ஏகிய பின்னர்

ஒப்பரும் ஆழ்கடல் புக்க உறைப்புடை மெய்த்தொண்டர்

தாமும்

எப்பரிசாயினும் ஆக ஏத்துவன் எந்தையை என்று

செப்பிய வண்தமிழ் தன்னால் சிவன் அஞ்செழுத்து

துதிப்பார்

சொற்றுணை வேதியன் என்னும் தூமொழி

நற்றமிழ் மாலையா நமச்சிவாய என்று

அற்றமுன் காக்கும் அஞ்செழுத்தை அன்பொடு

பற்றிய உணர்வினால் பதிகம் பாடினார்.

இந்தப் பதிகத்தினை நமச்சிவாயப் பத்து என்று அப்பர் பெருமானே அழைப்பதை நாம் பதிகத்தின் கடைப் பாடலில் காணலாம். மூவர் பெருமானார்கள் நமச்சிவாய மந்திரத்தின் பெருமையை உணர்த்தும் விதமாக நமச்சிவாயப் பதிகங்கள் அருளியுள்ளனர். காதலாகிக் கசிந்து என்று தொடங்கும் ஞானசம்பந்தர் அருளிய பதிகமும், மற்று பற்று எனக்கின்றி என்று தொடங்கும் சுந்தரர் அருளிய பதிகமும், இந்த வரிசையில் அமைந்த பதிகங்கள் ஆகும். மணிவாசகப் பெருமான், தனது திருவாசகத்தின் முதல் பாடலான சிவபுராணத்தை, நமச்சிவாய வாழ்க என்ற வாழ்த்துடன் ஆரம்பிக்கின்றார்.

பாடல் 1

சொற்றுணை வேதியன் சோதி வானவன்

பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழ

கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்

நற்றுணை ஆவது நமச்சிவாயவே

விளக்கம்::

புனிதமான சொற்களைக் கொண்டவை வேதங்கள். எனவே சொல் என்றால் வேதங்கள் என்றும் பொருள் கூறுவர். வேதங்களை முதலில் விரித்துக் கூறியவன் சிவபிரான் என்று பல தேவாரப் பதிகங்களில் கூறப்படுகின்றது. அவ்வாறு விரித்துக் கூறியதன் மூலம் வேதங்களுக்குத் துணையாக நின்ற வேதியன் என்ற பொருளில் சொற்றுணை வேதியன் என்று அழைத்ததாகவும் கருதலாம். .

உலகத்தில் தோன்றிய முதல் நூலாக கருதப்படும் வேதங்களின் நடுவில் வருவது நமச்சிவாய என்ற திருமந்திரம். எண்ணிக்கையில் வேதங்கள் நான்கு என்று வகுக்கப்பட்டு இருந்தாலும், சாம வேதம் என்பது ரிக் வேதத்தின் மந்திரங்களை இசை வடிவில் கூறுவதாகும் என்பதால், மொத்த வேதங்கள் மூன்று என்று நாம் கொள்ளலாம். அவ்வாறு எடுத்துக் கொண்டால் மூன்று வேதங்களில் நடுவாக வருவது யஜுர் வேதமாகும். ஏழு காண்டங்களைக் கொண்ட யஜுர் வேதத்தில் பதினோரு அனுவாகங்கள் உள்ளன. இதன் நடுப்பகுதியில் உள்ள ஆறாவது சூக்தத்தில் ஸ்ரீ ருத்ரம் மந்திரம் உள்ளது. அந்த மந்திரத்தின் நடுவில் நமச்சிவாய என்ற பஞ்சாக்கர மந்திரம் வருகின்றது. வாழ்க்கை நெறிகளை நமக்கு சொல்லிக் கொடுத்து நமக்குத் துணையாக இருக்கும் வேதத்தின் நடுவில் சிவபிரானின் திருநாமம் வருவதால், சொற்றுணை வேதியன் என்று கூறுகின்றார் என்றும் பொருள் கொள்ளலாம். வேதங்களின் நடுவில் வைத்து போற்றப்படும் மந்திரம் பஞ்சாக்கர மந்திரம் என்பதால், சொற்றுணை வேதியன் என்று இறைவனை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

அனைத்து உயிர்களையும் பற்றியிருக்கும் ஆணவம், கன்மம் மாயை என்ற மும்மலங்களின் தன்மையால் இருளில் மூழ்கியிருக்கும் நமக்கு ஒளியாகத் தோன்றி வழிகாட்டும், வானவர்களுக்கும் தலைவனாக விளங்கும் சிவபிரானை சோதி வானவன் என்று அப்பர்பிரான் குறிக்கின்றார்.

பொழிப்புரை:

புனிதமான சொற்கள் கொண்ட வேதங்களுக்குத் துணையாக இருந்து அவற்றை அருளியவனும், ஒளியாக இருந்து நமக்கு வழிகாட்டுபவனும் ஆகிய சிவபிரானின் பொன் போன்று பொலியும் இணையான திருவடிகளை நமது மனத்தினில் பொருந்த வைத்து நாம் கையால் தொழுது வழிபட்டால், கல்லுடன் பிணைக்கப்பட்டு கடலில் நாம் தள்ளிவிடப் பட்டாலும், நமக்கு பெரிய துணையாக இருந்து சிவபிரானின் திருநாமம் ஆகிய நமச்சிவாய நம்மை காப்பாற்றும்.

பாடல் 2

பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை

ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல்

கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது

நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே

விளக்கம்:

திருநாவுக்கரசர் சமண மதத்தை நிந்தனை செய்தார் என்று சமணகுருமார்கள் கொடுத்த புகார் மீது திருநாவுக்கரசரை அரசவைக்கு அழைத்த மன்னான் அவரை ஏதும் விசாரிக்காமல் அவருக்கு பல தண்டனைகள் அளித்தான். இதனால் நடுநிலையிலிருந்து தவறி ஒரு பட்சமாக தண்டனை அளித்த பல்லவ மன்னனின் புகழுக்கு களங்கம் ஏற்படுகின்றது. தான் பெற்ற தண்டனைக்கு காரணமாகிய அரசனின் இந்த தன்மையை நினைவு கூறும் அப்பர் பிரான், இந்தச் செய்தியை இங்கே குறிப்பிட்டாலும் அரசன் மீது கோபமாக ஏதும் சொல்லவில்லை. மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தில், சமணர்களையும், சிவபிரானை வழிபடாதவர்களையும் இழித்துப் பேசும் அப்பர் பிரான் இந்த நமச்சிவாயப் பதிகத்தில் எவரையும் இழித்துக் கூறாதது இந்த பதிகத்தின் தனிச் சிறப்பாகும். பொதுவாக பூ என்று கூறினால் தாமரை மலரைக் குறிக்கும். பல தேவாரப் பாடல்களில் பிரமனை பூமேல் அமர்ந்தவன் என்று அழைப்பது நாம் அறிந்ததே.

நடுநிலை தவறாமல் இருப்பது அரசரக்கு அழகு என்று பல இலக்கியங்களிலும் கூறப்படுகின்றது. செங்கோல் வளைந்தது என்றால் அரசன் நடுநிலை தவறிவிட்டான் என்று பொருள். கோணாத கோல் என்று வளையாத செங்கோலினை உணர்த்தும் அபிராமி பட்டர், அபிராமி பதிகத்தின் ஒரு பாடலில், அபிராமி அம்மையிடம் வேண்டும் பொருட்களில் ஒன்றாக, கோணாத கோலினை, குறிப்பிடுகின்றார். அபிராமி அம்மையின் பாதங்களைத் தொழும் தொண்டர்களுக்கு கிடைக்கும் பேறுகள் இந்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவைகளில் ஒன்றாக கோணாத கோல் என்று குறிப்பிடப்படுவதால் எவ்வளவு உயர்வாக நடுநிலை தவறாத அரசன் மதிக்கப்படுகின்றான் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். கன்றாத வளமை என்றால் வற்றாத செழுமை என்று பொருள். துய்த்தல் என்றால் அனுபவித்தல் என்று பொருள். தான் தூங்கிக் கொண்டு இருந்தாலும் உலகில் நடப்பவை அனைத்தையும் அறியும் ஆற்றல் பெற்றவர் திருமால் என்பதால், அவரது தூக்கம் அறிதுயில் என்று கூறப்படுகின்றது.

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடு

வாராத நட்பும்

கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணி

இலாத உடலும்

சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத

சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத

கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு துன்பம்

இல்லாத வாழ்வும்

துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய 

தொண்டரோடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயில் மாயனது தங்கையே 

ஆதிகடவூரின் வாழ்வே

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள்வாமி

அபிராமியே

பொழிப்புரை:

பூக்களுக்கு அணிகலனாகத் திகழ்வது தாமரை மலர். பசுக்களுக்கு ஆபரணம் போல் திகழ்வது சிவபிரான் மகிழ்ந்து நீராடும் பொருட்களை அளிக்கும் தன்மை, அரசர்களுக்கு அணிகலனகத் திகழ்வது நடுநிலை நெறி தவறாமல் நடந்து கொள்ளும் தன்மை. நாக்குகளுக்கு அரிய ஆபரணம் போல் திகழ்வது நமச்சிவாய மந்திரமாகும்.

பாடல் 3

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்

உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம்

பண்ணிய உலகத்தில் பயின்ற பாவத்தை

நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே

விளக்கம்:

தொடர்ந்து செய்யும் எந்தச் செயலையும் பயிலுதல் என்று கூறுவார்கள். உலகினில் பிறந்த நாம் தொடர்ந்து பாவம் செய்து கொண்டு இருப்பதால் பயின்ற பாவம் என்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. நிலத்தில் முளைத்துள்ள ஒரு செடியை பிடுங்கவேண்டும் என்றால், நாம் அதன் அருகில் சென்று அதன் அடிப்பகுதியைப் பற்றிக் கொண்டால் தான் அதனை நம்மால் வேருடன் எடுக்கமுடியும். நமது பாவங்களையும் வேருடன் களைவதற்காக நமச்சிவாய மந்திரம், நமது அருகில் வந்து அந்த பாவங்களை களைகின்றது என்று இங்கே அப்பர் பிரான் கூறுகினார்.

பொழிப்புரை:

ஆகாயம் வரை மிகவும் உயரமாக கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள குவியல் ஆயினும், ஒரு தீப்பொறி அந்த அடுக்கினில் படர்ந்துப் பற்றிக்கொண்டால் அனைத்து கட்டைகளும் சாம்பலாக மாறி ஒன்றும் இல்லாத நிலை ஏற்படுவது போல், நாம் இந்த உலகினில் தொடர்ந்து செய்த பாவங்கள் எத்தனை ஆயினும் அவை அனைத்தையும் சுட்டெரிக்கும் தன்மை வாய்ந்து நமச்சிவாய என்னும் திருநாமம்.

பாடல் 4

இடுக்கண் பட்டிருக்கினும் இரந்து யாரையும்

விடுக்கில் பிரான் என்று வினவுவோம் அல்லோம்

அடுக்கல் கீழ் கிடக்கினும் அருளின் நாம் உற்ற

நடுக்கத்தை கெடுப்பது நமச்சிவாயவே

விளக்கம்:

தருமசேனர் என்ற பெயருடன் சமணர்களுக்கு குருவாக இருந்து அவர்கள் சார்பில் புத்த மதத்தவருடன் வாதங்கள் செய்து வெற்றி கொண்ட தருமசேனரின் இழப்பு சமணர்களை வெகுவாக பாதித்தது. பல கொடுமைகளை அவருக்கு இழைத்து பயமூட்டினால் அவர் மறுபடியும் தங்களது மதத்தில் இணைந்து விடுவார் என்ற நப்பாசை அவர்களுக்கு இருந்தது. ஆனால் சைவ மதத்தைச் சார்ந்த நிலையில் மிகவும் பிடிப்புடன் இருந்த நாவுக்கரசர், சிவபிரானைத் தவிர வேறு எவரையும் தான் பட்ட கஷ்டங்களுக்காக வேண்டுவதில் விருப்பம் இல்லாதவராக இருந்தார். அந்த கொள்கைப் பிடிப்பு இந்த பாடல் மூலம் நமக்கு உணர்த்தப்படுகின்றது. .

அடுக்கல்=மலை. அப்பர் பிரானின் பதிகங்களின் கடைப் பாடல்கள் பெரும்பாலும் இராவணின் கயிலை நிகழ்ச்சியும் அப்போது சிவபிரான் அரக்கனுக்கு அருளிய கருணைச் செயலும் இடம் பெறுவது வழக்கம். ஆனால் இந்தப் பதிகத்தின் கடைப்பாடல் அவ்வாறு அமையவில்லை. அந்த நேரத்தில் சிவபிரான் அருள் செய்யாதிருந்தால் கயிலை மலையின் கீழே நெருக்குண்ட இராவணின் உடல் கூழாக மாறியிருக்கும். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த அந்த நிலையில் இராவணன் சிவபிரானின் நாமத்தை புகழ்ந்து கூறும் சாமவேதத்தினை இசைத்து பாடவே இறைவனின் கருணையைப் பெற்றுய்ந்தான். மலையின் கீழ் அமுக்குண்டு இருந்த இராவணின் நிலை அப்பர் பிரானுக்கு நினைவுக்கு வரவே, அத்தகைய இடறினின்று அவனை நமச்சிவாய மந்திரம் காத்தது போல் தனது நடுக்கத்தையும் கெடுத்து காப்பாற்றும் என்று இங்கே உணர்த்துகின்றார்.

பொழிப்புரை:

எந்த வகையான இடுக்கண் தன்னை எதிர் நோக்கினும். அந்த இடுக்கண்களிலிருந்து நீர் என்னை விடுவிக்க வேண்டும் என்று எவரையும் இறைஞ்சும் நிலையில் நான் இல்லை. அருளின் வயமாகிய சிவபிரானின் நாமமாகிய நமச்சிவாய மந்திரம், மலையின் கீழ் மாட்டிக் கொண்டு எழமாட்டாத நிலையில் இருந்தாலும், அதனால் எனக்கு ஏற்படும் நடுக்கத்தை கெடுத்து காப்பாற்றும்.

பாடல் 5

வெந்தநீறு அருங்கலம் விரதிகட்கெலாம்

அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆறங்கம்

திங்களுக்கு அருங்கலம் திகழும் நீள்முடி

நங்களுக்கு அருங்கலம் நமச்சிவாயவே

விளக்கம்:

விரதிகள்=விரதங்களை மேற்கொண்டு தவம் செய்து மெய்ப்பொருளை நாடும் முனிவர்கள். வெந்தநீறு=சாம்பல், இங்கே விபூதியினைக் குறிக்கும். நங்கள்=நாம் அனைவர்

பொழிப்புரை:

பல வகையான விரதங்களை மேற்கொண்டு தவம் செய்து மெய்ப்பொருளை நாடும் முனிவர்களுக்கு அழகு சேர்ப்பது அவர்கள் அணியும் விபூதியாகும்; அந்தணர்க்கு பெருமை சேர்ப்பது அவர்கள் நான்மறைகளையும் ஆறு அங்கங்களையும் கற்றுத் தேர்ந்தவராக இருத்தல்; சந்திரனுக்கு அழகு சேர்ப்பது அவன் சிவபெருமானைச் சரண் அடைந்து அவரது திருமுடியில் இடம் பெற்று இருக்கும் நிலை; சைவர்களாகிய நம் அனைவர்க்கும் பெருமை சேர்க்கும் அணிகலனாக விளங்குவது நமச்சிவாய மந்திரம் ஆகும்.

பாடல் 6

சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால்

நலமிலன் நாள்தோறும் நல்குவான் நலம்

குலமிலன் ஆகிலும் குலத்துக்கு ஏற்பதோர்

நலம் மிக கொடுப்பது நமச்சிவாயவே

விளக்கம்:

சலம்=வேறுபாடுள்ள தன்மை. சஞ்சலம் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு. உள்ளொன்றும் புறமொன்றுமாக உள்ள நிலை. வேண்டுதல் வேண்டாமை அற்றவன். அனைவருக்கு ஒரே தன்மையாக உள்ளவன். சங்கரன்=இன்பம் அளிப்பவன்.

சிவபிரானின் நாமத்தைச் சொல்பவர் எத்தன்மையராக இருந்தாலும், கொடுந்தொழில் புரிபவராக இருப்பினும், ஏழு நரகங்கள் செல்லவேண்டிய பாவங்கள் புரிந்தவராயினும் அவர்களுக்கும் நமச்சிவாய மந்திரம் நன்மையை அளிக்கும் என்று கூறும் சம்பந்தப் பெருமானின் பதிகங்கள் இங்கே நினைவு கூறத் தக்கவை.

கொல்வாரேனும் குணம் பல நன்மைகள்

இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின்

எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்

நல்லார் நாமம் நமச்சிவாயவே

நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்

உரை செய்வார் ஆயின் உருத்திரர்

விரவியே புகுவித்திடும் என்பரால்

வரதன் நாமம் நமச்சிவாயவே

பொழிப்புரை:

அனைவருக்கு ஒரே தன்மையாக காணப்படும் சிவபெருமான், தன்னைச் சார்ந்த அடியார்களுக்கு எப்போதும் நன்மை செய்பவன்; சிவபிரான் தன்னைச் சாராதவர்களுக்கு நன்மை அளிக்காதவன். நற்குலத்தில் பிறவாதாரும், சிவபிரானின் நாமத்தை ஓதினால், அவர்களுக்கும் நற்குலத்தோர் அடையும் நன்மைகளை அளிப்பவன் சிவபெருமான் .

பாடல் 7

வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்

கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்

ஓடினேன் ஓடிச்சென்று உருவம் காண்டலும்

நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே

விளக்கம்:

வீடினார்=உலகப் பற்றினை விட்டவர்கள்; விழுமிய=சிறந்த

சமண சமயம் சார்ந்து இருந்த நேரத்தில் தானுற்ற சூலை நோயினைத் தீர்க்கும் வழி தெரியாமல் திகைத்த போது, சிவபிரானின் அடியாராகிய தனது தமக்கையாரைப் பற்றி, அவரைப் பின்தொடர்ந்து திருவதிகை திருக்கோயில் சென்று இறைவனை வழிபட்டு, சூலை நோய் தீர்ந்து நன்மை அடைந்த நிலை இங்கே குறிப்பாக உணர்த்தப்பட்டுள்ளது.

அவனது அருளால் சிவபிரானின் உருவத்தைத் தான் தெரிந்து கொண்ட பின்னர் அவனது திருநாமத்தை இடைவிடாது பயின்று, வாயார நமச்சிவாய என்ற நாமத்தைச் சொல்லி திருநீறு அணிந்துகொண்டதாக, ஈன்றாளுமாய் என்று தொடங்கும் திருப்பாதிரிப்புலியூர் பதிகத்தில் அப்பர் பிரான் கூறுகின்றார்.

கருவாய்க் கிடந்தது உன் கழலே நினையும் 

கருத்துடையேன்

உருவாய்த் தெரிந்து உன் நாமம் பயின்றேன் உனது

அருளால்

திருவாய்ப் பொலியச் சிவாயநம என்று நீறு

அணிந்தேன்

தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே

பொழிப்புரை:

வீடுபேறு அடையும் நோக்கத்துடன், உலகப் பற்றினை விட்டொழிந்த சிறந்த தொண்டர்கள் ஒன்று கூடி சிவநெறியைச் சிந்தித்தனர். நானும் அவர்களைப் பின்பற்றிச் சென்று அவர்கள் கூறிய அஞ்செழுத்து மந்திரத்தைப் பற்றினேன்; அந்த நமச்சிவாய மந்திரமும் என்னைப் பற்றிக்கொண்டு பல நன்மைகள் புரிந்தது.

பாடல் 8

இல்லக விளக்கது இருள் கெடுப்பது

சொல்லக விளக்கது சோதி உள்ளது

பல்லக விளக்கது பலரும் காண்பது

நல்லக விளக்கது நமச்சிவாயவே

விளக்கம்:

இல்=இல்லம். நமது உடல் உயிர் குடி கொண்டிருக்கும் இடம் இல்லம் என்று இங்கே அழைக்கப்படுகின்றது. நமது உடலில் உள்ள மனத்தில் நமச்சிவாய மந்திரம் துதிக்கப்பட்டு ஞானவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டால் நம்மைப் பிணித்திருக்கும் அறியாமை என்ற இருள் விலகுகின்றது. சிவபிரான் சொற்களுக்குத் துணையாக இருக்கும் நிலை, இதே பதிகத்தின் முதல் பாடலிலும் கூறப்பட்டுள்ளது. அனைத்து உயிர்களுடனும் சிவபிரான் கலந்து இருப்பதால் பல்லக விளக்கு என்று கூறப்பட்டுள்ளது.

பொழிப்புரை:

நமச்சிவாய மந்திரம், நமது உள்ளத்தில் ஞான விளக்காக நின்று நம்மை பிணைத்திருக்கும் மலங்களை அகற்றும்; சொற்களுக்குத் துணையாக நின்று சொற்களுக்குப் பொருளை அளிக்கும்; என்றும் நிலைத்து நிற்பது, பல்லாயிரக் கணக்கான உயிர்களின் உள்ளே நிற்பது; பக்குவப் பட்ட நிலையில் நின்று பாசங்களை அறுத்த பலரும் காண்பது: நல்ல உள்ளங்களில் வீற்றிருப்பது ஆகும்.

பாடல் 9

முன்னெறி ஆகிய முதல்வன் முக்கணன்

தன்னெறியே சரண் ஆதல் திண்ணமே

அந்நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம்

நன்னெறியாவது நமச்சிவாயவே

விளக்கம்:

இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் தனது துன்பங்களிலிருந்து விடுவிக்குமாறு வேறு எவரையும் வேண்டேன் என்று அப்பர் பிரான் கூறியதற்கு காரணம் இந்தப் பாடலில் சொல்லப் பட்டுள்ளது. அனைத்து தேவர்களுக்கும் முதல்வன் சிவபிரான் என்பது தான் அந்த காரணம். உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும் நெறி வீடுபேறு ஒன்று தான். வீடுபேறு அடைந்த உயிர் உலகின் இன்ப துன்பங்களிலிருந்து விடுதலை பெற்று, சிவபிரானுடன் கலந்து என்றும் அழியாத இன்பத்தைப் பெறுகின்றது.

பொழிப்புரை:

முதல்வனாகிய முக்கண்ணனே அனைவருக்கும் முன்னே தோன்றிய நெறியாவான். அத்தகைய சிறப்பு வாய்ந்த சிவபிரானின் செம்மையான நெறியை உறுதியுடன் சரணம் என்று வாழும் அடியார்களுக்கெல்லாம் மிகவும் நன்மை பயப்பதான வீடுபேறு எனப்படும் நன்னெறியினை அளிப்பது நமச்சிவாய என்னும் மந்திரமாகும்,

பாடல் 10

மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்

பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ

நாப்பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து

ஏத்த வல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே

விளக்கம்:

மாப்பிணை=மான் கன்று. சிவபிரான் தனது இடது பாகத்தில் மான் கன்றினை ஏந்தி காட்சி அளிக்கின்றார். தனது உடலின் இடது பாகத்தில் உமையம்மையை ஏந்தி இருக்கும் சிவபிரானைப் பற்றி குறிப்பிடும் போது அப்பர் பிரானுக்கு சிவபிரான் இடது கையில் ஏந்தி இருக்கும் மான்கன்று நினைவுக்கு வந்தது போலும். அழகான உமையம்மையை நினைக்கும் எவருக்கு இளமானின் அழகான தோற்றம் நினைவுக்கு வருவது இயல்பு தானே.

சிவபிரானின் திருவடிகளை அனைவரும் பூக்கள் தூவித் தொழுவதால், அவரது திருவடிகள் எப்போதும் பூக்களுடன் இணைந்த தன்மையில் காணப்படுகின்றன. நாவுடன் பிணைந்து தழுவிய பதிகம் என்று குறிப்பிடுவதன் மூலம், அப்பர் பிரான் நமது நாவுடன் நமச்சிவாயப் பதிகம் பிணைந்து, எப்போதும் பிரியாது, இரண்டற கலந்து இருக்க வேண்டும் என்று இங்கே அறிவுறுத்துகின்றார்.

கடைக்காப்பு என்ற வகையில் தனது பதிகங்களுக்கு அப்பர் பிரான், அந்த பதிகங்களைப் பாடுவதால் ஏற்படும் பலன்களை குறிப்பதில்லை. ஆனால் இந்த நமச்சிவாயப் பதிகத்தில், பலன் கூறப்பட்டுள்ளது. இதே போல், இராமேச்சுரம் மீது அருளிய பாசமும் கழிக்க கில்லா என்று தொடங்கும் பதிகத்திலும் அப்பர் பிரான் அந்த பதிகத்தை பாடுவதால் ஏற்படும் பலனை குறிப்பிட்டுள்ளார்.

அப்பர் பிரானுக்கு சமணர்கள் கொடுத்த துன்பம் நீங்கப்பெற்று அவர் திருப்பாதிரிப் புலியூர் அருகே கரை ஏறியதே, இந்த பதிகம் அளிக்கும் பலனுக்குச் சான்றாகத் திகழ்கின்றது.

பொழிப்புரை:

மான் கன்றினை இடது கையில் ஏந்தியும், இடது பாகத்தில் உமையம்மையை ஏற்றுக் கொண்டும் காட்சி அளிக்கும் சிவபிரானின் திருவடிகளை, அனைவரும் மலர்கள் தூவி வழிபடுவதால் எப்போதும் பூக்களுடன் இணைபிரியாது இருக்கும் திருவடிகளை நமது மனத்தினில் பொருத்தி, நமது நாவுடன் நமச்சிவாயப் பதிகத்தினை பிணைத்து சிவபிரானை புகழ்ந்து பாட வல்லவர்களுக்கு எத்தைகைய துயரங்களும் ஏற்படாது.

முடிவுரை

துன்பங்கள் நம்மைத் தாக்கும் போது நம்முடன் இருந்து காக்கும் திருவைந்தெழுத்தினை நினைத்து நாவுக்கரசர் நிரம்பிய அன்புடன் இந்த பதிகத்தைப் பாடியவுடன், கடலில் நாவுக்கரசரைப் பிணைத்து கட்டப்பட்டிருந்த கல் மிதந்தது என்றும் அவரைப் பிணைத்து கட்டப்பட்டிருந்த கயிறுகள் அறுந்தன என்றும் சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். மேலும் நல்வினை தீவினை என்றும் இருவினைப் பாசங்கள் ஆணவமலம் என்ற கல்லுடன் இறுகப் பிணித்தலால் பிறவிப் பெருங்கடலில் விழும் உயிர்களைக் கரையேற்றும் ஐந்தெழுத்து மந்திரம் நாவுக்கரசரை கடலில் ஆழாது மிதக்கச் செய்வது ஒரு வியப்பான செயல் அல்ல என்றும் சேக்கிழார் அதற்கு அடுத்த பாடலில் கூறுகின்றார்.

இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின்

வரு பாவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட

அருளும் மெய் அஞ்செழுத்து அரசை இக்கடல்

ஒரு கல் மேல் ஏற்றிடல் உரைக்க வேண்டுமோ

நமது உயிர் இருவினைப் பாசங்களால் (அறம், பாவம்) ஆணவ மலத்துடன் பிணைக்கப் பட்டு உடலுடன் கூடிய நிலையில் இருப்பது திருவாசகம் சிவபுராணத்தில் மணிவாசகரால் உணர்த்தப்படுகின்றது.

மறைந்திட மூடிய மாய இருளை

அறம் பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி

புறத்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி

மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை

தனது அலைக் கரங்களால் நாவுக்கரசுப் பெருமானை கரையில் கொண்டு சேர்ப்பதற்கு வருணன் மாதவம் செய்திருக்க வேண்டும் என்றும் சேக்கிழார் கூறுகின்றார். நாவுக்கரசர் கரையேறிய இடம், கரையேறிய குப்பம் (கடலூருக்கு அருகில் உள்ளது) என்று அழைக்கப்படுகின்றது.

பின்னர் நீலக்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தில் அப்பர் பிரான், சமணர்களின் வஞ்சனையால் தான் கல்லோடு கட்டப்பட்டு கடலில் தள்ளப்படும் நிலைக்கு ஆளானது என்று குறிப்பிடுகின்றார்.

கல்லினோடு என்னை பூட்டி அமண் கையர்

ஒல்லை நீர் புக என் வாக்கினால்

நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன்

நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் நன்றே

வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிய காவிரி நதியினைக் கடந்து கொள்ளம்புதூர் சென்று இறைவனை தரிசிக்க ஞானசம்பந்தர் நினைத்தார். வெள்ளத்தை மீறி தன்னை கரை சேர்க்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை இறைவன் முன் வைத்த போது அருளிய பதிகம் கொட்டமே கமழும் என்று தொடங்கும் பதிகம். அதே போன்று வெள்ளம் பெருகியோடும் காவிரியின் எதிர்க் கரையில் உள்ள திருவையாற்று பெருமானை தரிசிக்க சுந்தரர் திருவுள்ளம் கொண்டார். வெள்ளம் வடிந்து தனக்கு வழிவிட வேண்டும் என்று சிவபிரானிடம் விண்ணப்பம் வைத்த பாடல் பரவும் பரிசு ஒன்று அறியேன் என்று தொடங்கும் பதிகம். இந்த இரண்டு பதிகங்களும், சொற்றுணை வேதியன் என்று தொடங்கும் பதிகம் போல் காந்தார பஞ்சமம் பண்ணில் அமைக்கப்பட்டுள்ளதை நாம் உணரலாம். கடலைகளின் இரைச்சலையும், நதியில் காணப்பட்ட வெள்ளப்பெருக்கின் ஓசையையும் மீறி தங்களது பாடல்கள் ஒலிக்கவேண்டும் என்பதற்காக உரத்த குரலில் பாடப்படும் காந்தார பஞ்சமம் பண், மூவர்களாலும் தேர்ந்தெடுக்கப் பட்டதோ என்ற எண்ணம் நமக்குத் தோன்றுகின்றது.

வாழ்வில் எத்தனைத் துன்பம் வந்தாலும் அவற்றை வெற்றி கொண்டு மீளவும், பயணம் மேற்கொள்ளும்போது நன்மை தரும் வழித் துணைகள் அமையவும், பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறவும் நாம் ஓத வேண்டிய பதிகம் என்று பெரியோர்களால் கருதப் படுகின்றது.

தொகுப்பு: என். வெங்கடேஸ்வரன்

damalvenkateswaran@gmail.com

98416 97196 & 044 24811300

வனபவள வாய் திறந்து

பதிக எண்: 4.06                 கழிப்பாலை                பண்: காந்தாரம்

முன்னுரை:

தில்லையில் நடராஜப் பெருமானின் திருக்கோலம் கண்டு மகிழ்ந்த பின்னர், அப்பர் பிரான் அருகில் இருந்த வேட்களம், கழிப்பாலை முதலிய தலங்கள் சென்று அங்கும் பதிகங்கள் அருளி சிவபிரானை வழிபட்டார். கழிப்பாலையில் பல பதிகங்கள் அருளியதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார். நமக்கு தற்போது கிடைத்துள்ள அப்பர் பிரானின் பதிகங்கள் நான்கு.

சிவபிரான் மீது தீராத காதல் கொண்ட தலைவியின் நிலை கண்டு அவளது அன்னை கூறும் கூற்றாக இந்த பாடல் அமைந்துள்ளது. தனது தலைவன் தன்னுடன் வந்து இணையாததால் மனவருத்தம் அடையும் அப்பர் நாயகி, உடல் மெலிகின்றாள். இதனைக் கண்ட அவளது அன்னை, தனது மகளின் உடல் மெலிவுக்குக் காரணம் ஆய்ந்து அறியும் பொருட்டு, மகளின் நடவடிக்கையை கூர்ந்து கவனிக்கின்றாள். தனது மகள் எப்போதும் சிவபிரானின் நினைவாகவே, அவனது உருவ அடையாளங்களைச் சொல்லி பிதற்றுவதை உணர்ந்த தாய், அந்த அடையாளங்களைக் கொண்டு தனது மகள், கழிப்பாலையில் உறையும் சிவபிரானைக் கண்டு காதல் கொண்டுள்ளாள் என்ற முடிவுக்கு வருகின்றாள். இதனை விவரிக்கும் விதமாக, அனைத்துப் பாடல்களும் அமைந்து ஒரு அகத்துறைப் பதிகமாக அமைந்துள்ளது.

பாடல் 1:

வனபவள வாய் திறந்து வானவர்க்கும் தானவனே என்கின்றாளால்

சினபவள திண்தோள் மேல் சேர்ந்திலங்கு வெண்ணீற்றன்என்கின்றாளால்

அனபவள மேகலையொடு அப்பாலைக்கு அப்பாலன் என்கின்றாளால்

கன பவளம் சிந்தும் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள்கொல்லோ

விளக்கம்:

கன பவளம்=பெரிய பவளம்: தானவன்=தேவர்களுள் ஒருவனாக கருதப்படாமல், தனியாக நிற்கும் ஒப்பற்ற தலைவன், சிவபெருமான். எனவே வானவர்களில் ஒருவனாக அவரை எண்ணுதல் தகாது, அவர் மற்றைய தேவர்களிளிருந்து மாறுபட்டவர் என்று இங்கே அப்பர் பிரான் நமக்கு உணர்த்துகின்றார். தக்கனது பதவிக்கு அஞ்சி, சிவபிரானை புறக்கணித்து அவன் செய்யும் யாகத்தில் அவிர்பாகம் பெறுவது தவறு என்று தெரிந்தும், அதனைத் தவிர்க்க முடியாமல், அவனது யாகத்திற்குச் சென்ற தேவர்கள், பாற்கடலில் நஞ்சு திரண்டு எழுந்த போது, தங்களை எவ்வாறு காத்துக்கொள்வது என்பது தெரியாமல், மிகுந்த பயம் கொண்டு சிவபிரானிடம் முறையிட்டனர். அடுத்தவரின் பதவியை நினைத்து அவர்க்கு பயப்படுவதும், தங்களை காப்பாற்ற வேறொருவர் தேவைப்படும் நிலையில் இருப்பதும் தெய்வத்தின் குணங்கள் அல்லவே: இந்த இரண்டு நிகழ்ச்சிகளே, தேவர்களும், உலகில் உள்ள மற்ற உயிர் வகைகளில் ஒருவர் என்பதை புலப்படுத்துகின்றது. உண்மை நிலை இவ்வாறு இருந்தாலும், இதனை மறந்து, மூவரில் ஒருவராக சிவபிரானை நினைத்து, அவரைப் போன்று தாங்களும் தேவர்கள் என்று சொல்லித் திரிவது எத்தைகைய பாவம் என்று மணிவாசகர் திருச்சதகம் பதிகத்தில் கூறுகின்றார். தகர்=ஆடு: தகர் தின்று= வேள்வியில் பலியாக இடப்பட்ட ஆட்டினை அவிர்பாகமாக ஏற்றல். பண்டைய நாட்களில் வேள்வியில் ஆட்டினை பலியாக கொடுத்தல் வழக்கமாக இருந்தது தெரிய வருகின்றது.

சாவ முன்னாள் தக்கன் வேள்வித் தகர் தின்று நஞ்சம் அஞ்சி

ஆவ எந்தாய் என்று அவிதா இடும் நம்மவர் அவரே

மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண்ணாண்டு மண் மேல்

தேவர் என்றே இறுமாந்து என்ன பாவம் திரிதவரே

இந்த பாடலில் அப்பர் பிரான் சிவபெருமானை அப்பாலைக்கு அப்பாலன் என்று கூறுகின்றார். பிரளய காலத்தில் அனைத்து உயிர்களும் இறைவனிடத்தில் ஒடுங்கி விடுகின்றன. அவ்வாறு தன்னிடம் ஒடுங்கியுள்ள உயிர்கள், தங்களது ஆணவ மலத்தினை நீக்கிக்கொண்டு உய்யும்பொருட்டு சிவபிரான் மறுபடியும் ஐந்தொழில்கள் ஆற்ற முனைகின்றான். இந்த ஐந்து தொழில்களை ஆற்றுவதற்கு இடமாக உள்ள இடம் சுத்த மாயா பிரபஞ்சம் அல்லது சுத்த மாயா புவனம் எனப்படுகின்றது. இதனைத் தான் அப்பர் பிரான் இங்கே பிரளயத்திற்கு அப்பாலோர் அண்டம் என்று நின்ற திருத்தாண்டகத்தின் இரண்டாவது பாடலில் குறிப்பிடுகின்றார். இந்த புவனத்தில் உள்ள தத்துவங்கள், சுத்த தத்துவங்கள் என்று அழைக்கப்படும். சிவம், சத்தி, சதாசிவம், ஈசுவரம், சுத்தவித்தை என்பவை இங்குள்ள தத்துவங்கள் ஆகும். பிரளயத்திற்கு அப்பால் உள்ள சுத்த மாயா புவனத்தில் இருந்துகொண்டு, தான் நினைத்த மாத்திரத்தில் உலகங்களை எல்லாம் மீண்டும் படைத்து, உயிர்களை அவைகளின் வினைகளுக்கு ஏற்றவாறு உடல்களுடன் பொருத்தும் சிவபெருமான் என்பதால் அப்பாலைக்கு அப்பாலன் என்று இங்கே கூறுகின்றார். நின்ற திருத்தாண்டகத்தின் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

மண்ணாகி விண்ணாகி மலையுமாகி வயிரமுமாய் மாணிக்கம் தானேயாகிக்

கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியுமாகிக் கலையாகிக் கலைஞானம் தானேயாகிப்     

பெண்ணாகிப் பெண்ணுக்கோர் ஆணுமாகிப் பிரளயத்துக்கு அப்பாலோர் அண்டமாகி

எண்ணாகி எண்ணுக்கோர் எழுத்துமாகி எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்றவாறே

இவ்வாறு அண்டங்களுக்கு அப்பாலிருக்கும் சிவபிரானின் தன்மை, அப்பாலன் என்றும் அப்பாலைக்கு அப்பாலன் என்றும் பல பதிகங்களில் அப்பர் பிரானால் குறிப்பிடப்படுகின்றது. பாதித்தன் திருவுருவில் என்று தொடங்கும் ஒரு ஆரூர் பதிகத்தின் (6.26.4) பாடலில் அப்பர் பிரான், சிவபெருமானை அப்பாலைக்கு அப்பாலான் என்று குறிப்பிடுவதை கீழ்க்கண்ட பாடலில் நாம் காணலாம். வைப்பான்=படைப்பான்.

மெய்ப்பால் வெண்ணீறணிந்த மேனியானை வெண் பளிங்கினுள் பதித்த சோதியானை

ஒப்பானை ஒப்பிலா ஒருவன் தன்னை உத்தமனை நித்திலத்தை உலகமெல்லாம்

வைப்பானைக் களைவானை வருவிப்பானை வல்வினையேன் மனத்தகத்தே மன்னினானை

அப்பாலைக்கு அப்பாலைக்கு அப்பாலானை ஆரூரில் கண்டடியேன் அயர்த்த வாறே.

பொழிப்புரை:

எனது மகள், தனது பவளம் போன்று அழகிய உதடுகளைக் கொண்ட வாயினால் சொல்லும் சொற்களை நான் கூறுகிறேன்: நீங்கள் கேட்பீர்களாக, தேவர்களுக்கு ஒப்பற்ற தலைவனாக விளங்குபவன் என்றும், சினம் கொள்ளும் சமயத்தில் சிவந்து பவளம் போன்று காட்சி அளிக்கும் திண்ணிய தோள்களின் மேல் சேர்ந்து விளங்கும் வெண்மையான திருநீறு அணிந்தவனே என்றும், அன்னம் போன்ற நடையினையும் பவளங்களின் நிறம் கொண்ட மேகலையை உடையாக அணிந்த உமையம்மையுடன் அண்டங்களையும் கடந்த இடத்தில் உறைபவனே என்றும், எனது மகள் எப்போதும் பிதற்றிக் கொண்டே இருக்கின்றாள். பெரிய அளவிலான பவளங்களைக் கரையில் கடல் சேர்க்கும் கழிப்பாலைத் தலத்தில் உறையும் பெருமானை, எனது மகள் கண்டாள் போலும்.

பாடல் 2:

வண்டுலவு கொன்றை வளர் புன்சடையானே என்கின்றாளால்

விண்டு அலர்ந்து நாறுவதோர் வெள்ளெருக்க நாண்மலர் உண்டு என்கின்றாளால்

உண்டு அயலே தோன்றுவதொரு உத்தரியப் பட்டு உடையன் என்கின்றாளால்

கண்டயலே தோன்றும் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ

விளக்கம்:

புன்சடை=பொன் போன்று செம்பட்டை நிறத்தில் உள்ள சடை. கண்டல்=நீர்முள்ளி எனப்படும் கடற்கரையில் வளரும் செடி; உத்தரியம்=ஆண்கள் அணியும் மேலாடை: விண்டு அலர்ந்து=இதழ் விரிந்து: நாண்மலர்=அன்று காலையில் பூத்த மலர்: சென்ற பாடலில் அவனது அங்கங்களை விவரித்த அப்பர் நாயகி இந்த பாடலில், சிவபிரானது அங்கங்களை அணி செய்யும் பொருட்களை கூறுகின்றாள்.

பொழிப்புரை

வண்டுகள் சூழ்ந்திருக்கும் கொன்றை மலர்களை அணிந்து செம்பட்டை நிறத்தில் பொன் போன்று காணப்படும் சடையை உடையவனே என்றும், இதழ்கள் விரிந்து நறுமணம் வீசும் புதியதாக அன்று பூத்த வெள்ளெருக்க மலர்கள் அந்த சடையில் உள்ளன என்றும், சிவபிரானது தோள் மேல் உத்தரியமாக பட்டாடை உள்ளது என்றும் பிதற்றிக் கொண்டு இருக்கும் எனது மகள், கடற்கரையில் நீர்முள்ளிகள் காணப்படும் கழிப்பாலைத் தலத்தில் உறையும் பெருமானை, கண்டாள் போலும்.

பாடல் 3:

பிறந்து இளைய திங்கள் எம் பெம்மான் முடி மேலது என்கின்றாளால்

நிறம் கிளரும் குங்குமத்தின் மேனி அவன் நிறமே என்கின்றாளால்

மறம் கிளர் வேற்கண்ணாள் மணிசேர் மிடற்றவனே என்கின்றாளால்

கறங்கு ஓதம் மல்கும் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ

விளக்கம்:

பிறந்திளைய திங்கள்=தேய்ந்து அழிந்த நிலையில் சரணடைந்த சந்திரனின் தேய்ந்து கொண்டிருந்த நிலை மாறி, வளரும் நிலைக்கு மாறிய சந்திரனின் பிறை. கறங்கும்=சுழலும்: கறங்கு ஓதம்=சுழன்று வீசும் அலைகளால் இடைவிடாது ஒலிக்கும் கடல். மறம்=வீரம்: கிளர்=வெளிப்படுத்தும்: பொதுவாக குங்குமம் என்றவுடன் பெண்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளும் குங்குமம் தான் நினைவுக்கு வரும். ஆனால் இங்கே அப்பர் நாயகிக்கு, குங்குமம் என்றதும், சிவபிரானின் மேனி நிறம் தான் நினைவுக்கு வருகின்றது போலும். இந்த நிலை, அப்பர் நாயகி சிவபிரான் மீது கொண்டுள்ள காதலின் தீவிரத்தை நமக்கு உணர்த்துகின்றது.

பொழிப்புரை

எம்பெருமானது முடியின் மேல் உள்ளது இளைய திங்கள் என்றும், எம்பெருமானின் மேனி நிறம் குங்குமத்தின் நிறத்தை ஒத்தது என்றும், வீரத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய பார்வதி தேவியை உடலில் கொண்டவனே என்றும், நீல மணியின் நிறத்தை கழுத்தில் உடையவனே என்றும் என் மகள் எப்போதும் பிதற்றிக் கொண்டு இருக்கின்றாள். சுழன்று சுழன்று அடித்து இடைவிடாது ஓசை எழுப்பும் அலைகள் மலிந்த கடலின் அருகில் உள்ள கழிப்பாலைத் தலத்தில் உறையும் பெருமானை, எனது மகள் கண்டாள் போலும்.

பாடல் 4:

இரும்பார்ந்த சூலத்தன் ஏந்தி ஓர் வெண்மழுவன் என்கின்றாளால்

சுரும்பார் மலர்க் கொன்றைச் சுண்ணவெண்ணீற்றவனே என்கின்றாளால்

பெரும்பாலன் ஆகியொர் பிஞ்ஞக வேடத்தன் என்கின்றாளால்

கரும்பானல் பூக்கும் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ

விளக்கம்:

இரும்பார்ந்த=இரும்பினால் செய்யப்பட்ட: கரும்பானல்=கருங்குவளை மலர்கள்: பெரும் பாலன்=மனதினை கொள்ளை கொள்ளும் அழகினை உடைய பாலகன் உருவம்.

பொழிப்புரை

இரும்பினால் செய்யப்பட்ட சூலத்தினையும், வெண்மழுவையும் ஏந்தியவன் என்றும், வண்டுகளால் சூழப்பட்ட கொன்றை மாலையை அணிந்தவனே என்றும், திருநீற்றை அணிந்தவனே என்றும், தாருகவனத்து பெண்களின் மனதினை கொள்ளை கொண்ட இளமையான தோற்றத்தை உடையவனே என்றும், பின்னப்பட்ட சடையுடனும் தோன்றியவனே என்றும், என் மகள் ஓயாது கூவிக் கொண்டே இருக்கின்றாள். அவள் கருங்குவளை மலர்கள் பூக்கும் கழிப்பாலைத் தலத்தில் உறையும் பெருமானை கண்டாள் போலும்.

பாடல் 5:

பழியிலான் புகழுடையான் பால் நீற்றன் ஆனேற்றன் என்கின்றாளால்

விழி உலாம் பெரும் தடங்கண் இரண்டல்லமூன்றளவே என்கின்றாளால்

சுழியுலாம் வரு கங்கை தோய்ந்த சடையவனே என்கின்றாளால்

கழியுலாம் சூழ்ந்த கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ

விளக்கம்:

கழி=உப்பங்கழி: தடம்=அகன்ற: பால் நீற்றன்=பால் போன்று வெண்மையான திருநீற்றினை அணிந்தவன்: ஏற்பது இகழ்ச்சி என்பது ஆன்றோர் வாக்கு. தாருகவனத்து கோலத்தை முந்தைய பாடல் குறிப்பிட்ட அப்பர் நாயகி, தாருகவனம் என்றவுடன் அனைவருக்கும் சிவபெருமான் பிச்சைப் பெருமானாக சென்ற கோலம் நினைவுக்கு வரும் என்பதால், அவ்வாறு பிச்சை ஏற்றதால் பழி ஒன்றினையும் பெறாத பெருமான் என்பதை முதலில் தெளிவு படுத்திவிட்டு, மேலே தான் பெருமானைக் கண்ட கோலத்தினை இங்கே கூறுகின்றாள்.

பொழிப்புரை

பழி ஏதும் இல்லாதவன் என்றும், மிகுந்த புகழ் உடையவன் என்றும், பால் போன்ற வெண்மையான திருநீற்றை அணிந்தவன் என்றும், எருதினை வாகனமாகக் கொண்டவன் என்றும், மற்றவர்கள் போல் இரண்டு விழிகள் அல்லாமல், நீண்டு அகன்ற மூன்று விழிகளைக் கொண்டவன் என்றும், நீர்ச் சுழிகளுடன் பரந்து மிகவும் வேகமாக இறங்கி வந்த கங்கை நீற்றினை சடையில் தரித்தவனே என்றும் எப்போதும் சிவபெருமானின் அடையாளங்களையே சொல்லிக் கொண்டு இருக்கின்றாள். உப்பங்கழிகள் சூழ்ந்த கழிப்பாலைத் தலத்தில் உறையும் பெருமானை, அவள் கண்டாள் போலும்.

பாடல் 6:

பண்ணார்ந்த வீணை பயின்ற விரலவனே என்கின்றாளால்

எண்ணார் புரமெரித்த எந்தை பெருமானே என்கின்றாளால்

பண்ணார் முழவதிரப் பாடலொடு ஆடலனே என்கின்றாளால்

கண்ணார் பூஞ்சோலைக் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ

விளக்கம்:

எண்ணார்=நினையாதவர்கள்: முதலில் சிவதன்மத்தில் ஈடுபட்டு சிவபெருமானை வணங்கி வழிபட்டு நன்னெறியில் வாழ்ந்து வந்த திருபுரத்து அரக்கர்கள், பின்னர் சிவனை மறந்து, சிவதன்மத்தை மறந்து, அந்நாள் வரை செய்து வந்த நியமங்களை நிறுத்தினார்கள். மேலும் தாங்கள் கடைப்பிடித்த நன்னெறிகளிலிருந்து வழுவி மற்றவர்களுக்கு இடையூறு விளைவித்தனர். அதன் பின்னர் தான் சிவபெருமான் அவர்களுடன் போருக்குச் சென்றார். அதனால் தான் எண்ணாத அரக்கர்கள் என்று இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை

பண்கள் நிறைந்த ஒலியினை எழுப்பும் வீணையைப் பயிலும் விரல்களை உடையவனே என்றும், நல்ல வாழ்க்கை முறைகளை மறந்து அனைவருக்கும் தொல்லை கொடுத்த திரிபுரத்து அரக்கர்கள் மூவரது பறக்கும் கோட்டையினை எரித்தவனே என்றும், பண்களுக்கு ஏற்ப முழவு எனப்படும் தோற்கருவி வாத்தியம் இயங்க, பாடிக்கொண்டே கூத்தை நிகழ்த்தும் திறமை உடையவனே என்றும் எனது மகள் எப்போதும் சொல்லிக் கொண்டே இருக்கின்றாள். கண்களுக்கு நிறைவைத் தரும் பூஞ்சோலைகள் நிறைந்த கழிப்பாலைத் தலத்தில் உறையும் பெருமானை, எனது மகள் கண்டாள் போலும்.

பாடல் 7:

முதிரும் சடைமுடி மேல் மூழ்கும் இளநாகம் என்கின்றாளால்

அது கண்டு அதனருகே தோன்றும் இளமதியம் என்கின்றாளால்

சதுர் வெண்பளிங்குக் குழைக் காதில் மின்னுடுமே என்கின்றாளால்

கதிர் முத்தம் சிந்தும் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ

விளக்கம்:

இளநாகம்=அடிக்கடி தனது மேல் தோலை (சட்டை) உரிப்பதால் திரை, நரை ஏதும் இன்றி இளமையான தோலுடன் பாம்புகள் காணப்படும் என்பதால் இளநாகம் என்று கூறப்பட்டுள்ளது. கங்கை நதியினையே மறைத்து தேக்கி வைக்கும் அளவுக்கு அடர்ந்த சடை என்பதால், அந்த சடையில் பாம்பும் மறைந்து விடுகின்றது. எனவே தான் மூழ்கும் இளநாகம் என்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. இயல்பாகவே பாம்பினைக் கண்டு அச்சம் கொள்ளும் சந்திரன், சடையில் பாம்பு மூழ்கி கண்ணுக்கு புலப்படாததால், சந்திரன் பயம் இல்லாமல் சடையில் உள்ளது என்று நயமாக கூறப்பட்டுள்ளது. சதுர்=வேலைப்பாடு மிகுந்த

பொழிப்புரை

முதிர்ந்த சடை முடியில் இளநாகம் மூழ்கி விட்டதால் புலப்படவில்லை என்றும், நாகம் கண்ணுக்குத் தெரியாத காரணத்தால் அச்சம் ஏதும் இன்றி சடையில் சந்திரன் இருக்கின்றது என்றும், வேலைப்பாடு மிகுந்த பளிங்கு போன்று வெண்மையான குழை காதில் மின்னுகின்றது என்றும் என் மகள் வாயிலிருந்து சொற்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஒளி வீசுகின்ற முத்துக்களைக் கரையில் கொண்டு வந்து சேர்க்கும் கடல் அலைகள் மிகுந்த கழிப்பாலைத் தலத்தில் உறையும் பெருமானை, எனது மகள் கண்டாள் போலும்.

பாடல் 8:

ஓரோதம் ஓதி உலகம் பலி திரிவான் என்கின்றாளால்

நீரோதம் ஏற நிமிர்புன் சடையானே என்கின்றாளால்

பாரோத மேனிப் பவளம் அவன் நிறமே என்கின்றாளால்

காரோதம் மல்கும் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ

விளக்கம்:

ஓதம்=பாடம், கடல்:

பொழிப்புரை

ஓர்ந்து கொள்ளத்தக்க பாடங்கள் உடைய வேதங்களை ஓதிக்கொண்டு, உலகெல்லாம் பலி ஏற்றவனே என்றும், கடல் போன்று பரந்த கங்கை நதியை ஏற்கும் அளவுக்கு உயர்ந்த சடையினை உடையவனே என்றும், பொன் போன்று மிளிரும் சடையை உடையவனே என்றும், உலகினை நான்கு புறங்களிலும் சூழ்ந்து காணப்படும் கடலில் விளையும் பவளத்தின் நிறத்தை உடையவனே என்றும் எனது மகள் ஓயாது சொல்லிக்கொண்டு இருக்கின்றாள். கருமை நிறம் கொண்ட கடலின் அருகே உள்ள கழிப்பாலைத் தலத்தில் உறையும் பெருமானை, எனது மகள் கண்டாள் போலும்.

பாடல் 9:

வானுலாம் திங்கள் வளர்புன் சடையானே என்கின்றாளால்

ஊனுலாம் வெண்தலை கொண்டு ஊரூர் பலி திரிவான் என்கின்றாளால்

தேனுலாம் கொன்றை திளைக்கும் திருமார்பன் என்கின்றாளால்

கானுலாம் சூழ்ந்த கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ

விளக்கம்:

கான்=காடுகள்: கையில் ஏந்திய பிரம கபாலம் உலர்ந்ததால் வெண்மை நிறத்துடன் காணப்பட்டாலும், புலால் நாற்றம் வீசுவதால் ஊனுலாம் என்று இங்கே குறிப்பிடப் படுகின்றது.

பொழிப்புரை

வானத்தில் உலாவும் சந்திரனைத் தனது பொன் போன்று மிளிரும் சடையில் ஏற்றவனே என்றும், உலர்ந்து வெண்மை நிறத்துடன் காணப்பட்டாலும் புலால் நாற்றம் வீசும் பிரம கபாலத்தை ஏந்தி பலி ஏற்பதற்காக உலகெல்லாம் திரிந்தவனே என்றும், தேன் உண்ணும் வண்டினங்கள் சூழ்ந்த கொன்றைப் பூக்கள் சிறப்புடன் விளங்கும் மார்பினை உடையவனே என்றும், எனது மகள் பிதற்றிக்கொண்டு இருக்கின்றாள். காடுகள் சூழ்ந்து நீர்வளம் நிறைந்த கழிப்பாலைத் தலத்தில் உறையும் பெருமானை, எனது மகள் கண்டாள் போலும்.

பாடல் 10:

அடர்ப்பரிய இராவணனை அருவரைக் கீழ் அடர்த்தவனே என்கின்றாளால்

சுடர்ப் பெரிய திருமேனிச் சுண்ண வெண்ணீற்றவனே என்கின்றாளால்

மடல் பெரிய ஆலின் கீழ் அறம் நால்வர்க்கு அன்று உரைத்தான் என்கின்றாளால்

கடல் கருவி சூழ்ந்த கழிப்பாலைச் சேர்வானைக்கண்டாள் கொல்லோ

விளக்கம்:

அடர்த்தல்=வெல்லுதல்: கருவி=தொகுதி: கடற்கருவி=கடலின் பகுதியாகிய உப்பங்கழிகள்

பொழிப்புரை

எவராலும் வெல்லமுடியாத வல்லமை படைத்த அரக்கன் இராவணனை, மலையின் கீழ் இடுக்குண்டு நசுங்கும் நிலைக்குத் தள்ளியவனே என்றும், சுடர் விட்டு பிரகாசிக்கும் பெரிய திருமேனியைக் கொண்டவனே என்றும், திருமேனியில் வெண்ணீறு பூசியவனே என்றும், பெரிய இலைகளைக் கொண்ட கல்லால மரத்தின் கீழே அமர்ந்து சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் அறம் உரைத்தவனே என்றும் எனது மகள் இடைவிடாது மொழிகின்றாள். கடலின் பகுதியாகிய உப்பங்கழிகள் நிறைந்த கழிப்பாலைத் தலத்தில் உறையும் பெருமானை, எனது மகள் கண்டாள் போலும்.

முடிவுரை:

தனது மகள் இடைவிடாது கூறிய சொற்களைக் கேட்ட தாய், தனது மகள் சிவபிரான் பேரில் தீராத காதல் கொண்டிருப்பதை உணர்கின்றாள். அறியா வயது சிறுமி என்பதால், தனது மகளுக்கு, தான் கொண்டுள்ள காதல் நிறைவேறுமா அல்லவா என்பது புரியாத நிலையில், பித்துப் பிடித்தவள் போல் எப்போதும் சிவபிரானின் பெருமையையும் அவனது புகழ்ச் செயல்களையும், அவனது அடையாளங்களையும் பிதற்றிக் கொண்டு இருக்கும் மகளின் நிலையை எண்ணி, அவள் மீது இரக்கம் கொண்டு, தனது மகள் பற்றித் தான் கொண்டுள்ள கவலையை உணர்த்தும் அருமையான பாடல்கள் கொண்ட பதிகம்.

அகத்துறைப் பாடலாக சிவபெருமான் மீது காதல் கொண்டுள்ள ஒரு பெண்ணின் செய்கைகளைச் சித்தரிக்கும் பதிகமாக இருந்தாலும், இந்த பதிகத்தின் மீது நமக்கு உணர்த்தப் படும் கருத்து யாதெனின், இவ்வாறு சிவபிரானின் நாமத்தையும் புகழினையும் இடைவிடாது சொல்லிக் கொண்டு இருந்தால், நமக்கு இறைவனின் அருள் கிடைக்கும் என்பதாகும். நாம் சிவபிரானின் திருநாமத்தை இடைவிடாது பிதற்றிக் கொண்டு, கண்களிலிருந்து நீர் பொழியுமாறு, அவனை வாயால் வாழ்த்தி, மனத்தினால் நினைத்து, பல காலமும் அவனது உருவத்தைத் தியானிக்க வேண்டும் என்று கூறும் மணிவாசகரின் பாடல் நமக்கு நினைவுக்கு வருகின்றது (கோயில் திருப்பதிகம், கடைப் பாடல்)

நல்காது ஒழியான் நமக்கு என்று நாமம் பிதற்றி நயன நீர் 

மல்கா வாழ்த்தா வாய் குழறா வணங்கா மனத்தால் நினைந்து உருகி

பல்கால் உன்னைப் பாவித்துப் பரவிப் பொன்னம்பலம்என்றே

ஒல்கா நிற்கும் உயிர்க்கு இரங்கி அருளாய் என்னை உடையானே

தொகுப்பு: என். வெங்கடேஸ்வரன்

damalvenkateswaran@gmail.com

98416 97196 & 044 24811300

மெய்யெலாம் வெண்ணீறு

பதிக எண்: 4.05            திருவாரூர்                   பண்: காந்தாரம்

முன்னுரை:

நாம் சொல்ல நினைக்கும் கருத்தினை, ஒரு பழமொழியை உதாரணமாக உணர்த்திச் சொன்னால், கேட்பவர் மனதினில் நன்றாக பதியும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இதனால் தான் திருக்குறள், நாலடியார் போன்ற நூல்களில் பழமொழிகள் கையாளப் பட்டுள்ளன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய பழமொழி நானூறு என்ற நூலின் அனைத்துப் பாடல்களும், ஒரு பழமொழியை உள்ளடக்கி உள்ளது. இந்த பாணியை பின்பற்றி அப்பர் பெருமானும் பழமொழிகளை பயன்படுத்தி ஒரு பதிகத்தை அமைத்துள்ளார். இந்தப் பதிகம் பழமொழிப் பதிகம் என்றே அழைக்கப்படுகின்றது.

திருவாரூர் வந்தடைந்த அப்பர் பிரான், கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி என்ற திருத் தாண்டகம் அருளிய பின்னர், திருவாரூர்ப் பெருமானைக் காண்பதற்கு தான் மிகவும் ஆர்வமாக இருந்ததை, காண்டாலே கருத்தாய் என்ற பதிகம் மூலம் உணர்த்துகின்றார். அதன் பின்னர் தேவாசிரியன் மண்டபத்தை அடைந்த அப்பர் பிரான், அங்கே குழுமியிருந்த அடியார்களில், பல இளைஞர்களைக் கண்டார் போலும்: அவருக்கு உடனே தனது இளமைக் காலத்தில், தான் சமண சமயம் சார்ந்து காலத்தை வீணே கழித்தது நினைவுக்கு வந்தது போலும். பிறப்பால் சைவ சமயத்தைச் சார்ந்திருந்த தான், தானே வலிய வந்து சமண சமயம் சார்ந்த தவற்றினுக்கு வருந்தி, அந்த வருத்தத்தை பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் தெரிவிக்கின்றார். தான் செய்த அந்த தவறு மிகவும் அறிவீனமான செயல் என்பதை ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழியை குறிப்பிட்டு உணர்த்துகின்றார். முதல் ஒன்பது பாடல்களில் சமணர்கள் பின்பற்றிய பல பழக்க வழக்கங்கள் கூறப்பட்டுள்ளன. மிகவும் மனம் வருந்திய நிலையில் இந்த பதிகத்தினை அப்பர் பிரான் பாடினார் என்று சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறுகின்றார். தேவாரப் பதிகங்களில் காணப்படும் சொற்றொடர்களை தனது பெரிய புராணப் பாடல்களில் பல இடங்களில் சேக்கிழார் பெருமான் கையாண்டுள்ளார். இந்த பெரிய புராணப் பாடலின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அடிகள், பழமொழிப் பதிகத்தின் முதல் பாடலில் காணப்படும் கடை இரண்டு அடிகள் ஆகும். ஒரு பதிகத்தின் இரண்டு அடிகளை, முழுவதும் பயன்படுத்தி, பதிகத்தின் கருத்தினை சேக்கிழார் பெருமான் சொல்வது இந்த ஒரு பாடலில் மட்டும் தான். இதிலிருந்து இந்த பதிகம் எந்த அளவுக்கு சேக்கிழார் பெருமானின் மனத்தினை கவர்ந்து இருந்தது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். செய்ய மாமணி=சிவந்த மணிகள்; கொய்=மலர் அரும்புகள்; கையறவு=மிகுந்த துன்பம்: எய்தரிய=அடைதற்கு அரிய:

       செய்ய மாமணி ஒளிசூழ் திருமுன்றின் முன் தேவாசிரியன் சார்ந்து

       கொய்யுலாம் மலர்ச் சோலைக் குயில் கூவ மயில்ஆலும் ஆரூராரைக்

       கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்கக் காய் கவர்ந்த கள்வனேன் என்று

       எய்தரிய கையறவாம் திருப்பதிகம் அருள் செய்து அங்கு இருந்தார் அன்றே

இந்தப் பதிகம் பாடிய பின்னர், திருவாரூர் திருவீதிகளில் உழவாரப் பணி செய்ய புறப்பட்ட அப்பர் பெருமானின் கோலத்தை மிகவும் அழகாக, அடுத்த பெரிய புராணப் பாடலில் சேக்கிழார் கூறுகின்றார். உழவாரப் படை இல்லாத அப்பர் பெருமானை எவரும் கண்டதில்லை என்பதால், உழவாரப் படையும் தாமும் ஆகி, என்று சேக்கிழார் கூறுகின்றார்.

        மார்பாரப் பொழி கண்ணீர் மழை வாரும் திருவடிவும்மதுர வாக்கில்

       சேர்வாரும் திருவாயில் தீந்தமிழின் மாலைகளும் செம்பொன் தாளே

       சார்வான திருமனமும் உழவாரத் தனிப்படையும் தாமும் ஆகிப்

       பார்வாழத் திருவீதிப் பணிசெய்து பணிந்து ஏத்திப்பரவிச் செல்வார்

கனி இருக்க காய் கவர்தல், முயல் விட்டு காக்கைப் பின் போதல், அறம் இருக்க மறம் விலைக்கு கொள்ளுதல், பனி நீரால் பாவை செய்தல், ஏதன் போருக்கு ஆதனா அகப்படுதல், இருட்டறையில் மலடு கறந்து எய்த்தல், விளக்கு இருக்க மின்மினித் காய்தல், பாழூரில் பயிக்கம்புக்கு எய்த்தல், தவம் இருக்க அவம் செய்தல், கரும்பு இருக்க இடும்பு கடித்தல் என்பன இந்த பதிகத்தில் காணப்படும் பழமொழிகள்.

பாடல் 1:

   மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியான்தாள் தொழாதே

       உய்யலாம் என்று எண்ணி உறி தூக்கி உழி தந்து என்உள்ளம் விட்டுக்

       கொய்யுலா மலர்ச் சோலைக் குயில் கூவ மயில் ஆலும் ஆரூரரைக்

       கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்கக் காய்கவர்ந்த கள்வனேனே

விளக்கம்:

சண்ணித்தல்=பூசுதல்; உறி தூக்கி உழி தந்து=நீர் உடைய சிறிய குண்டிகைகளை, சிறிய உறியில் வைத்துத் தூக்கித் திரிதல் சமணர்களின் வழக்கம். உழி தருதல்=திரிதல்; காய் கவர்தலை சமண சமயத்தில் சார்ந்ததற்கும், கனியினை சைவ சமயத்திற்கும் அப்பர் பிரான் ஒப்பிடுகின்றார். இந்த பாடல் நமக்கு, இனிய உளவாக இன்னது கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று என்னும் திருக்குறளை நினைவூட்டும்.

வெண்ணீறு சண்ணித்த மேனியான் என்று சுந்தரரும் தனது திருவதிகைப் பதிகத்தின் (7.38) ஆறாவது பாடலில் குறிப்பிடுகின்றார். மைம்மான=கரிய நிறம் கொண்ட; வேத விதி=வேத நெறிமுறைகள்;

     மைம்மான மணிநீலகண்டத்து எம்பெருமான் வல்ஏனக்கொம்பு அணிந்த மாதவனை வானோர்

    தம்மானைத் தலைமகனைத் தண்மதியும் பாம்பும் தடுமாறும் சடையானைத் தாழ்வரைக்கை வென்ற

    வெம்மான மதகரியின் உரியானை வேத விதியானை வெண்ணீறு சண்ணித்த மேனி

    எம்மானை எறிகெடில வடவீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன்  போலியானே

மணிவாசகர் அனைத்து இடங்களுக்கும் சென்று உலவும் காற்றினை உழிதரு கால் என்று குறிப்பிடும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. கால்=காற்று; இழிதரு காலம்=அழிந்து போகும் காலம்; ஐந்து பூதங்களும் அழிந்து போகும் காலத்தையும் கடந்து (ஊழிக் காலத்தையும் கடந்த பின்னர்) வாழ்கின்ற பெருமான் என்று சிவபிரானை மணிவாசகர் இங்கே குறிப்பிடுகின்றார். ஐந்த பூதங்களைக் காக்கும் பெருமான், தனது வல்வினைகளை கழித்துத் தன்னையும் காக்கவேண்டும் என்று இங்கே வேண்டுகின்றார்.

       உழிதரு காலும் கனலும் புனலொடு மண்ணும்விண்ணும்

       இழிதரு காலம் எக்காலம் வருவது வந்ததற்பின் 

       உழிதரு காலத்த உன்னடியேன் செய்த வல்வினையைக்

       கழிதரு காலமுமாய் அவை காத்து எம்மைக் காப்பவனே

பொழிப்புரை:

உடல் முழுதும் திருநீறு பூசிய சிவபெருமானின் தாள் தொழாமல் உய்ந்து விடலாம் என்று எண்ணி, சமண சமயத்தின் கொள்கைகளில் மனதினைப் பறி கொடுத்து, சமண சமயத்தைச் சார்ந்து நீர்க் குண்டிகைகள் தாங்கிய உறியினைத் தாங்கிக் கொண்டு திரிந்தேன்: மலர்களை கொய்வதற்காக அடியார்கள் உலவும் சோலைகளில், குயில்கள் கூவுகின்றன, மயில்கள் நடனம் ஆடுகின்றன; இத்தகைய சோலைகள் நிறைந்த திருவாரூரில் உறையும் இறைவனை, எனது கைகளால் தொழாமல், இனிய சுவை உடைய கனியினை உண்ணாமல் காயினை விரும்பிய கள்வனாக, சமண சமயத்தைச் சார்ந்து எனது காலத்தை வீணாக கழித்துவிட்டேன்.

பாடல் 2:

        என்பு இருத்தி நரம்பு தோல் புகப் பெய்திட்டு என்னையோர் உருவம் ஆக்கி

       இன்பு இருத்தி முன்பு இருந்த வினை தீர்த்திட்டு என்னுள்ளம் கோயிலாக்கி

       அன்பு இருத்தி அடியேனைக் கூழாட்கொண்டு அருள் செய்த ஆரூரர் தம்

       முன்பு இருக்கும் விதியின்றி முயல் விட்டுக்காக்கைப் பின் போனவாறே

விளக்கம்:

புகப் பெய்திட்டு=உடலுக்குள் உயிரினை புகுத்தி; கூழைமை=கடமை; கூழாட் கொண்டு=கடமை செய்யும் ஆளாக ஆட்கொண்டு;

நமது உயிர் எவ்வாறு மனித உடலுடன் பொருத்தப் படுகின்றது என்று அப்பர் பிரான் கூறுவது நமக்கு அவரது மறைக்காடு பதிகத்தின் ஒரு பாடலை (4.33.4.) நினைவூட்டுகின்றது இந்த பாடலில் உடலினை வீட்டிற்கு ஒப்பிட்டு அப்பர் பிரான் கூறுவது ரசிக்கத்தக்கது. சாலோகம்=ஜன்னல்: ஒரு வீடு கட்டுவதில் உள்ள படிப்படியான நிலைகள் இங்கே கொடுக்கப்பட்டு, உடலுடன் ஒப்பிடப்பட்டுள்ளன. கடைக்கால் எடுத்தல் (கால் கொடுத்து), அதன் மேல் கட்டடம் எழுப்புதல் (கை ஏற்றி), கட்டைகளை அடுக்குதல் (கழி நிறைத்து), கூரை வேய்தல், சுவர் எடுத்தல், வாசல் அமைத்தல், ஜன்னல்கள் அமைத்தல் ஆகிய நிலைகள், கால்கள் கொடுத்தல், கைகள் பொருத்துதல், எலும்புக் கழிகள் நிறைத்தல், தசைகளைக் கொடுத்து எலும்புகளைப் பிணைதல், உதிர நீரால் சுவர் எடுத்தல், இரண்டு வாசல்கள் (முன் வாசல்-வாய், பின் வாசல்-ஆசனவாய்) அமைத்தல், ஏழு ஜன்னல்கள் (இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு நாசித் துவாரங்கள், கருவாய்) பொருத்துதல் என்ற நிலைகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு உடலாகிய வீடு படைத்த பெருமான், அந்த வீட்டினில் உறைவதற்கு உயிரினை வைத்தார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். மால் கொடுத்து என்று உலகத்தினையும் உலகில் உள்ள பொருட்களையும் அந்த உயிரும் உடலும் அனுபவிக்க அளித்த இறைவனின் செய்கை இங்கே குறிப்பிடப்படுகின்றது.

         கால் கொடுத்து இருகை ஏற்றி கழி நிரைத்துஇறைச்சி மேய்ந்து

        தோல் படுத்து உதிர நீரால் சுவர் எடுத்துஇரண்டு வாசல்

       ஏவுடைத்தா அமைத்து அங்கு ஏழு சாலோகம்பண்ணி

       மால் கொடுத்து ஆவி வைத்தார் மாமறைக்காடனாரே

இவ்வாறு உயிரினை மனித உடலுடன் பொருத்திய இறைவனுக்கு நாம் அடிமையாகத் தொண்டு செய்வது தானே நமது கடமை. இந்த கடமையை நிறைவேற்றாமல், சமண சமயம் சார்ந்தது தனது தவறு என்று ஒப்புக்கொள்ளும் அப்பர் பிரான், ஆரூர்ப் பிரானின் முன்பு இருந்து அவனுக்குத் தொண்டு செய்யும் விதி இல்லாமையால் தான் சமண சமயம் சார்ந்ததாக கூறுகின்றார். இதே கருத்து தான், சேக்கிழாரின் பெரிய புராணப் பாடலிலும் (மருள் நீக்கியார் சிறு வயதில் சமண சமயம் சார்ந்ததைக் குறிக்கும் பாடல்) காணப் படுகின்றது சிவபிரானின் அருள் இல்லாத காரணத்தால் மருள் நீக்கியார் சமண சமயம் பால் ஈடுபாடு கொண்டு அங்கே சென்று சார்ந்தார் என்று கூறும் பாடல் இது. சிவபெருமானை நம்பர் என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார்.

       நில்லாத உலகியல்பு கண்டு நிலையா வாழ்க்கை 

       அல்லேன் என்று அறத் துறந்து சமயங்கள் ஆனவற்றின்

       நல்லாறு தெரிந்து உணர நம்பர் அருளாமையினால்

       கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார்

இந்த பாடலில் தம்மை அடிமையாக ஏற்றுக்கொண்ட சிவபிரான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவது, நமக்கு அவரது தில்லைப் பதிகத்தின் ஒரு பாடலை (4.81.5) நினைவூட்டும். கிடைத்தற்கரிய மனிதப் பிறவி பெற்றுள்ள நாம், நமது பிறவியை, இறைவனுக்கு அடிமையாக ஆட்படுவதன் மூலம் தான், மதிக்க முடியும் என்று கூறுகின்றார். இவ்வாறு இறைவனுக்கு ஆட்படுவது நமது கடமை என்று உணர்த்துகின்றார். கூழைமை=கடமை.

       வாய்த்தது நம் தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்

       பார்த்தற்குப் பாசுபதம் அருள் செய்தவன் பத்தருள்ளீர்

       கோத்தன்று முப்புரம் தீ வளைத்தான் தில்லை அம்பலத்துக்

       கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பதன்றோ நம் தம் கூழைமையே

சைவ சமயம் முயலுக்கும் சமண சமயம் காக்கைக்கும் ஒப்பிடப்பட்டுள்ளது. காக்கை கரிய நிறம் கொண்டது. கரிய நிறம் அறியாமைக்கு ஒப்பாக சொல்லப்படுவது வழக்கம், மெய்ப்பொருளாகிய சிவபெருமானை உணர்ந்தது அவரை வழிபடுவதைத் தவிர்த்து அறியாமையில் மூழ்கடிக்கும் சமணசமயம், காக்கையுடன் ஒப்பிடப்பட்டுள்ளது பொருத்தமே. சேக்கிழார், நாவுக்கரசர் சமண சமயம் சார்ந்ததன் காரணம், சிவனருள் கூடாததால் என்று கூறுவது போல், ஆரூரர் தம் முன்பு இருக்கும் விதியில்லாததால், சமண சமயம் சார்ந்ததாக அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். தரை வழிச் செல்லும் முயலின் பின்னே செல்வது எளிது; வானில் பறக்கும் காக்கையின் பின்னே செல்வது கடினம். தனது கவலைகளுக்கு தீர்வு காணலாம் என்று கருதிய மருள்நீக்கியார், சமண சமயத்தைப் பின்பற்றிய போதும், காக்கை பின்தொடர முடியாமல் நிற்பது போன்று, தனது கவலைகளுக்குத் தீர்வு ஏதும் காணமுடியாமல் தவித்த நிலை இங்கே உணர்த்தப் பட்டுள்ளது.

பொழிப்புரை:

எலும்புகளை அடித்தளமாகக் கொண்டு, நரம்புகளையும் தோல்களையும் எலும்புடன் பொருந்துமாறு இணைத்து, எனக்கு ஒரு உருவத்தை அளித்து, இன்ப துன்பங்களை நுகரச் செய்து, முன்பு நான் செய்திருந்த வினைகளை அடியோடு போக்கி, எனது உள்ளதையே தான் உறையும் கோயிலாக மாற்றி, இறைவன் பால் எனக்கு எப்போதும் அன்பு நிலைத்து நிற்குமாறு செய்து, அடியேனை ஆட்கொண்டு சூலை நோய் தீர்த்து அருள் செய்த, ஆரூர் பெருமானை, நான் இதற்கு முன்னர் அறிந்து கொள்ளும் விதி உடையவனாக இல்லாமல், தரையில் தென்படும் முயலினை விட்டுவிட்டு, பறக்கும் காக்கையினை பிடிக்க முயலும் மூடனைப் போல், சைவ சமயத்தை விட்டு நீங்கி, சமண சமயம் சார்ந்து இருந்தேன்.

பாடல் 3:

      பெருகுவித்து என் பாவத்தைப் பண்டெலாம் குண்டர்கள் தம் சொல்லே கேட்டு

       உருகுவித்து என் உள்ளத்தின் உள்ளிருந்த கள்ளத்தைத்தள்ளிப் போக்கி

       அருகுவித்துப் பிணி காட்டி ஆட்கொண்டு பிணி தீர்த்தஆரூரர் தம்

       அருகு இருக்கும் விதியின்றி அறம் இருக்க மறம் விலைக்குக் கொண்டவாறே

விளக்கம்:

சமணர்களின் சொல்லினைக் கேட்டதால் தனது பாவத்தைப் பெருக்கிக் கொண்டதாக அப்பர் பிரான் கூறுகின்றார். பெரிய புராணத்தில், தருமசேனராக இருந்த மருள் நீக்கியார், சிவனையோ சைவ சமயத்தையோ இகழ்ந்து பேசியதாக எங்கும் குறிப்புகள் காணப்படவில்லை; சமண குருவாக இருந்து மற்ற மதத்தவர்களுடன் வாதம் செய்து தருமசேனர் வெற்றி கண்டமையால், அவரை மிகவும் உயர்வாக சமணர்கள் மதித்தனர் என்ற குறிப்பு பெரிய புராணத்தில் காணப்படுகின்றது. எனவே அவ்வாறு வாதம் செய்த நேரங்களில், அவர் சைவ சமயத்தை இகழ்ந்து பேசி இருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகின்றது. இந்த செயல்களையே அவர் இங்கே, சமணர்களின் சொல் கேட்டு தனது பாவங்களைப் பெருக்கிக் கொண்டதாக குறிப்பிடுகின்றார் என்று நாம் கொள்ளலாம்.

சமணர்கள் செய்த மந்திர தந்திரங்கள் பயன் அளிக்காத நிலையில், தனது தமக்கையார் அருகில் இருந்தால் ஏதேனும் தீர்வு சொல்லுவார் என்ற நம்பிக்கையில், அவரை அழைத்து வருவதற்காக, தருமசேனர் தனது பணியாளனை திருவதிகை அனுப்புகின்றார். சமணர்கள் உறையும் இடத்திற்குத் தனது தமக்கையார் வர மறுத்ததால், வேறு வழியின்றி, நள்ளிரவில் எவரும் அறியாதவாறு தருமசேனர் திருவதிகைக்கு புறப்படுகின்றார். இந்த நிகழ்ச்சியை குறிப்பிடும் சேக்கிழார், சிவபிரானின் அருள் கூடியதால், தருமசேனர் சமணப்பள்ளியை விட்டு நீங்கியதாக கூறுகின்றார். திலகவதியார் இருந்த சைவ நெறி, செந்நெறி என்று தருமசேனர் உணர்ந்ததும் இங்கே உணர்த்தப் படுகின்றது.

      அவ்வார்த்தை கேட்டலுமே அயர்வு எய்தி இதற்கு இனி யான்

       எவ்வாறு செய்வன் என ஈசர் அருள் கூடுதலால்

       ஒவ்வா இப்புன் சமயத்து ஒழியா இத்துயர் ஒழியச்

       செவ்வாறு சேர் திலகவதியார் தாள் சேர்வன் என

இதே செய்தி, அப்பர் பெருமானால், இந்த பாடலில், உருகுவித்து என் உள்ளத்தில் இருந்த கள்ளத்தைத் தள்ளிப் போக்கி, அருகுவித்துப் பிணி காட்டி ஆட்கொண்டு பிணி தீர்த்த ஆரூரர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அருகுவித்து=அருகாமையில் வரவழைத்து; விதியின்றி என்பதை எந்த விதமான நிபந்தனையும் இன்றி என்று பொருள் கொண்டு, விலை ஏதும் இல்லாமல் அறம் கிடைத்த போது, அதனை விட்டுவிட்டு விலை கொடுத்து பாவத்தை வாங்கிய மூடன் என்று தன்னை இழித்துக் கூறுவதாகவும் கொள்ளலாம்.

பொழிப்புரை:

முன்னாளில் சமணர்களின் சொற்களைக் கேட்டு, அவ்வழியே நடந்த நான் எனது பாவங்களைப் பெருக்கிக் கொண்டேன். ஆனால் ஆரூர்ப் பெருமான் என் மேல் கருணை கொண்டு, எனக்கு சூலை நோய் கொடுத்து, எனது உள்ளத்தை உருக்கி, எனது உள்ளத்தில் இருந்த கள்ளமான, சைவ சமய எதிர்ப்புக் கொள்கைகளை நீக்கி, என்னை அவரின் அருகே வரவழைத்து, எனது சூலை நோயினைத் தீர்த்தார். இவ்வாறு அருள் புரிந்த ஈசனின் அருகில் இருக்கும் வாய்ப்பினை இழந்து, விலையில்லாமல் அறம் கிடைத்தபோது அதனைக் கொள்ளாமல், சமண சமயத்தைச் சார்ந்ததன், மூலம் விலை கொடுத்து பாவத்தை வாங்கிய மூடனாக இருந்துவிட்டேன்.

பாடல் 4:

      குண்டனாய்த் தலை பறித்துக் குவி முலையார் நகை நாணாது உழிதர்வேனைப்

       பண்டமாப் படுத்து என்னைப் பால் தலையில் தெளித்துத் தன் பாதம் காட்டித்

       தொண்டெலாம் இசை பாடத் தூமுறுவல்அருள் செய்யும் ஆரூரரை

       பண்டெலாம் அறியாதே பனி நீரால் பாவைசெயப் பாவித்தேனே

விளக்கம்:

பால் தலையில் தெளித்து என்று சிவபிரானை நீராட்டிய பால், நீர், பஞ்சகவியம் முதலியவற்றை, தலையில் தெளித்துக் கொள்ளும் வழக்கம் இங்கே குறிப்பிடப்படுகின்றது. தினமும் சிவபூஜை செய்யும் அடியார்கள், வழிபாட்டினை முடித்த பின்னர் சிவபெருமானின் திருப்பாதங்களில் பட்ட நீரினை, பால் முதலிய திரவங்களை, மிகவும் புனிதமானாதாக கருதி, தங்களது தலையில் தெளித்துக் கொண்டு, பின்னர் அந்த திரவத்தை கொஞ்சம் அருந்துவது வழக்கம். இவ்வாறு செய்தால், நமது பாவங்கள் தீர்க்கப்படும் என்றும், நமது பிணிகள் விலகும் என்றும் நம்பிக்கை உள்ளது. அதனால் தான் திருக்கோயில்களில், இறைவனை நீராட்டிய பால், சிறிது பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது. பாவங்கள் தீர்க்கப்பட்டால் நமது உயிர் தூய்மை பெறுகின்றது அல்லவா. அதனால் தான் அப்பர் பிரான், சிவபிரான் அருளால் அவரை நீராட்டிய பால் தனது தலையில் தெளிக்கப்பட்டு, தான் புனிதம் அடைந்ததை இங்கே உணர்த்துகின்றார்.

தலை மயிரினை வலியப் பறித்துக் கொண்டு தலையை மொட்டையாக்கிக் கொள்வது சமணர்களின் வழக்கம். அவ்வாறு தானும் இருந்ததாக அப்பர் பிரான் கூறுகின்றார். பனி நீர்=குளிர்ந்த நீர். நீரினால் பொம்மை செய்ய முயலுவது, உலக இயற்கைக்கு புறம்பான செயல், நடைபெறாத செயல். அத்தகைய செயலில் மூடர்கள் தான் ஈடுபடுவார்கள். அது போல், உண்மை அறிவினைத் தராத சமண சமயம் சார்ந்து உய்வினை அடையலாம் என்று கருதி, உண்மை நெறியான சைவ சமயத்தை விட்டுத் தான் அகன்ற செயல் பயனற்றதாக இருந்தது என்று அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். நகை=எள்ளி நகையாடுதல், கேலி செய்தல்: பண்டமாப் படுத்து=ஒரு பொருளாக நினைந்து, பொருட்படுத்து: தொண்டு எலாம் = தொண்டர்கள் எல்லாம்: தன்னைப் புகழ்ந்து எவர் பாடினாலும் இன்பம் உறுவது சிவபெருமானின் இயல்பு. அந்த இயல்பு தான் இங்கே, அப்பர் பெருமானால் தொண்டெலாம் இசை பாடத் தூமுறுவல் அருள் செய்யும் ஆரூரர் என்று அப்பர் பிரானால் உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

பருத்த உடலைக் கொண்டவனாய், முடிகளை வலியப் பறித்த தலையை உடையவனாய், உடலில் உடை ஏதும் இல்லாத காரணத்தால், இள மங்கையர்களின் ஏளனச் சிரிப்புக்கு ஆளானவனாகத் திரிந்து கொண்டு இருந்தவனை, ஒரு பொருட்டாக மதித்து, அருள் புரிந்தவன் சிவபெருமான். சிவபெருமானை நீராட்டிய பால் எனது தலையில் தெளிக்கப்பட்டதால், நான் தூய்மை அடைந்தேன்; மேலும் சிவபெருமான் தனது திருப்பாதங்களைக் காட்டி எனக்கு அருள் புரிந்தான். இத்தகைய கருணை உள்ளம் கொண்ட சிவபிரான், தொண்டர்கள் தன்னைப் புகழ்ந்து இசைப் பாடல்கள் பாடும்போது மிகவும் மகிழ்ந்து புன்முறுவல் செய்வான்: இவ்வாறு கருணை உள்ளம் கொண்டு, தொண்டர்களின் செய்கையால் மகிழும் ஆரூரை, இத்தனை நாள் நான் அறிந்து கொள்ளாமல், குளிர்ந்த நீரினால் பொம்மை செய்ய முயல்பவன் போல், சமண சமயத்தைச் சார்ந்து காலத்தை வீணே கழித்து, உண்மையான அறிவுக்கு மாறான செயல்களில் ஈடுபட்டேன்.

பாடல் 5:

      துன் ஆகத்தேன் ஆகித் துர்ச்சனவர் சொல் கேட்டுத் துவர் வாய்க் கொண்டு

       என் ஆகத் திரி தந்து ஈங்கு இருகை ஏற்றிட உண்ட ஏழையேன் நான்

       பொன் ஆகத்து அடியேனைப் புகப் பெய்து பொருட்படுத்த ஆரூரரை

       என்னகத்து இருத்தாதே ஏதன் போர்க்கு ஆதனாய் அகப்பட்டேனே

விளக்கம்:

துன்னாகத்தேன் என்ற சொல்லை துன் ஆகத்தேன் என்றும் துன் நாகத்தேன் என்றும் இரண்டு விதமாக பிரித்து பொருள் கூறுவதுண்டு. துன் நாகத்தேன் என்று கொடிய பாம்பினை ஒத்தவன் என்றும் துன் ஆகத்தேன் என்று பயனின்றி பருத்த உடம்பினன் என்றும் பொருள் கூறுவதுண்டு. சமண சமயத்தில் இருந்து உடல் பருத்து இருந்தேன் என்று முந்தைய பாடலில் சொல்லி இருப்பதால், துன் ஆகத்தேன் என்று பிரித்து பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது.

துர்ச்சனவர்=தீயவர்கள்: ஜனம் என்ற வடமொழிச் சொல் சனம் என்று திரிக்கப்பட்டு, துர்ச்சனம் என்று கையாளப்பட்டுள்ளது. துவர்வாய்=துவர்ப்புச் சுவை உடைய கடுக்காயை உண்பதால் துவர் (கறை) படிந்த பற்களை உடையவர்: கடுக்காய் உண்ணுதல், இரண்டு கைகளிலும், அடுத்தவர் இடும் பிச்சையை ஏற்று உண்பதும் சமணர்கள் வழக்கம். ஆதன் என்றால் தொடர்பு ஏதும் இல்லாதவன்; பிறப்பால் சிவனாக இருந்ததால் சமணர்களோடு தொடர்பு ஏதும் இல்லாதவனாக இருந்த தான், சமணர்களிடை அகப்பட்டு, அவர்கள் மற்ற மதத்தவருடன் தொடுத்த சண்டைகளில் அகப்பட்டு தான் துன்பம் அடைந்ததாக அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.

பொழிப்புரை:

பயன் ஏதும் இல்லாத பருத்த உடலைக் கொண்டவனாகி, தீயவர்களான சமணர்கள் சொல் கேட்டு நடப்பவனாய், கடுக்காய் உண்பதால் கறை ஏறிய பற்களை உடையவனாய், இரண்டு கைகளிலும் பிச்சை ஏற்று உண்பவனாய் திரிந்து கொண்டிருந்த ஏழையனை, தனது பொன் போன்ற உடலினில் இருத்தி, என்னை குறிப்பிடத்தக்க ஒரு பொருளாக மாற்றியவர் சிவபெருமான். அத்தகைய கருணை உள்ளம் கொண்ட ஆரூர்ப் பெருமானை, வணங்கி வழிபட்டு எனது மனதினில் நிலையாக நிறுத்தாமல் இத்தனை நாட்கள், சண்டையிடும் இருவர்க்கும் எந்த விதத்திலும் தொடர்பு கொள்ளாமல் இருந்தாலும், அவர்களிடையே அகப்பட்டு துன்பம் அடையும் மூடனாக இருந்தேன்.

பாடல் 6:

        பப்போதி பவணனாய்ப் பறித்ததொரு தலையோடே திரிதர்வேனை

       ஒப்போட ஓதுவித்து என் உள்ளத்தினுள் இருந்துஅங்கு உறுதி காட்டி

       அப்போதைக்கு அப்போதும் அடியவர்கட்குஆரமுதாம் ஆரூரரை

       எப்போதும் நினையாதே இருட்டறையில் மலடுகறந்து எய்த்தவாறே

விளக்கம்:

ஐந்தாவது பாடலில், சிவபிரானை வணங்கித் தொழுது, சிவபிரானைத் தனது மனதினில் நிலையாக நிறுத்தி கொள்ளாமல் காலத்தை வீணாக கழித்ததை குறிப்பிட்டு வருந்தும், அப்பர் பிரான், சிவபிரான் தனது உள்ளத்தில் புகுந்து நின்ற கருணைச் செயலை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பவணன்=பவண நந்தி என்ற பெயர் பவணன் என்று சுருக்கப் பட்டுள்ளது. பவண நந்தி என்ற சமணத் துறவியின் பெயரைப் குறிப்பிட்டு, தான் சமணர்களில் ஒருவனாக இருந்த நிலையை குறிப்பிடுகின்றார்.

பவணநந்தி என்பது சமண மதத்தில் வழங்கப்படும் பெயர் என்பது சம்பந்தப் பெருமானின் பாடல் (3.39.6) ஒன்றும் புலனாகின்றது. அனகர்=சமணர்களின் கடவுளாகிய அருகர்; சினகர் என்றால் சமணர் என்று பொருள். பாண்டிய மன்னனின் அரசவையில் தன்னைச் சூழ்ந்துள்ள சமணர்களுக்குத் தான் எந்தவிதத்திலும் எளியவன் அல்லேன் என்று, ஆவேசத்துடன் தன்னைச் சூழ்ந்து நிற்கும் சமணர்கள் தனக்கு கெடுதல் செய்வார்களோ என்று அஞ்சிய பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியாருக்கு ஞான சம்பந்தர், அரசியாரின் பயத்தை நீக்கும் பாடல் இது.

      கனகநந்தியும் புட்பநந்தியும் பவணநந்தியும் குமணமா

       கனகநந்தியும் குனகநந்தியும் திவணநந்தியும்மொழி கொளா

       அனகநந்தியர் மது ஒழிந்து அவமே தவம் புரிவோம் எனும்

       சினகருக்கு எளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே

பப்பு=பரப்பு என்பதன் திரிபு: பரந்த சாத்திர நூல்கள்: பல இடங்களில் அலைந்து திரியும் மனதை அடக்கி, இறைவனை உணரும் அடியார்கள் என்பதை குறிக்க பப்பற வீட்டிருந்து என்று மணிவாசகர் திருவாசகம், திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் குறிப்பிடுகின்றார். பரந்த பல இடங்களிலிலும், பொருட்களிலும் அலை பாயும் மனதினை இறைவன் பற்றிய சிந்தைனையில் நிலை நிறுத்தி, பந்த பாசங்களையும் பிறவிச் சங்கிலியையும் அறுத்தெறிந்த அடியார்களும், மை தீட்டிய கண்களை உடைய மங்கையரும் பெருந்துறையில் உறையும் சிவபெருமானை வணங்குவதாக மணிவாசகர் இந்த பாடலில் கூறுகின்றார். இவ்வாறு அடியார்களாலும், மங்கையர்களாலும் வணங்கப்படும் சிவபெருமான் தான், தனது பிறவிப்பிணியை அறுத்து தன்னை ஆட்கொள்ளவேண்டும் என்று இந்த பாடலில் மணிவாசகர் வேண்டுகின்றார்.

        பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார் பந்தனை வந்து அறுத்தார் அவர் பலரும்

       மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின் வணங்குகின்றார் அணங்கின்  மணவாளா

       செப்புறு கமலங்கள் மலரும் தண்வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே

       இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

சமண மதத்தினை மலட்டுப் பசுவுக்கு அப்பர் பிரான் ஒப்பிடுகின்றார். உயிர்கள் உண்மையில் விரும்பும் முக்திப் பேற்றினைப் பெற்றுத் தராத மலட்டு மதமாக சமணமதம் இருக்கும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. வெளிச்சம் இருக்கும் இடத்தில் பால் கறந்தால், பால் வருவதும் வாராமல் நின்றதும் ஒருவனுக்குத் தெரியும்: இருள் சூழ்ந்த அறையில் பால் கறந்தால், தான் பால் கறப்பது மலட்டுப் பசுவிடமா அல்லது பால் சுரக்கும் பசுவிடமா என்பது எவ்வாறு நாம் அறிய முடியும். மேலும் மலட்டுப் பசுவிடம் பால் கறந்தால், பால் சுரக்கும் காம்புகள் வீணே இழுக்கப்படுவதால் துன்பமுறும் பசு, உதைப்பதற்காக தனது காலைத் தூக்குவதைக் கூட நம்மால் அறிய முடியாது அல்லவா. அதனால் தான் இருட்டறையில் மலட்டுப் பசுவினைக் கறந்து, தான் துன்பம் உற்றதாக இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். இருட்டு அறையில் பொருட்களை நாம் காண முடியாதது போல், மற்ற சமயங்களில் நாம் உண்மைப் பொருளை காண முடியாது என்ற கருத்தும் இன்கே உணர்த்தப்படுகின்றது.

பொழிப்புரை:

அளவினில் விரிந்த பல சாத்திர நூல்களைப் படித்தும், பயன் ஏதும் இன்றி பிறவிப்பிணியை நீக்கிக் கொள்ளாத பவண நந்தியைப் போன்ற பல சமணர்களுடன் சேர்ந்து, பலவந்தமாக முடி பறிக்கப்பட்ட தலையினை உடையவனாக நான் திரிந்து கொண்டிருந்தேன். அத்தகைய இழிந்த நிலையில் இருந்த எனக்கும் நிகரில்லாத வகையில் ஞானத்தை நல்கி, எனது உள்ளத்தில் இருந்து, பலப்பல பிறவிகளில் வேறு வேறு உடலுடன் இணையும் எனது உயிருக்கு, உறுதியான தன்மையான, வீடுபேறு அடையும் வழியைக் காட்டியவன் ஆரூர் நகரத்தில் உறையும் சிவபெருமான். இந்த பெருமான், தன்னை நினைக்கும் தனது அடியார்களுக்கு அப்போதைக்கு அப்போதே ஆரமுதமாக இனிக்கின்றான். ஆனால் இவ்வாறு அமுதமாக தித்திக்கும் பெருமானை உணர்ந்து கொள்ளாமல், அவரை நினையாமல், இந்நாள் வரை, நான் இருட்டு அறையில் மலட்டுப் பசுவிலிருந்து பால் கறக்கும் முயற்சியில் ஈடுபட்டு துன்பம் அடைந்து, பயன் ஏதும் இல்லாமல், வீணாக காலத்தைக் கழித்தேன்.

பாடல் 7:

       கதி ஒன்றும் அறியாதே கண் அழலத் தலை பறித்துக்கையில் உண்டு

       பதி ஒன்று நெடு வீதிப் பலர் காண நகை நாணாதுஉழிதர்வேற்கு

       மதி தந்த ஆரூரில் வார் தேனை வாய் மடுத்துப் பருகி உய்யும்

       விதி இன்றி மதி இலியேன் விளக்கிருக்க மின்மினி தீக் காய்ந்தவாறே

விளக்கம்:

இந்த பாடலில் சைவ சமயம் விளக்குக்கும், சமண சமயம் மின்மினிப் பூச்சிக்கும் ஒப்பிடப் படுகின்றது கதி=உயர் கதியாகிய முக்தி நிலைக்குச் செல்லும் வழி: கண் அழலுதல்=கண் எரிதல்; தலை முடிகள் ஒவ்வொன்றாக வலிய பிடுங்கப்படும் போது, ஏற்படும் வேதனை கண்களில் எரிச்சலை உண்டாகும் நிலை: மின்மினிப் பூச்சி தனது வெளிச்சத்தால் நமது கவனத்தைக் கவரும். ஆனால் அது மின்மினிப் பூச்சி என்று அறியாத குழந்தைகள் அதனைப் பிடிக்க முயற்சி செய்வார்கள். அது போன்று, தனது இளமைப் பருவத்தில் சமண சமயத்தின் கொள்கையின் உண்மை நிலை அறியாமல், தான் ஈர்க்கப்பட்டதை அப்பர் பிரான், சமண சமயத்தை மின்மினிப் பூச்சிக்கு ஒப்பிட்டு உணர்த்துகின்றார். மின்மினியின் ஒளியில், நாம் தீயினைப் பெற முடியாது; அதே போல் மற்ற சமயங்களின் கொள்கைகள் மூலம் நாம் முக்தி அடைய முடியாது என்ற கருத்து இங்கே உணரத்தப்படுகின்றது.

பொழிப்புரை:

உயிர் உய்யும் வழியாகிய சைவ சமயத்தின் மாண்புகளை அறியாமல், கண்கள் எரியுமாறு தலை முடியினை வலியப் பிடுங்கிக் கொண்டு, பல ஊர்களிலும் உள்ள பெருந்தெருக்களில் பலரும் எனது நிலையைக் கண்டு ஏளனமாகச் சிரித்த போதிலும், அதனைப் பொருட் படுத்தாது, நாணம் சிறிதும் இன்றி திரிந்தேன். உண்மையான ஞானத்தை எனக்கு அருளி, தனது கருணைத் தேனை அளித்து என்னை பருகுமாறு செய்த ஆரூர்ப் பெருமானை நினைத்து, உய்யும் வழியினை அறிந்து கொள்ளும் அறிவு இல்லாமல், விளக்கினை விட்டுவிட்டு மின்மினிப் பூச்சியில் தீக்குளிக்கும் மூடனாக இருந்தேனே.

பாடல் 8:

       பூவையாய்த் தலை பறித்துப் பொறி அற்ற சமண் நீசர் சொல்லே கேட்டுக்

       காவி சேர் கண் மடவார்க் கண்டு ஓடிக் கதவு அடைக்கும் கள்வனேன் தன்

       ஆவியைப் போகாமே தவிர்த்து என்ன ஆட்கொண்டஆரூரரைப்

       பாவியேன் அறியாதே பாழூரில் பயிக்கம் புக்குஎய்த்தவாறே

விளக்கம்:

ஆவியைப் போகாமல் தவிர்த்து=உயிர் வீணாகக் கழிவதை தடுத்து: சமணத் துறவிகள் பெண்களைக் காணுதல் தீவினை என்ற கருத்தில், பெண்களைக் கண்டால் தங்களது கதவினை மூடிக் கொள்ளும் பழக்கம் உடையவர்கள். இந்த பழக்கம் இங்கே குறிப்பிடப் படுகின்றது. காவி=குவளை மலர்: பிறர் பொருளைத் திருடி வாழும் கள்வன், அயலார் தன்னைக் கண்டால், தான் அகப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில் பிறர் தன்னை அறியாதவாறு உள்ளே புகுந்து கதவினை தாளிட்டு மறைவான். பயிக்கம்=பிச்சை

கயிலை யாத்திரை மேற்கொண்டபோது, உடல் உறுப்புகள் தேய்ந்து மேலே தனது பயணத்தைத் தொடர முடியாமல் அப்பர் பிரான் தவித்த போது, அவர் பயணம் மேலும் மேற்கொள்ளாமல் அவரைத் தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்பிய சிவபிரானின் செய்கையை, சேக்கிழார் கூறும்போது, அப்பர் பிரானின் வாயால் மேலும் பல பதிகங்கள் கேட்டு இன்புற வேண்டும் என்ற எண்ணத்தால் சிவபிரான் அவ்வாறு செய்தார் என்று கூறுகின்றார். ஆவியைப் போகாமல் காத்து என்று அப்பர் பிரானின் சொற்கள், சிவபிரான் அவரை பல இன்னல்களிலிருந்து (சூலை நோய், மற்றும் சமணர் செய்த பல வஞ்சகங்கள்) நாமெல்லாம் அவரது தீந்தமிழ் பதிகங்களைப் பெற வேண்டும் என்ற நோக்கம் தானோ என்று நினைக்கத் தோன்றுகின்றது.

பொழிப்புரை:

தலையில் உள்ள முடிகளை வலிய நீக்கி, ஒழுக்கம் இல்லாத கீழோராகிய சமணர்களின் சொல்லைக் கேட்டு, குவளை மலர் போன்ற கண்களை உடைய பெண்களைக் கண்டால் ஓடி ஒளிந்து கொண்டு கதவைச் சார்த்தி அடைத்து வாழும் கள்வனாக இருந்தேன். சூலை நோய் அடையப்பெற்று வருந்தியபோது, எனது உயிர் அந்த நோயின் கொடுமையால் நீங்காதவண்ணம் என்னைக் காத்தவர் ஆரூர்ப் பிரான் ஆவார். ஆனால் இந்த பெருமானின் பெருமையை அறிந்து கொள்ளாமல், மக்கள் இல்லாத ஊரில் பிச்சை எடுத்து இளைத்து வருத்தப்படும் மூடனாக, இந்நாள் வரை சமண சமயம் சார்ந்து இருந்தேனே

பாடல் 9:

      ஒட்டாத வாளவுணர் புரம் மூன்றும் ஓர் அம்பின் வாயின் வீழக்

       கட்டானைக் காமனையும் காலனையும்கண்ணினொடு காலின் வீழ

       அட்டானை ஆரூரில் அம்மானை ஆவச் செற்றக் குரோதம்

       தட்டானைச் சாராதே தவம் இருக்க அவம் செய்து தருக்கினேனே

விளக்கம்:

ஒட்டாத=வேறுபட்ட, மாறுபட்ட, சிவநெறியிலிருந்து மாறுபட்ட திருபுரத்து அரக்கர்கள்: தருக்குதல்=பெருமிதம் கொண்டு திரிதல்: தட்டான்=தட்டுப் படாதவன். தவத்தை விடுத்து அவத்தைச் செய்தேன் என்று அப்பர் பிரான் கூறுவது நமக்கு மணிவாசகரின் திருச்சதகப் பாடல் ஒன்றினை நினைவூட்டும்.

       தவமே புரிந்திலன் தண்மலர் இட்டு முட்டாது இறைஞ்சேன்

       அவமே பிறந்த அருவினையேன் உனக்கு அன்பருள் ஆம்

       சிவமே பெறும் திரு எய்திற்றிலேன் நின் திருவடிக்காம்

       பவமே அருளு கண்டாய் அடியேற்கு எம்பரம்பரனே

பொழிப்புரை:

சிவநெறியிலிருந்து நழுவிச் சென்று மாறுபட்ட கொள்கைகள் கொண்டிருந்த, கொடிய முப்புரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும், ஒரே அம்பினால் எரிந்து விழுமாறுச் செய்தவனும், காமனை விழித்தே எரித்தும், காலால் காலனை உதைத்தும் அவர்கள் இருவரையும் துன்புறுத்திய சிவபெருமான் ஆரூரில் உறைகின்றான். இத்தகைய வல்லமை வாய்ந்த சிவபெருமானை, நம்மை அணுகும் ஆறு உட்பகைகளாகிய காமம், குரோதம், மோகம், உலோபம், மதம், மாற்சரியம் ஆகிய குணங்கள் அணுகாது. பெருமை வாய்ந்த சிவபெருமானைச் சார்ந்து தவம் செய்யும் நல்வழி இருக்கையில், அதனை விடுத்து, சமண சமயத்தைச் சார்ந்து பயனற்ற பாவச் செயல்களைப் புரிந்து எனது வாழ்நாளை வீணாகக் கழித்தேன்; மேலும் செய்யும் செயல்கள் பாவச் செயல்கள் என்பதையும் உணராமல், அந்த செய்கைகளால் பெருமிதம் கொண்டு திரிந்தேன்.

பாடல் 10:

        மறுத்தான் ஓர் வல்லரக்கன் ஈரைந்து முடியினொடு தோளும் தாளும்

       இறுத்தானை எழில் முளரித் தவிசின் மிசைஇருந்தான் தன் தலையில் ஒன்றை

       அறுத்தானை ஆரூரில் அம்மானை ஆலாலம் உண்டு கண்டம்

       கருத்தானைக் கருதாதே கரும்பு இருக்க இரும்பு கடித்து எய்த்தவாறே

விளக்கம்:

முளரி=தாமரை மலர்: தவிசு=இருக்கை:

எய்த்தல்=இளைத்தல்:

பொழிப்புரை:

திருக்கயிலாய மலையை எடுக்க எண்ணுவதே தகாத செயல் என்று எடுத்துக் கூறிய தேர்ப்பாகனின் சொற்களை மறுத்துக் கயிலை மலையை பெயர்த்து எடுக்க முற்பட்ட, வலிமை வாய்ந்த அரக்கன் இராவணனுடைய பத்து தலைகளும், தோள்களும், கால்களும் செயலற்று போகும்படி நசுக்கியவன் சிவபெருமான்; அழகான தாமரை மலரைத் தனது இருக்கையாக் கொண்ட பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றினை அறுத்தவன் சிவபெருமான்: இத்தகைய வல்லமை வாய்ந்த பெருமான் ஆரூரில் விடம் உண்ட கண்டனாகத் திகழ்கின்றான். மிருதுவானதும் இனிமை உடையதுமான கரும்பினை விடுத்து, கடிக்க முடியாத, சுவை ஏதும் இல்லாத இரும்பினை கடித்து துன்பம் அடியும் மூடனைப் போல், இனிமையான சைவ சமயத்தை விடுத்து, சமண சமயத்தைச் சார்ந்து எனது வாழ்க்கையின் பெரும்பகுதியை வீணாக கழித்து இளைத்துவிட்டேன்.

முடிவுரை:

முதல் பாடலில் சமண சமயத்தைச் சார்ந்ததை தெரிவிக்கும் அப்பர் பிரான், அவ்வாறு நேர்ந்ததற்கு இறைவனின் அருள் இல்லாத தன்மையே காரணம் என்று அடுத்த பாடலில் கூறுகின்றார். மூன்றாவது பாடலில், தனது வினைகளை மேலும் பெருக்கியவர் சிவபிரான் என்றும், தனக்கு அருகில் வரவழைப்பதற்காக சூலை நோய் கொடுத்து, பின்னர் அந்த நோயினையும் தீர்த்து சிவபிரான் ஆட்கொண்டார் என்று கூறுகின்றார். நான்காவது பாடலில், தன்னைத் தூய்மை செய்த பெருமான், தனது திருப்பாதங்களையும் தனக்கு காட்டியதாக கூறுகின்றார். ஐந்தாவது பாடலில் சிவபிரான் தனது உடலில், தன்னை (அப்பர் பிரானை) ஏற்றுக்கொண்டதாக கூறுகின்றார். ஆறாவது பாடலில் சிவபிரான் தனது மனதினில் புகுந்து நின்ற தன்மையை குறிப்பிடுகின்றார். ஏழாவது பாடலில் சிவபிரான் தனக்கு நல்லறிவைத் தந்ததையும்; எட்டாவது பாடலில் சூலை நோயின் கொடுமையால் தனது உயிர் பிரியாமல் காத்து அருள் செய்ததையும், குறிப்பிட்டு, பதிகத்தின் முதல் எட்டு பாடல்களில் தனது வாழ்க்கையில் சிவபிரான் அருள் புரிந்ததை, அப்பர் பிரான் நமக்கு தெரிவிக்கின்றார்.

தொகுப்பு: என். வெங்கடேஸ்வரன்

damalvenkateswaran@gmail.com

98416 97196 & 044 24811300

தினசரி பாராயண தேவாரம் 

Nithya Parayana series Tevaram

பதிவிறக்கம் செய்ய :

http://www15.zippyshare.com/v/I1EryyNh/file.html

அல்லது 

https://www.mediafire.com/folder/hdd98dgj4pjeb/Nithya_Parayana_series_Tevaram

பெரியபுராணம் மற்றும் திருவிசைப்பா பாடல்கள் 
பாடியவர் தருமபுரம் ப சுவாமிநாதன் 
பெரிய புராணப் பாடல்கள் & திருவிசைப்பா MP3 Songs
பதிவிறக்கம் செய்ய :

பதிக எண்: 4.03             திருவையாறு         பண்: காந்தாரம்

பின்னணி:

சிவபெருமான் முனிவராய்த் தோன்றியதையும், பின்னர் தன்னை அருகில் இருந்த ஒரு குளத்தில் மூழ்கி எழுமாறு சொன்னதையும் நினைத்து, மகிழ்ந்த அப்பர் பிரான் இறைவனின் கருணையை நினைந்து வேற்றாகி விண்ணாகி என்று தொடங்கும் திருத்தாண்டகப் பதிகத்தை அருளினார்; பின்னர் அஞ்செழுத்து மந்திரத்தை ஓதியபடியே, இறைவனைப் பணித்தபடி அந்த பொய்கையில் மூழ்கினார்.

 ஏற்றினார் அருள் தலை மிசைக் கொண்டு எழுந்து இறைஞ்சி

       வேற்றுமாகி விண்ணாகி நின்றார் மொழி விரும்பி 

       ஆற்றல் பெற்றவர் அண்ணலார் அஞ்செழுத்து ஓதி

       பால் தடம் புனல் பொய்கையில் மூழ்கினார்பணியால்

இவ்வாறு, இறைவனின் ஆணையை சிரமேற்கொண்டு அந்தக் குளத்தில் மூழ்கிய அப்பர் பிரான், தான் எழுந்த போது திருவையாற்றுக் குளத்தில் இருப்பதை உணர்ந்தார். இந்த அதிசயத்தைக் கண்ட உலகம் வியந்தது. இறைவனின் கருணையை நினைத்து எழுந்த அப்பர் பிரானின் இரு கண்களிலிருந்தும் ஆனந்தக் கண்ணீர் தாரை தாரையாக பொழிந்து குளத்து நீருடன் கலந்தது. இரு வேறு குளங்கள் என்று உணர்த்துவதற்காக, பால் தடம் பொய்கை என்று வடநாட்டில் இருந்த குளத்தை குறிப்பிடும் சேக்கிழார், திருவையாற்றுக் குளத்தினை. வம்புலா மலர் வாவி என்று குறிப்பிடுகின்றார். கயிலைப் பயணத்தினை பதின்மூன்று பாடல்களில் விவரிக்கும் சேக்கிழார், வடக்கிலிருந்து திருவையாறு வந்ததை வாவியின் கரையில் வந்து ஏறி என்று ஓரே சொற்றொடருடன் முடிக்கின்றார். மிகவும் விரைவாக வடநாட்டிலிருந்து தெற்கே வந்ததை குறிக்கும் பொருட்டு வந்து என்ற ஒரே சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது, சேக்கிழாரின் கவிதை நயத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. வம்புலா மலர் வாவி=மணங்கள் நிறைந்த மலர்கள் பொருந்திய குளம்.

 வம்புலா மலர் வாவியின் கரையில் வந்து ஏறி

       உம்பர் நாயகர் திருவருள் பெருமையை உணர்வார்

       எம்பிரான் தரும் கருணை கொள் இது என இரு கண்

       பாம்பு தாரை நீர் வாவியில் படிந்து எழும் படியார்

குளத்தில் இருந்து எழுந்த அப்பர் பிரான் இறைவனின் திருவடிகளை வணங்கும் பொருட்டு திருக்கோயிலுக்குச் சென்றார். செல்லும் வழியில் உள்ள உயிர்கள் அனைத்தும் தத்தம் துணையுடன் கூடி விளங்கும் தோற்றத்தைக் கண்டார். அந்தத் தோற்றத்தை இந்த பதிகத்தின் பாடல்களில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தான் காணும் உயிர்கள் எல்லாம் தத்தம் துணையுடன் இருக்கும் நிலை, அப்பர் பிரானுக்கு சக்தியும் சிவமும் சேர்ந்து   இருக்கும் நிலையை உணர்த்தவே, அந்த உயிர்களை வணங்கியவாறு திருக்கோயிலை வந்தடைந்தார். இந்த பதிகத்தில் காணப்படும் அனைத்துப் பாடல்களிலும் முதல் வரியில் உமை அம்மையை இறைவனுடன் இணைத்து குறிப்பிடுவதை நாம் காணலாம். மலையான் மகள், பூந்துகிலாள், ஏந்திழையாள், பெய் வளையாள், தையல் நல்லாள், காரிகையாள், மெல்லியலாள், மொய் குழலாள், தேமொழியாள், வார் குழலாள் என்று உமை அம்மையை அப்பர் பிரான் குறிப்பிடுகிறார்.

மிடையும் நீள் கொடி வீதிகள் விளங்கிய ஐயாறு

       உடைய நாயகர் சேவடி பணிய வந்துறுவார்

       அடைய அப்பதி நிற்பவும் சரிப்பவுமான

       புடை அமர்ந்த தம் துணையொடும் பொலிவன கண்டார்

       பொன்மலைக் கொடியுடன் அமர் வெள்ளியம் பொருப்பில்

       தன்மையாம் படி சத்தியும் சிவமுமாம் சரிதைப்

       பன்மை யோனிகள் யாவையும் பயில்வன பணிந்தே

       மன்னு மாதவர் தம்பிரான் கோயில் முன் வந்தார்

கோயிலின் முன் வந்து நின்ற அப்பர் பெருமானுக்கு எதிரே தோன்றும் கோயிலே கயிலாய மலையாக காட்சி அளித்தது, திருமால், பிரமன், இந்திரன் முதலான தேவர்கள் அன்புடன் வழிபடும் ஒலிகளும், மறைகளின் ஒலிகளும் தனித்தனியாக அப்பர் பெருமானுக்கு கேட்டன. தேவர்கள், தானவர்கள், சித்தர்கள், வித்தியாதரர்கள், யட்சர்கள், முனிவர்கள், முதலானோர் திரண்டு குழுமி நிற்பதைக் கண்ட அப்பர் பிரான், அரம்பையர்கள் பாடும் பாடல் ஒலிகள் கடல்களின் ஒலியை விடவும் மிகுதியாக முழங்குவதையும் கேட்டார். கங்கை முதலிய புண்ணிய நதிகள் சிவபிரானை வந்து வணங்க, சிவகணத் தலைவர்களும், பூதகணத் தலைவர்களும், பேய்கணத் தலைவர்களும் பல வகையான வாத்தியங்களை முழங்கி சிவபிரானைப் போற்றுவதையும் அப்பர் பிரான் கண்டார். இத்தகைய அடியார்களின் கூட்டத்தின் நடுவே நந்தியம்பெருமான் நடுவில் நிற்பதையும் அப்பர் பிரான் கண்டார். இவர்கள் அனைவருக்கும் முன்னம், பவள மலை என்று கூறும் படியாக, சிவந்த நிறம் கொண்ட சிவபெருமான், தனது இடது பக்கத்தில் உமையம்மையுடன் வீற்றிருந்த கோலத்தினையும் அப்பர் பிரான் திருவையாற்றில் கண்டார். உமையம்மையின் நிறம் பச்சை என்பதால் மரகதக் கொடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மரகதம் என்ற மணி மலையில் கிடைப்பது. மலையில் கிடைத்த மாமணியாகிய உமையம்மையை மரகதமணிக்கு ஒப்பிடுவது மிகவும் பொருத்தமே.

வெள்ளி வெற்பின் மேல் மரகதக் கொடியுடன் விளங்கும்

       தெள்ளு பேரொளிப் பவளவெற்பு என இடப் பாகம்

       கொள்ளு மாமலையாளுடன் கூட வீற்றிருந்த

       வள்ளலாரை முன் கண்டனர் வாய்க்கின் மன்னவனார்

காணக்கிடைக்காத இந்தக் காட்சியினைக் கண்ட அப்பர் பெருமான், தனது கைகளைத் தலை மீது குவித்து, கீழே விழுந்து வணங்கிய பின்னர், பெருமானின் முன்பு ஆடினார், பாடினார், அழுதார். அப்பர் பெருமான் அப்போது அடைந்த உணர்ச்சிகளை சொல்ல வல்லவர் எவரும் இல்லை என்று சேக்கிழார் கூறுகின்றார். ஆனந்தக் கடல் என்று சிவபெருமானை குறித்தால், கண்களால் பார்த்து என்று சொல்லாமல் முகந்து என்று இங்கே சேக்கிழார் கூறுகின்றார். கைகளால் நீரினை அள்ளுவதையே முகர்தல் என்று சொல்வது வழக்கம்.

ண்ட ஆனந்தக் கடலினைக் கண்களால் முகந்து

       கொண்டு கை குவித்து எதிர் விழுந்து எழுந்து மெய் குலைய

       அண்டர் முன்பு நின்று ஆடினார் பாடினார் அழுதார்

       தொண்டனார்க்கு அங்கு நிகழ்ந்தன யார் சொலவல்லார்

அப்பர் பிரான் கண்ட கயிலாயக் காட்சியினை மிகவும் விவரித்துக் கூறும் சேக்கிழார், சிவபெருமானின் திருநாமமாகிய ஐந்தெழுத்துக்கு பொருத்தமாக ஐந்து பாடல்கள் அமைத்துள்ள தன்மை குறிப்பிடத்தக்கது. கயிலைக் காட்சியைக் கண்ட அப்பர் பெருமானுக்கு, கயிலை மலையின் கீழ் இடுக்குண்டு, பின்னர் சிவபிரான் அருளால் மீண்ட அரக்கன் இராவணனின் நினைவு தோன்றவே, கனகமா வயிரம் உந்து என்று தொடங்கும் நேரிசைப் பதிகத்தை (நான்காம் திருமுறை, பாடல் எண்:47) பாடினார். கனகமா வயிரம் உந்து என்று தொடங்கும் பதிகத்தின் பத்து பாடல்களிலும், அரக்கன் இராவணன் கயிலை மலையை பேர்த்தேடுக்கச் செய்த முயற்சியும், அவனது வலிமை சிவபிரானால் அடக்கப்பட்ட செய்தியும் கூறப்படுகின்றது. மேலும் இறைவன், மெதுவாக தனது கால் விரலை ஊன்றவே அரக்கனது உயிர் பிழைத்தது; இறைவன் அழுத்தி ஊன்றியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்ற கேள்வியையும் இந்த பாடல்களில் அப்பர் பிரான் எழுப்புகின்றார். ஒரே செய்தியும் ஒரே கேள்வியும் பத்து பாடல்களில் இருந்தாலும், வேறு வேறு சொற்களைப் பயன்படுத்தியுள்ள அப்பர் பிரானின் தமிழ்ப் புலமை மிகவும் ரசிக்கத்தக்கது. இவ்வாறு அனைத்துப் பாடல்களிலும் இராவணனைப் பற்றிய குறிப்பு காணப்படும் வேறு இரண்டு பதிகங்களின் விவரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன. அவளிவணநல்லூர் பதிகத்தின் இரண்டாவது பாடலில் இராவணனை வென்ற இராமபிரானுக்கு சிவபிரான் செய்த உதவி கூறப்பட்டுள்ளது. மற்ற பாடல்கள் அனைத்தும் இராவணனின் கயிலை நிகழ்ச்சியே குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிக எண்           தலம்                தொடக்கச் சொற்கள்

4.34        மறைக்காடு          தேரையும் மேல் கடாவி

4.59        அவளிவணநல்லூர்   தோற்றினான் எயிறு

இராவணனுக்கு அருள் புரிந்த கருணைச் செயலைக் குறித்து பதிகம் பாடிய பின்னர், பொறையுடைய என்று தொடங்கும் பதிகத்தையும் பாட்டான நல்ல என்று தொடங்கும் பதிகத்தினையும் அப்பர் பிரான் பாடினார். இவை இரண்டும், வேற்றாகி விண்ணாகி என்று தொடங்கும் பதிகம் போல் போற்றி திருத்தாண்டகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த பதிகங்கள் பாடப்பட்ட பின்னர், இறைவன் கயிலைக் காட்சியை மறைத்து விடுகின்றார். திருவையாற்றில் தான் அமர்ந்திருக்கும் காட்சியினை அப்பர் பிரான் காண்பதற்காக கயிலைக் காட்சியை சிவபெருமான் மறைத்ததாக சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார். அப்போது தனது அனுபவத்தினை உள்ளடக்கி, மாதர் பிறைக் கண்ணியானை என்று தொடங்கும் இந்த பதிகத்தினை அப்பர் பிரான் அருளினார்.

பாடல் 1

மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும்பாடிப்

      போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்

      யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது

      காதல் மடப் பிடியொடும் களிறு வருவன கண்டேன்

      கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதனகண்டேன்

விளக்கம்:

மாதர்=அழகிய: பிறைக்கண்ணி=பிறையாகிய கொண்டை மாலை; யாதும் சுவடு படாமல் = வடநாட்டில் வெகு தூரத்தில் இருந்த பொய்கையில் மூழ்கிய அப்பர் பிரான், தென்னாட்டில் உள்ள நகரத்தில் உள்ள ஒரு குளத்தில் எழுந்த நிலைக்கு எந்த சுவடும், அடையாளமும் காணப் படாமல்; நெடும்பயணம் மேற்கொண்ட அயர்வு ஏதும் உடலில் காணப்படாத நிலை. போது=புதிதாக அன்று மலர்ந்த மலர்; பிடி=பெண் யானை; களிறு=ஆண் யானை

இறைவனை நீராட்டுவதற்காக அடியார்கள் தாங்களே குளத்திலிருந்தோ அல்லது நதியிலிருந்தோ நீர் எடுத்துச் செல்வது அந்நாளைய வழக்கம். இப்போதும் வடஇந்தியாவில் உள்ள கோயில்களில் அடியார்கள் தங்கள் கையில் நீர் எடுத்துச் சென்று இறைவனை நீராட்டுவதை நாம் காணலாம். இந்த பழக்கம் பல தேவாரப் பாடல்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. கீழைத் திருக்காட்டுப்பள்ளி தலத்தின் மீது சம்பந்தர் அருளிய பதிகத்தின் ஏழாவது பாடல் (1.05.07) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. முடி=நாற்று முடி. தருக்கு=தினவு நாற்று நட்ட உழவர்கள் தங்களது முன்கை வலியினை (மணிக்கட்டு) வெல்லக்கட்டிகளை உடைப்பதன் மூலம் போக்கிக் கொள்வார்கள் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. அத்தகைய இயற்கை வளம் நிறைந்த காட்டுப்பள்ளி தலத்தில் உள்ள இறைவனை நினைத்து அடியார்கள், தங்கள் கையில் நீரும் மலரும் கொண்டுத் தொழுது தங்கள் வினையைப் போக்கிக்கொண்டு அவனுக்கு ஆட்செய்வார்கள் என்று அன்றைய நாளில் இருந்த பழக்கத்தை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.

முடி கையினால் தொடு மோட்டுழவர் முன்கைத் தருக்கைக் கரும்பின் கட்டி   

    கடி கையினால் எறி காட்டுப்பள்ளி காதல் செய்தான் கரிதாய கண்டன்

    பொடி அணி மேனியினானை உள்கிப் போதொடு நீர் சுமந்து ஏத்தி முன் நின்று

    அடி கையினால் தொழ வல்ல தொண்டர் அருவினையைத் துரந்து ஆட்செய்வாரே

புகுவார் அவர் பின் புகுவேன் என்று ஒருவர் பின் ஒருவராக, ஒழுங்குடன் செல்லும் பழக்கம் அந்நாளில் இருந்தது இந்தப் பாடலிலிருந்து தெரிய வருகின்றது. மலையான் மகளொடும் பாடி என்றமையால், அப்பர் பிரானின் காலத்தில் தேவியைத் தனியாக பாடும் பழக்கம் இல்லை என்றும், இறைவனுடன் இணைத்தே தேவியைப் பாடும் பழக்கமும் இருந்தன என்றும் தெரிகின்றது. தனியாக தேவி வழிபாடு, தேவிக்கு தனியாக கோயில், தேவி சன்னதிக்கு தனியாக வாசல் என்பவை பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு பின்னர் தோன்றியவை என்று வரலாற்று வல்லுனர்கள் கூறுகின்றனர். ஒரே பாணியில், அடுத்தடுத்து வந்த சோழ மன்னர்களால் கட்டப்பட்ட தஞ்சைப் பெருவுடையார் கோயில், கங்கைகொண்ட சோளேச்சரம், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் மற்றும் திருபுவனம் கோயில் ஆகியவற்றின் அமைப்புகளில் உள்ள ஒற்றுமை வேற்றுமையைப் பார்த்தால் நமக்கு இந்த உண்மை புலப்படும். பின்னிரண்டு கோயில்களில் அம்மன் சன்னதிக்கு தனியாக வாயில் இருப்பதை நாம் காணலாம்.

பிறை என்பதற்கு சந்திரனின் பிறை என்ற பொருள் கொண்டு, அழகிய பிறை என்று சொல்வதுண்டு. என்றும் தேயாமலும் வளராமலும் அதே நிலையில், அருகிலிருந்த பாம்புக்கு அஞ்சாமலும் இருந்த நிலை அழகு என்று கூறப்படுகின்றது. கோயிலின் உட்பிராகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ள சந்திரசேகரர் சன்னதி, இதற்கு சான்றாக கூறப்படுகின்றது.

பொழிப்புரை:

அழகிய கொண்டை மாலைகள் அணிந்த சிவபெருமானை, உமை அம்மையுடன் இணைத்துப் பாடுபவர்களாய், அன்றலர்ந்த மலர்களையும் நீரினையும் இறைவனை வழிபடுவதற்காக கொண்டு செல்லும் அடியார்களின் பின்னே நானும் சென்றேன். வெகு தூரத்தில் வடஇந்தியாவில் இருந்த பொய்கையிலிருந்து திருவையாறு வந்ததற்கு எந்த அடியாளமும் இல்லாமல், கயிலைப் பயணம் மேற்கொண்ட போது உடலுக்கு ஏற்பட்ட சிதைவுகள் அனைத்தும் நீங்கிய நிலையில், திருவையாறு தலத்தை அடைந்த நான், அங்கே ஆண் யானை, தனது காதலியான பெண் யானையுடன் இணைந்து வரும் கோலத்தினைக் கண்டேன். இந்தக் கோலம் இதற்கு முன் நான் கண்டறியாதது. சிவனும் பார்வதி தேவியாக இணைந்து இருப்பது போன்ற இந்த கோலத்தில், நான் சிவபெருமானது திருப்பாதங்களையும் கண்டேன்.

பாடல் 2

   போழிளம் கண்ணியினானைப் பூந்துகிலாளொடும்பாடி

      வாழி அம் போற்றி என்று ஏத்தி வட்டமிட்டு ஆடா வருவேன்

      ஆழி வலவன் நின்று ஏத்தும் ஐயாறு அடைகின்ற போது

      கோழி பெடையொடும் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்

      கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதனகண்டேன்

விளக்கம்:

போழ்=பிளக்கப்பட்ட; பிளவுபட்ட, இளைய சந்திரனை இங்கே குறிக்கின்றது வட்டமிட்டு=வலம் வந்து; ஆடா=ஆனந்த நிலையில் ஆடி; ஆழி வலவன்=கடலரசன்; சமுத்ரராஜனுக்கு காவிரியை மணமுடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த ஆசையை அவன் அகத்திய முனிவரிடம் தெரிவித்தான். அகத்திய முனிவரின் ஆலோசனையின் பேரில் ஐயாற்றப்பனை வணங்கிய சமுத்ரராஜன் பின்னர் காவிரியை மணந்தான். இது தான் ஆழி வலவன் ஐயாற்றப்பனை நின்று ஏத்திய வரலாறு. இந்த வரலாறு அப்பர் பிரானால் இந்தப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெடை=பெண் இனம், இங்கே பெண் கோழியைக் குறிக்கும். குளிர்ந்து=உள்ளம் குளிர்ந்து, மகிழ்ந்து. ஆழி வலவன் என்பதற்கு சக்கரப்படை ஏந்திய திருமால் என்றும் பொருள் கூறுவார்கள்.

கயிலைக் காட்சி கண்ட மகிழ்ச்சியில் அப்பர் பிரானுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இறைவனை வாழ்க என்று மகிழ்வோடு போற்றி, கைத் தாளம் இட்டு வட்டம் இட்டு சுற்றிச் சுற்றி ஆடிச் சென்றதாக இந்த பதிகத்தின் இரண்டாம் பாடலில் குறிப்பிடுகிறார். இந்த பதிகத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் சிவபிரானை பிறை சந்திரனை தலையில் சூடியவனாக வர்ணித்து ஆரம்பிக்கின்றன

பொழிப்புரை:

இளம் பிறை போன்ற தலை மாலையினை அணிந்த சிவபெருமானை, பூவேலைகள் நிறைந்த ஆடையை அணிந்த பார்வதி தேவியுடன் இணைத்துப் பாடி, அவர்கள் திருவடி வாழ்க என்றும் அவர்களை வணங்கிப் பாடி, அளவு கடந்த மகிழ்ச்சியுடன் சுழன்று சுழன்று ஆடிக்கொண்டு வருவேன். கடலைரசனாகிய வருணன், வணங்கிப் பயன் பெற்ற ஐயாரப்பன் உறையும் தலத்தை நான் வந்தடைந்த போது, சேவல் தனது துணையான கோழியுடன் மகிழ்ந்து வரும் கோலத்தினைக் கண்டேன். அந்தக் கோலத்தினைக் கண்ட எனக்கு சிவபிரானும் பார்வதி தேவியும் இணைந்து வருவது போல் தோன்றியது. மேலும் அந்தக் கோலத்தினில் நான், சிவபிரானின் திருப்பாதங்களையும் கண்டேன். அத்தகைய காட்சியினை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை.

பாடல் 3

எரிப்பிறைக் கண்ணியினானை ஏந்திழையாளொடும் பாடி

      முரித்த இலயங்கள் இட்டு முகம் மலர்ந்து ஆடா வருவேன்

      அரித்து ஒழுகும் வெள்ளருவி ஐயாறு அடைகின்ற போது

      வரிக்குயில் பேடையொடாடி வைகி வருவன கண்டேன்

      கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதனகண்டேன்

விளக்கம்:

எரி=ஒளிரும் நிலவு; முறித்த இலயங்கள்=இடைவிட்டு ஒலிக்கும் தாள ஓசைகள்: வைகி=தங்கி

பொழிப்புரை:

பிறை நிலவினை தலையில் அணிந்த சிவபெருமானை, சிறந்த அணிகலன்கள் அணிந்த பார்வதி தேவியுடன் இணைத்துப் பாடி, பாடலுக்கு ஏற்ப தாளங்கள் இட்டுக் கொண்டு, மகிழ்ச்சியினால் மலர்ந்த முகத்துடன் ஆடிக்கொண்டு வருவேன். மணலை அரித்துக் கொண்டு வெள்ளை நிறத்து அருவி போல் மிகவும் வேகமாக வரும் காவிரி நதி பாய்கின்ற ஐயாறு தலத்தை வந்தடைந்த நான், இங்கே ஓரிடத்தில் தங்கிய ஆண் குயில் தனது இணையான பெண் குயிலுடன் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் வரும் கோலத்தினைக் கண்டேன். அந்தக் கோலத்தினைக் கண்ட எனக்கு சிவபிரானும் பார்வதி தேவியும் இணைந்து வருவது போல் தோன்றியது. மேலும் அந்தக் கோலத்தினில் நான், சிவபிரானின் திருப்பாதங்களையும் கண்டேன். அத்தகைய காட்சியினை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை

பாடல் 4

பிறை இளம் கண்ணியினானைப் பெய்வளையா ளொடும் பாடித்

      துறை இளம் பன்மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன்

      அறை இளம் பூங்குயில் ஆலும் ஐயாறு அடைகின்ற போது

      சிறை இளம் பேடையொடாடிச் சேவல் வருவன கண்டேன்

      கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதனகண்டேன்

விளக்கம்:

பெய்வளை=நெருக்கமாக கைகளில் வளையல்கள் அணிந்தவள், இங்கே உமை அம்மையை குறிக்கின்றது. துறை இளம் பன்மலர்=நீர்நிலைகளை அடுத்து உள்ள இடங்களில் வளரும் மலர்கள்; குளிர்தல்=மகிழ்தல். ஆலும்=ஒலிக்கும்;

தான் இறைவனைத் தொழுத போது தனது தோள்கள் குளிர்ந்ததாக அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். உள்ளம் மகிழ்வுடன் இருந்தால் தோள்கள் விம்முவது இயற்கை. தனது உள்ளம் மகிழ்ந்து இருந்த காரணத்தால், தனது தோள்களும் மகிழ்ந்து இருந்த நிலை இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. சிவபிரானின் புகழினை மகிழ்ந்து பாடும் பெண்கள், தங்களது உள்ளங்கள் மகிழ்ச்சியால் நிறைந்து இருந்தமையால் அவர்களது தோள்களும் விம்மிப் புடைத்து இருந்த நிலையினை மற்றொரு பெண்ணுக்குச் சுட்டிக்காட்டி பாடும் பாடல்களை தோணோக்கம் என்ற தலைப்பின் கீழ் மணிவாசகர் திருவாசகத்தில் அருளி இருப்பது இங்கே நினைவு கூறத் தக்கது. கல் போன்ற தனது மனத்தினை உருக்கிய சிவபெருமான், தனது நெஞ்சினுள்ளே புகுந்து கொண்டமையால் உலகம் தன்னை அறிந்து கொண்டதாகக் கூறும் பெண்மணி தனது தோள் விம்மிப் புடைத்துள்ள நிலையினைக் காணுமாறு தனது தோழியிடம் கூறும் பாட்டு இது.

 கற்போலும் நெஞ்சம் கசிந்துருகக் கருணையினால்

       நிற்பானைப் போல் என் நெஞ்சினுள்ளே புகுந்தருளி

       நற்பால் படுத்து என்னை நாடறியத் தான் இங்ஙன்

       சொற்பாலது ஆனவா தோணோக்கம் ஆடாமோ

பொழிப்புரை:

பிறை சூடிய சிவபெருமானை, நெருங்கிய வளையல்களைத் தனது கையில் அணிந்துள்ள பார்வதி தேவியுடன் இணைத்துப் பாடி, நீர்நிலைகளை அடுத்து வளரும் செடி கொடிகளில் உள்ள பல மலர்களைத் தூவி சிவபெருமானைத் தொழுது வரும் எனது உள்ளம் மிகவும் மகிழ்ச்சியான நிலையில் உள்ளது. அந்த மகிழ்ச்சியினால் எனது தோள்கள் விம்மி புடைத்து உள்ளன. நான், குயில்கள் பாட்டொலிக்கும் திருவையாறுத் தலம் அடைந்தபோது அங்கே சிறகுகளை உடைய தனது துணையுடன் சேவல் ஆடி வரும் கோலத்தினைக் கண்டேன். அந்தக் கோலத்தினைக் கண்ட எனக்கு சிவபிரானும் பார்வதி தேவியும் இணைந்து வருவது போல் தோன்றியது. மேலும் அந்தக் கோலத்தினில் நான், சிவபிரானின் திருப்பாதங்களையும் கண்டேன். அத்தகைய காட்சியினை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை

பாடல் 5

ஏடு மதிக் கண்ணியானை ஏந்திழையாளொடும் பாடிக்

      காடொடு நாடுமலையும் கைதொழுது ஆடா வருவேன்

      ஆடல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்ற போது

      பேடை மயிலொடும் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்

      கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதனகண்டேன்

விளக்கம்:

ஏடு=இளைத்த தனது கயிலைப் பயணத்தில் அப்பர் பிரான், காடுகள், பல நாடுகள், மலைகள் முதலியவற்றைக் கடந்துச் சென்றார். கயிலையில் சிவபெருமான் வீற்றிருக்கும் கோலத்தினைக் காணவேண்டும் என்று ஒரே நோக்கத்துடன் சென்ற அப்பர் பிரானுக்கு, தான் கண்ட காட்சிகள் அனைத்தும் சிவமயமாகத் தெரிந்தமையால், தான் கண்ட காட்சிகளையும் தொழுது கொண்டே சென்றார். திருவையாற்றில் தான் அவரது நோக்கம் நிறைவேறியது. எனவே காளத்தியில் தொடங்கிய அவரது பயணம் திருவையாறில் தான் நிறைவடைந்தது. அந்த பயணத்தில் தான் கண்ட காடு, நாடு, மலைகளை இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை:

பிறைகள் தேய்ந்து இளைத்த நிலையில் சரணடைந்த சந்திரனைச் சடையில் சூடிக் கொண்ட சிவபிரானை, அழகிய நகைகள் அணிந்த பார்வதி தேவியுடன் இணைத்துப் பாடிக்கொண்டு, காடு, மலை, பல நாடுகளைத் தாண்டிக்கொண்டு, காட்டினையும், நாட்டினையும் மலைகளையும் தொழுது கொண்டே ஆடிக் கொண்டே நான் வந்தேன். அவ்வாறு வந்த நான், நடனமாடும் சிவபிரான் உறைகின்ற ஐயாற்றினை வந்து அடைந்தேன். இங்கே ஆண் மயில் தனது துணையான பெண் மயிலுடன் பிணைந்து ஆடும்  கோலத்தினைக் கண்டேன். அந்தக் கோலத்தினைக் கண்ட எனக்கு சிவபிரானும் பார்வதி தேவியும் இணைந்து வருவது போல் தோன்றியது. மேலும் அந்தக் கோலத்தினில் நான், சிவபிரானின் திருப்பாதங்களையும் கண்டேன். அத்தகைய காட்சியினை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை

பாடல் 6

   தண்மதிக் கண்ணியினானைத் தையல்நல்லாளொடும் பாடி

      உண்மெலி சிந்தையானாகி உணரா உருகா வருவேன்

      அண்ணல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்ற போது

      வண்ணப் பகன்றிலொடாடி வைகி வருவன கண்டேன்

      கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதனகண்டேன்

விளக்கம்:

பகன்றில்=பகா அன்றில், இணை பிரியாத அன்றில் பறவை

தையல் நல்லாள்=உமை அம்மை. உமை அம்மையை தையல் நல்லாள் என்றும் பெண்ணின் நல்லாள் என்றும் திருமுறைகளில் குறிப்பிடுவது வழக்கம். அத்தகைய இரண்டு பாடல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. ஞானசம்பந்தர் திருப்பரங்குன்றம் தலத்தின் மீது அருளிய தனது பதிகத்தின் நான்காவது பாடலில், தையல் நல்லாளை ஒரு பாகம் கொண்டவன் என்று சிவபெருமானை குறிப்பிடுகின்றார். மதுரை நகர் அந்நாளிலும் மல்லிகை மலருக்கு பிரசித்தம் போலும்.

வளர் பூங்கோதை மாதவியோடு மல்லிகைக்

       குளிர் பூஞ்சாரல் வண்டறை சோலைப் பரங்குன்றம்

       தளிர் பொன்மேனித் தையல்நல்லாளொடு ஒருபாகம்

       நளிர் பூங்கொன்றை சூடினான் மேய நகர் தானே

வயரவிச் சக்கரம் குறித்த திருமந்திரப் பாடல் ஒன்றிலும், உமையம்மை தையல் நல்லாள் என்றே குறிப்பிடப்படுகின்றாள். நூக்குதல்=போக்குதல்; பவம்=பிறவி .

தையல் நல்லாளைத் தவத்தின் தலைவியை

       மையலை நூக்கும் மனோன்மணி மங்கையை

       பைய நின்று ஏத்திப் பணிமின் பணிந்த பின்

       வெய்ய பவம் இனி மேவ கிலாவே

பொழிப்புரை:

குளிர்ந்த சந்திரனது தனது சடையில் அணிந்து கொண்ட சிவபிரானை, பெண்களில் சிறந்தவளாகிய உமை அம்மையுடன் இணைத்துப் பாடியபடியே, குழைந்த உள்ளத்துடன் சிவபிரானது திருவடிச் சிறப்பினை உணர்ந்து உருகி வந்த நான் திருவையாறு தலத்தினை அடைந்தேன். தலைவனாகிய சிவபெருமான் அமர்ந்திருக்கும் திருவையாற்றில் அழகிய வண்ணமுடைய அன்றில் பறவை தனது துணையுடன் இணைந்து வரும் கோலத்தினைக் கண்டேன். அந்தக் கோலத்தினைக் கண்ட எனக்கு சிவபிரானும் பார்வதி தேவியும் இணைந்து வருவது போல் தோன்றியது. மேலும் அந்தக் கோலத்தினில் நான், சிவபிரானின் திருப்பாதங்களையும் கண்டேன். அத்தகைய காட்சியினை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை

பாடல் 7

   கடிமதிக் கண்ணியினானைக் காரிகையாளொடும் பாடி

     வடிவொடு வண்ணம் இரண்டும் வாய் வேண்டுவ சொல்லி வாழ்வேன்

     அடி இணை ஆர்க்கும் கழலான் ஐயாறு அடைகின்ற போது

     இடி குரல் அன்னதோர் ஏனம் இசைந்து வருவன கண்டனே

     கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதனகண்டேன்

விளக்கம்:

காரிகை=இளம் பெண்; இங்கே உமையம்மை குறிக்கும்.

பொழிப்புரை:

அனைவரும் விரும்பும் சந்திரனைத் தனது சடையில் சூடிக் கொண்ட சிவபிரானை, உமையம்மையுடன் இணைத்து, சிவபிரானது வடிவினையும் வண்ணத்தையும் எனது உள்ளம் உணர்ந்ததை வாயினால் படுவதே எனது வாழக்கையின் நோக்கமாக கொண்டுள்ளேன். தனது காலில் வீரக் கழலினை அணிந்துள்ள சிவபெருமான் உறையும் ஐயாற்றினை நான் அடைந்த போது, இடி இடிப்பதைப் போன்ற குரலினை உடைய ஆண் பன்றி தனது துணையுடன் இணைந்து வரும் கோலத்தினைக் கண்டேன். அந்தக் கோலத்தினைக் கண்ட எனக்கு சிவபிரானும் பார்வதி தேவியும் இணைந்து வருவது போல் தோன்றியது. மேலும் அந்தக் கோலத்தினில் நான், சிவபிரானின் திருப்பாதங்களையும் கண்டேன். அத்தகைய காட்சியினை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை

பாடல் 8

விரும்பு மதிக் கண்ணியானை மெல்லியலாளொடும் பாடிப்

      பெரும்புலர் காலை எழுந்து பெறுமலர் கொய்யா வருவேன்

      அருங்கலம் பொன்மணி உந்தும் ஐயாறு அடைகின்ற போது

      கருங்கலை பேடையொடாடிக் கலந்து வருவன கண்டேன்

      கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதனகண்டேன்

விளக்கம்:

பெரும்புலர்=வைகறை, இரவுப் பகுதியின் நான்காவது கூறு. பெறுமலர்=பேறுகளைப் பெற்றுத் தரும் மலர். இறைவனைத் தொழுதுத் துதிப்பதற்காக நாம் பயன்படுத்தும் மலர்கள், நமக்கு முக்திப் பேற்றினைப் பெற்றுத் தரும் என்பதால், பெறுமலர் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். கலை=ஆண் மான்.

பொழுது விடிவதற்கு முன்னரே எழுந்து, குளித்துவிட்டு மலர்களைப் பறித்து இறைவனுக்கு படைக்கவேண்டும் என்பது விதி. அவ்வாறு செய்தால் வண்டுகள் வந்து தேனை உண்பதற்கு முன்னர் நாம், இறைவனுக்கு படைப்பதற்கான மலர்களை பறிக்க முடியும். அப்பர் பிரான் அத்தைகைய பழக்கம் கொண்டவராக இருந்தார் என்பதை அவரது பாடல்களில் இருந்து நாம் உணரலாம். இந்த வாழ்க்கை முறையை அப்பர் பிரான் தனது தமக்கையாரிடம் இருந்து கற்றுக் கொண்டார் என்பதை நாம் கூற்றாயினாவாறு என்று தொடங்கும் பதிக விளக்கத்தில் உணர்ந்தோம். இந்த நெறியை தனது நெஞ்சத்திற்கு அப்பர் பிரான் சொல்லிக்கொள்ளும் பாடல் ஒன்று திருவாரூர் பதிகத்தில் உள்ளது. (இடர் கெடுமாறு எண்ணுதியேல் என்று தொடங்கும் பதிகம்; எண்: 6.31.4)

 நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா 

நித்தலும் எம் பிரானுடைய  கோயில் புக்குப்

        புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்கும் இட்டுப் 

பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து  பாடித்

        தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச் சங்கரா சய

போற்றி போற்றி என்றும்

        அலைபுனல் சேர் செஞ்சடை எம் ஆதீ என்றும் 

ஆரூரா என்றென்றே அலறா நில்லே

நாமும் அவ்வாறு இருக்கவேண்டும் என்று அப்பர் பிரான் விரும்புவதையும், அவ்வாறு இருப்பார்க்கு இறைவன் கரும்புக் கட்டி போல் இனிப்பார் என்று கூறும் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. விதி=விதிக்கப்பட்டுள்ள முறை.

பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்தராகி 

       அரும்பொடு மலர்கள் கொண்டங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து

       விரும்பி நல் விளக்குத் தூபம் விதியினால் இட வல்லார்க்குக்

       கரும்பினில் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே

பொழிப்புரை:

அனைவரும் விரும்பும் சந்திரனை பிறையாகத் தனது தலையில் சூடிக் கொண்ட சிவபிரானை, மெல்லிய இயல்புகள் கொண்ட பார்வதி தேவியுடன் இணைத்துப் பாடும் நான், தினமும் காலைப் பொழுது விடிவதற்கு முன்னமே எழுந்து, இறைவனை மலர் தூவி துதிப்பதால் நமக்கு முக்திப் பேறு கிடைக்க வழிசெய்யும் மலர்களை பறித்துக் கொண்டு வருவேன். சிறந்த அணிகலன்களையும் பொன்னையும் மணியையும் அடித்து வரும் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள ஐயாறு வந்து அடைந்த போது,   ஆண் மான் தனது துணையான பெண்மானோடு இணைந்து வரும் கோலத்தினைக் கண்டேன். அந்தக் கோலத்தினைக் கண்ட எனக்கு சிவபிரானும் பார்வதி தேவியும் இணைந்து வருவது போல் தோன்றியது. மேலும் அந்தக் கோலத்தினில் நான், சிவபிரானின் திருப்பாதங்களையும் கண்டேன். அத்தகைய காட்சியினை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை

பாடல் 9

 முற்பிறைக் கண்ணியினானை மொய்குழலாளொடும் பாடிப்

       பற்றிக்கயிறு அறுக்கில்லேன் பாடியும் ஆடாவருவேன்

       அற்றருள் பெற்று நின்றாரோடு ஐயாறு அடைகின்ற போது

       நற்றுணைப் பேடையொடாடி நாரை வருவன கண்டேன்

       கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதனகண்டேன்

விளக்கம்:

கயிறு=பாசம். மொய்குழல்=அடர்ந்த கூந்தல்; முற்பிறை=தலை நாட்பிறை, அமாவாசைக்கு அடுத்த நாள் ஒரு கலையுடன் முற்பட்டுத் தோன்றும் சந்திரன். தனது கலைகள் ஒவ்வொன்றாகத் தேய்ந்து ஒற்றைப் பிறையுடன் இருந்த போது தானே சந்திரன் சிவபெருமானை சரணடைந்தான். அந்த ஒற்றைப் பிறையினை தலையில் சூடிய பெருமான் என்று இங்கே அப்பர் பிரான் விவரிக்கின்றார்.

நமது உலகப் பற்றுக்களை விடுவதற்கு சிவபெருமானின் புகழினைப் பாடுவது ஒன்றே வழி என்பதை திருவாசகத்தில், திருவம்மானைப் பதிகத்தின் கடைப் பாடலில் மணிவாசகர் கூறுகின்றார். நமது குற்றங்களைப் பொறுத்தருளி, குணங்களைக் கொண்டு, நம்மைச் சுற்றியுள்ள தொடர்புகளை அறுக்கும் வல்லமை படைத்தவன் சிவபிரான் என்று அவர் இங்கே குறிப்பிடுகின்றார். பெற்றி=தனது தன்மை

பெற்றிப் பிறர்க்கு அரிய பெம்மான் பெருந்துறையான்

       கொற்றக் குதிரையின் மேல் வந்தருளித் தன்னடியார்

       குற்றங்கள் நீக்கிக் குணம் கொண்டு கோதாட்டி

       சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான் தொல் புகழே

       பற்றி இப்பாசத்தைப் பற்றற நாம் பற்றுவான்

       பற்றிய பேரானந்தம் பாடுதும் காண் அம்மானாய்

பொழிப்புரை:

ஒற்றைப் பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடிக் கொண்ட சிவபெருமானை, அடர்ந்த அழகிய கூந்தலை உடைய பார்வதி தேவியுடன் இணைத்துப் பாடும் என்னால் சிவபிரானது திருவடிகளைப் பற்றாகக் கொண்டு உலகப் பொருட்களுடன் வைத்துள்ள பாசத்தினைப் போக்கிக் கொள்ள முடியாத அடியேன், சிவபெருமானது புகழினைப் பாடிக் கொண்டு, ஆடியபடியே ஐயாறு வந்தடைந்தேன். சிவபிரானின் அருள் பெற்ற அடியார்களோடு நான் ஐயாறு அடைந்த போது, ஆண்நாரை தனக்கு நல்ல துணையான பெண்நாரையுடன் இணைந்து வரும் கோலத்தினைக் கண்டேன். அந்தக் கோலத்தினைக் கண்ட எனக்கு சிவபிரானும் பார்வதி தேவியும் இணைந்து வருவது போல் தோன்றியது. மேலும் அந்தக் கோலத்தினில் நான், சிவபிரானின் திருப்பாதங்களையும் கண்டேன். அத்தகைய காட்சியினை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை

பாடல் 10

 திங்கள் மதிக் கண்ணியானைத் தேமொழியாளொடும் பாடி

     எங்கு அருள் நல்கும் கொல் எந்தை எனக்கினி என்னா வருவேன்

     அங்கு இள மங்கையர் ஆடும் ஐயாறு அடைகின்ற போது

     பைங்கிளி பேடையொடாடிப் பறந்து வருவனகண்டேன்

     கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதனகண்டேன்

விளக்கம்:

திங்கள்=சந்திரன்; தேமொழியாள்=உமையம்மை; அம்மையின் இனிமையான சொற்களை, தேனுக்கும், பாலுக்கும், கரும்பின் சாற்றுக்கும், யாழின் ஒலிக்கும் ஒப்பிடுவது திருமுறை மரபு. ஈங்கோய்மலையின் மீது தான் அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (முதல் திருமுறை பதிக எண்: 70) சம்பந்தர், உமையம்மையை தேன் ஒத்தன மென்மொழி மான் விழியாள் என்று குறிப்பிடுகின்றார்.

வானத்துயர் தண்மதி தோய் சடை மேல் மத்தமலர் சூடித்

       தேன் ஒத்தன மென்மொழி மான்விழியாள் தேவிபாகமாக்

       கானத்து இரவில் எரி கொண்டாடும் கடவுள்உலகேத்த

       ஏனத்திரள் வந்து இழியும் சாரல் ஈங்கோய்மலையாரே

அப்பர் பிரான் இளமங்கையர்கள் நடமாடும் ஐயாறு என்று பாடுவது நமக்கு சம்பந்தரின் திருவையாறுப் பதிகத்தின் முதல் பாடலை நினைவூட்டும். இறைவன் வீதிவலம் வரும் சமயத்தில், வீதிகளில் நடமாடிக் கொண்டு வரும் மங்கையரின் ஆடலுக்கேற்ப முழவுகள் அதிர, அதனால் எழுந்த ஓசையை மழைக்கு முன் வரும் இடி என்று தவறாக நினைத்துக் கொண்ட குரங்குகள், மரத்தில் ஏறி மேகங்களைக் காணும் தலம் என்று ஐயாற்றினை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். ஐ=கோழை, அலமந்து=சுழன்று; முகில்=மேகம். ஐந்து புலன்களும் தாங்கள் செய்ய வேண்டிய செயல்களை விட்டுவிட்டுத் தடுமாற, அறிவு மயங்கி இருக்கும் நேரத்தில், சளி தொண்டையில் வந்து சிக்கிக் கொண்டு சுழன்று சுழன்று, கீழேயும் செல்லாமல், மேலேயும் செல்லாமல் தொல்லை கொடுக்கும் சமயத்திலும், அஞ்ச வேண்டாம் என்று அபயம் அளிப்பவன் ஐயாரப்பன் என்று இங்கே சம்பந்தர் சொல்கின்றார். ஐந்து பொறிகள் தங்கள் கடமையைச் செய்ய தவறுவது; அறிவு மயங்குவது, சளி தொண்டையினை அடைப்பது ஆகியவை நமது இறுதி நிறம் நெருங்கிவிட்டது என்பதனை உணர்த்தும் அறிகுறிகள்.

புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்திட்டு ஐ மேல் உந்தி

   அலமந்த போதாக அஞ்சேல் என்று அருள் செய்வான் அமரும் கோயில்

   வலம் வந்த மடவார்கள் நடமாட முழவு அதிர மழை என்று அஞ்சிச்

   சில மந்தி அலமந்து மரம் ஏறி முகில் பார்க்கும் திருவையாறே

பொழிப்புரை:

பிறைச் சந்திரனைத் தனது தலையில் சூடிய சிவபெருமானை, தேன் போன்ற இனிமையான மொழி உடைய உமையம்மையுடன் இணைத்துப் பாடி, அடியேனுக்கு சிவபிரான் அருள் செய்யும் இடம் எதுவோ என்று தலங்கள் தோறும் சென்று வழிபட்டுவந்த நான் இப்போது ஐயாறு வந்தடைந்தேன். இளமங்கையர்கள் நடமாடும் ஐயாறு வந்தடைந்த போது பச்சைக் கிளை தனது துணையுடன் இணைந்து பறந்து வரும் கோலத்தினைக் கண்டேன். அந்தக் கோலத்தினைக் கண்ட எனக்கு சிவபிரானும் பார்வதி தேவியும் இணைந்து வருவது போல் தோன்றியது. மேலும் அந்தக் கோலத்தினில் நான், சிவபிரானின் திருப்பாதங்களையும் கண்டேன். அத்தகைய காட்சியினை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை

பாடல் 11

வளர்மதிக் கண்ணியினானை வார்குழலாளொடும் பாடிக்

       களவு படாததொர் காலம் காண்பான் கடைக் கணிக்கின்றேன்

       அளவு படாததொர் அன்போடு ஐயாறுஅடைகின்ற போது

       இள மண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்

       கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதனகண்டேன்

விளக்கம்:

நாகு=பசு; ஏறு=எருது: கடைக்கணித்தல்=முயற்சி செய்தல். இறைவனது கயிலைத் திருக்காட்சியைக் காண, தான் முயற்சி செய்ததை அப்பர் பிரான் குறிப்பிடுவதாக விளக்கம் கூறுவதுண்டு. சிலர் கடைக்கண் நிற்கின்றேன் என்று பிரித்து, கயிலைக் காட்சியைக் காண்பதற்காக, இறைவன் பணித்தபடி, திருவையாறுக் கோயில் வாயிலில் தான் வந்து நின்றதை அப்பர் பிரான் குறிப்பிடுவதாக விளக்கம் கூறுவதும் உண்டு.

சிவபிரானை வந்து சரணடைந்த பின்னர், அதுவரை பிறைகள் தேய்ந்து கொண்டிருந்த சந்திரனுக்கு, பிறைகள் வளரத் தொடங்கின. எனவே வளர்மதி என்று சந்திரனை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். மனிதர்களாகிய நாம் செய்கின்ற செயல்களுக்குத் தான் கால வரையறை உண்டு. நினைத்த மாத்திரத்தில், தான் நினைத்த காரியங்களைச் செய்யும் வல்லமை படைத்தவன் இறைவன். எனவே இறைவன் செய்யும் செயல்களுக்கு கால வரையறை என்பது கிடையாது; அதனால் தான் வடநாட்டில் இருந்து திருவையாற்றில் இருந்த குளத்திற்கு அப்பர் பிரான், ஒரு நொடியில் இறைவனால் மாற்றப்படுகின்றார். இவ்வாறு தான் மாற்றப்பட்ட அதிசயத்தை, காலம் ஏதும் வீணாகக் கழிக்கப்படாமல் தான் திருவையாறு வந்ததாக அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

பொதுவாக தனது கடைப்பாடலில் இறைவனின் பகைவனுக்கும் அருளும் திறத்தினை இராவணனின் கயிலை நிகழ்ச்சி மூலம் கூறும் அப்பர் பிரான் அந்த பழக்கத்தினின்றும், இந்த பதிகத்தில் வழுவுகிறார். தன் மீது இறைவன் காட்டிய அளவு இல்லாத அன்பின் முன் இராவணனுக்கு அருளிய திறம் ஒன்றும் இல்லை என அப்பர் பிரான் நினைத்தார் போலும். கடினமான கயிலை யாத்திரை மேற்கொண்டபோது தடுத்து இளைப்பாற வைத்து, பின்னர் ஐயாறில் எழ வைத்து கயிலைக் காட்சியை எந்த சிரமமும் இன்றி காணச் செய்த கருணையை வியந்து அளவு படாததோர் அன்பு என அப்பர் பிரான் கூறுகிறார். இந்த கயிலை காட்சியைக் காண வேண்டும் என்று தான் பல காலம் ஏங்கி இருந்ததையும் இந்த பாடலில் குறிக்கும் அப்பர் பிரான், தனது நீண்ட நாள் அவா நிறைவேறியது காரணமாக எல்லையில்லாக் களிப்பில் மிதந்தார் போலும். இந்தப் பாடலில் களவு படாததோர் காலம் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். சிவபெருமானைப் பற்றி பேசாத நாள் எல்லாம் பிறவா நாள் எனும் கொள்கை கொண்ட அப்பர் பிரான், தனது காலம் சிறிதும் விரயமாகாமல் கயிலைக் காட்சி கிடைத்தால், தனது காலம் வேறு எந்த செயலுக்கும் பயன்பட்டு களவு போகாமல் இருந்தது என்று இங்கே கூறுகின்றார்.

பொழிப்புரை:

தனது கலைகள் தினமும் வளரும் நிலைக்கு மாறிய சந்திரனைத் தனது சடையில் சூடிய சிவபெருமானை, நீண்ட கூந்தல் கொண்ட உமையம்மையுடன் இணைத்துப் பாடிக் கொண்டு, நான் கோயில் வாயிலில் நிற்கின்றேன். வடநாட்டில் இருந்து அளவிடமுடியாத படி மிகவும் குறைந்த காலத்தில் திருவையாறு வந்து அடைந்துள்ளேன். இறைவன் மீது எல்லையற்ற அன்பு வைத்துள்ள நான் திருவையாறு அடைந்த போது, இளமையான பசுவுடன் இணைந்து எருது வரும் கோலத்தினைக் கண்டேன். அந்தக் கோலத்தினைக் கண்ட எனக்கு சிவபிரானும் பார்வதி தேவியும் இணைந்து வருவது போல் தோன்றியது. மேலும் அந்தக் கோலத்தினில் நான், சிவபிரானின் திருப்பாதங்களையும் கண்டேன். அத்தகைய காட்சியினை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை

முடிவுரை:

கயிலைக் காட்சி கண்ட அனுபவத்தை மேற்கண்ட பதிகம் மூலம் உணர்த்திய அப்பர் பிரான், திருவையாற்றில் சில நாட்கள் தங்கியிருந்து பல பதிகங்கள் பாடி திருத்தொண்டுகள் செய்த பின்னர், நெய்த்தானம் மழப்பாடி முதலிய தலங்களைக் காணச் சென்றார்.

சிவானுபவத்தில் திளைப்போர்கள் படிப்படியாக உயரும் நிலையினை தசகாரியங்கள் என்று கூறுவார்கள். அவற்றை தத்துவ ரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி, ஆன்ம ரூபம், ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி, சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் என்பார்கள். தான் செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனின் செயல்களாக உணர்ந்து, யான், எனது என்ற செருக்கற்று இருத்தல் ஆன்மசுத்தியாகும். சிவத்தின் தன்மையை நூல்களில் சொல்லியவாறும், ஆசிரியர் உணர்த்தியவாறும் புரிந்து கொள்வது சிவரூபம். அவ்வாறு உணர்ந்த சிவத்தின் தன்மைகளை மறுபடியும் மறுபடியும் நினைத்து தன்னறிவுக்குப் பொருந்துமாறு ஆராய்தல் சிவதரிசனமாகும். இந்த நிலையில் யான், எனது என்ற செருக்கு இல்லாமல் ஆன்மா இருக்கும். மேலும் காண்பது அனைத்தும் சிவமாகவும் தோன்றும்; அத்தகைய காட்சியால் சிவானந்த விளைவும் ஏற்படும். இத்தகைய நிலையினைத் தான் அப்பர் பிரான் திருவையாற்றில் அனுபவித்தார். அதனால் தான் இணையாக வந்த விலங்குகள், பறவைகள் அனைத்தும் சக்தியுடன் கூடி இருக்கும் சிவமாகவே அவருக்குத் தோன்றியது. அந்நாள் வரை தான் அடையாத சிவானந்தத்தையும் அவர் அப்போது அடைந்தார். கண்டறியாதன கண்டேன் என்று தனது அனுபவத்தை ஒவ்வொரு பாடலிலும் கூறியுள்ளார்.

சிவனல்லாத ஏனைப் பொருள்களிலும் சிவம் நிறைந்து நிற்றலை உணர்ந்த அப்பர் பிரானின் செய்கை, சிவனது திருவடிப் பேறாகிய முக்தியைப் பெற்ற நிலையினை குறிக்கின்றது. முக்தி பெற்றவர்களின் தன்மை, திருமூலரால், திருமந்திரத்தின் ஆறாவது தந்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அந்தத் தன்மைகளில் ஒன்று, சிவனல்லாத அனைத்து பொருட்களிலும் சிவம் நிறைந்து நிற்றலை உணர்தல், என்று குறிப்பிடுகின்றார். தான் கண்ட அனைத்து விலங்குகளையும், பறவைகளையும், சிவசக்தி ரூபமாக அப்பர் பிரான் கண்டது, இந்தப் பதிகத்தின் அனைத்துப் பாடல்களின் கடை வரி மூலம் நமக்கு உணர்த்தப்படுகின்றது.

தானற்ற தன்மையும் தான் அவன் ஆதலும்

ஏனைய அச்சிவமான இயற்கையும்

தானுறு சாதக முத்திரை சாத்தலும்

மோனமும் நந்தி பத முத்தி பெற்றவே.

தொகுப்பு: என். வெங்கடேஸ்வரன்

damalvenkateswaran@gmail.com

98416 97196 & 044 24811300

திருச்சிற்றம்பலம்

சுண்ண வெண்சந்தனச் சாந்தும்

பதிக எண்: 4.02      அதிகை வீரட்டம்              பண்: காந்தாரம்

பின்னணி:

ஏழு நாட்கள் சுண்ணாம்பு காளவாயில் இருந்த பின்னரும் அப்பர் பிரான் தனது உடலுக்கு எந்த விதமான ஊனமும் இல்லாமல் காணப்பட்டதைக் கண்ட சமணர்கள் முதலில், ஈது என்ன அதிசயம் என்று திகைத்தனர். பின்னர் தங்களது சமயத்தைச் சார்ந்து இருந்தபோது அவர் கற்றுக்கொண்ட மந்திர சாதனையால் உயிர் பிழைத்து இருந்தார் என்று தங்களைத் தேற்றிக் கொண்ட சமணர்கள், அப்பர் பிரானுக்கு கொடிய நஞ்சு கலந்த பால் சோற்றினை ஊட்டினார்கள். சமணர்களின் சூழ்ச்சியை விளக்கும் பெரியபுராணப் பாடல் இங்கே கொடுக்க்கப்பட்டுள்ளது.

அதிசயம் அன்று இது முன்னை அமண் சமயச் சாதகத்தால்

       இது செய்து பிழைத்து இருந்தான் என வேந்தற்கு உரை செய்து

       மதி செய்வது இனிக் கொடிய வல்விடம் ஊட்டுவதென்று

       முதிர வரும் பாதகத்தோர் முடைவாயால் மொழிந்தார்கள்

ஆனால் சிவபிரான் அருளால் நஞ்சும் அமுதமாக மாறியது. இந்த நிகழ்ச்சியினைக் குறிப்பிடும் சேக்கிழார், பாற்கடலிலிருந்து உலகத்தையே அழிக்கும் வல்லமை பெற்ற நஞ்சினை அமுதமாக மாற்றிய சிவபிரானின் அடியாருக்கு நஞ்சு அமுதமாக மாறுவதில் அதிசயம் ஏதும் இல்லை என்று நயமாக கூறுகின்றார். நஞ்சு ஊட்டப்பட்ட தருணத்தில் அப்பர் பிரான் அருளிய பதிகம் ஏதும் நமக்கு கிடைக்கவிலை. ஆனால் பின்னாளில், நனிபள்ளி என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தில், சிவபிரான் நஞ்சினை அமுதமாக மாற்றி தன்னைக் காத்த நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றார்.

 துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியைமறந்திராதே

       அஞ்செழுத்து ஓதி நாளும் அரனடிக்கு அன்பதாகும்

       வஞ்சனைப் பால் சோறாக்கி வழக்கிலா அமணர்தந்த

       நஞ்சு அமுது ஆக்குவித்தான் நனிபள்ளி அடிகளாரே

தொடர்ந்து செய்த இரு சூழ்ச்சிகளிலிருந்தும் தப்பிய நாவுக்கரசர் இனி பிழைத்திருந்தால் தங்களது உயிர்களுக்கும் மன்னவனது ஆட்சிக்கும் தீங்கு நேரிடலாம் என்று மன்னவனிடம் உரைத்த சமணர்கள், மதயானையைக் கொண்டு அவரை இடறச் செய்து அவரைக் கொன்று விடலாம் என்று ஆலோசனை கூறினார்கள். கட்டுத் தறிகளை முறித்துக் கொண்டு, பெரிய முழக்கம் இட்டுக் கொண்டு, மதநீர் பெருக மிகவும் சினத்துடன் ஓடி வந்த யானையைக் கண்டு ஆகாயத்தில் வட்டமிட்ட பறவைக் கூட்டங்கள் பயந்து குரல் எழுப்பின. வரும் வழியில் இருந்த தடைகளை எல்லாம் முறித்துக் கொண்டு தன்னை நோக்கி வேகமாக ஓடி வந்த யானையைக் கண்டு சிறிதும் அஞ்சாமல் அப்பர் பிரான், சிவபிரானின் திருவடிகளையே நினைத்திருந்து இந்தப் பதிகம் அருளினார். இந்த நிகழ்ச்சி திருவதிகையில் நடைபெறவில்ல எனினும் அனைத்துப் பாடல்களிலும் அதிகை வீரட்டம் குறிப்பிடப்படுவதால், திருவதிகை தலத்திற்கு உரிய பதிகமாக கருதப்படுகின்றது. அதிகை வீரட்டம் தவிர்த்து வேறு எந்த தலங்களுக்கும் அப்பர் பிரான் செல்லாத நிலையில் பாடப்பட்ட பதிகம் என்பதாலும், தீர்க்கமுடியாத சூலை நோயிலிருந்து தன்னை விடுவித்த பிரான் என்பதாலும். அதிகை வீரட்டத்து இறைவரே அவரது கருத்தில் நிறைந்து இருந்தார் போலும்.

சிவபிரானின் திருவடிகளையே தியானம் செய்து கொண்டு இருந்த அப்பர் பிரானுக்கு சிவபிரானின் உருவம் அவரது மனதினில் நிறைந்து இருந்தது போலும். சிவபிரானின் அடையாளங்களும், அவர் அணிந்துள்ள பொருட்களும் மிகவும் விவரமாக இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் சொல்லப்படுகின்றன. தான் எந்த நிலைமையில் இருந்தாலும் இறைவனை ஏத்துவன் என்று இதற்கு முன்னர் சமணர்களால் வந்த சோதனையை எதிர்கொண்டு கொண்ட அப்பர் பிரான், அதே நிலையில் தான் யானை தன்னை நோக்கி வந்தபோதும் இருந்தார். சிவபிரானின் அடியார் என்பதால் தான் எவருக்கும் அஞ்ச வேண்டியது இல்லை என்றும், வரும் நாட்களில் தான் அஞ்சும்படியான நிகழ்ச்சி ஏதும் வராது என்றும் மிகவும் நம்பிக்கையுடன் கூறுகின்றார்.

பாண்டிய நாட்டிற்கு செல்லும் முன்னர் சம்பந்தப் பெருமான் அருளிய கோளறுத் திருப்பதிகத்தில், சிவபிரான் தனது உள்ளத்தில் புகுந்ததால் கோள்களோ, விலங்குகளோ, மற்றும் உள்ள பொருட்களோ தனக்கு மிகவும் நல்லனவாக இருக்கும் என்று ஞானசம்பந்தர் நம்பிக்கையுடன் கூறுவது இங்கே ஒப்பிட்டுப் பார்க்கத் தக்கது.

பாடல் 1

சுண்ண வெண் சந்தனச் சாந்தும் சுடர்த் திங்கள் சூளாமணியும்

       வண்ண உரிவை உடையும் வளரும் பவள நிறமும்

       அண்ணல் அரண் முரண் ஏறும் அகலம் வளாய அரவும்

       திண் நல் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்

       அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும்இல்லை

விளக்கம்:

சாந்து என்ற சொல் இரண்டு சொற்களுக்குப் பொதுவாக வருகின்றது. சுண்ணவெண் சாந்து மற்றும் சந்தனச் சாந்து என்று பொருள் கொள்ளவேண்டும். வெண் சாந்து=வெள்ளை நிறமுடைய திருநீறு. தமர்=அடியவர். அகலம்=மார்பு, சுண்ணம்=பொடி, முரண்=போர்க்குணம் மிகுந்த. உரிவையுடை=யானையை உரித்துத் தனது உடலின் மேல் போர்த்துக் கொண்ட போர்வை, திண்மை=வலிமை, இங்கே நதியின் தன்மையை குறிப்பதால், அகன்ற கெடில நதியைக் குறிக்கின்றது. அரண் முரண் ஏறு என்பதற்கு சிவபிரானை அடைந்தவர்க்கு அரணாகவும் அடையாதவர்க்கு முரணாகவும் இருக்கும் இடபம் என்றும் பொருள் கூறுவார்கள்.

பொழிப்புரை:

குழைத்துப் பூசப்பட்ட திருநீறும், சந்தனமும் தனது உடலில் பூசிகொண்டவரும், சூளாமணி போல் சுடர்விடும் சந்திரனைத் தனது முடியில் அணிந்தவரும், யானையின் தோலை உரித்து அதனைத் தனது உடலின் மேல் போர்வையாகப் போர்த்துக் கொண்டவரும், வளர்கின்ற பவளக்கொடி போன்ற நிறம் கொண்ட மேனியை உடையவரும், போர்க்குணம் மிகுந்த இடபத்தைக் காவலாகக் கொண்டவரும், தனது அகன்ற மார்பினில் பாம்பினை அணியாக அணிந்தவரும் ஆகியவரும் பலருக்கும் நன்மை செய்யும், திண்மையான கெடிலக் கரையில் உள்ள திருவதிகை நகரில் உறைபவரும் ஆகிய சிவபிரானின் அடியானாகிய நான் எதற்கும் அஞ்சமாட்டேன்; எனக்கு அச்சம் விளைவிக்கக் கூடிய பொருள் இனித் தோன்றப்போவதும் இல்லை.

பாடல் 2

 பூண்டதோர் கேழல் எயிறும் பொன் திகழ் ஆமை புரள

     நீண்ட திண்தோள் வலம் சூழ்ந்து நிலாக்கதிர் போல வெண்ணூலும்

     காண் தகு புள்ளின் சிறகும் கலந்த கட்டங்கக் கொடியும்

     ஈண்டு கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்

     அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும்

இல்லை

விளக்கம்:

கேழல்=பன்றி, எயிறு=பல், புள்=பறவை, இங்கே கொக்கினை குறிக்கின்றது. கொக்கின் வடிவம் எடுத்து பலருக்கும் தீங்கு செய்த குரண்டாசுரன் என்ற அரக்கனை அழித்ததன் அடையாளமாக கொக்கின் இறகினை அணிந்தவர் சிவபெருமான். கட்டங்கம்=மழு,

வராக அவதாரம் எடுத்த திருமாலை வென்றதின் அடையாளமாக பன்றிக் கொம்பினை தனது மார்பினிலும், ஆமை அவதாரம் எடுத்த திருமாலை வென்றதன் அடையாளமாக ஆமை ஓட்டினையும் தனது மார்பினில் அணிந்தவர் சிவபெருமான்.

பொழிப்புரை:

தனது மார்பினில் பன்றிக் கொம்பு போன்ற பல்லினை ஆபரணமாக அணிந்தவரும், தான் புனைந்து கொண்ட பொன்னின் நிறத்தினை ஒத்த ஆமை ஓட்டின் மேல் புரளுமாறும் தனது அழகிய தோள்களை வலம் வருமாறும், நிலாக்கதிர் போன்ற வெண்மையான பூணூலினை மார்பினில் அணிந்தவரும், கொக்கின் சிறகை ஆபரணமாக அணிந்தவரும், மழுவினைச் சித்திரமாக வரையப் பெற்ற கொடியினை உடையவரும் ஆகிய சிவபெருமான், இங்கே உள்ள கெடில நதிக்கரையில் அமைந்துள்ள அதிகை நகரை உடையவர் ஆவார், இத்தகைய பெருமைகள் வாய்ந்த சிவபிரானின் அடியானாகிய நான் எதற்கும் அஞ்சமாட்டேன்; எனக்கு அச்சம் விளைவிக்கக் கூடிய பொருள் இனித் தோன்றப்போவதும் இல்லை.

பாடல் 3

 ஒத்த வடத்து இளநாகம் உருத்திரபட்டம் இரண்டும்

       முத்து வடக் கண்டிகையும் முளைத்தெழு மூவிலைவேலும்

       சித்த வடமும் அதிகைச் சேணுயர் வீரட்டம் சூழ்ந்து

       தத்தும் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்

       அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும்இல்லை

விளக்கம்:

முளைத்தெழு சூலம்=எரியப்படாமல் எப்பொழுதும் சிவபிரானது கையை விட்டு நீங்காமல் இருப்பதால், அவரது கையில் இருந்து முளைத்தது போல் தோன்றுகின்றது. மேல் பாகத்தில் மூன்று இலைகள் போன்ற அமைப்பையும் கீழே ஒரு தண்டு போன்ற அமைப்பையும் கொண்டிருப்பதால் முளைத்து எழுகின்ற சூலம் என்று கூறப்பட்டுள்ளது. சித்தமடம்=அதிகையின் புறத்தே உள்ள ஒரு மடம்.

இளநாகம்=என்றும் இளமையாக காணப்படும் பாம்பு. பாம்பு தனது தோலினை அடிக்கடி உரித்து விடுவதால் தோல் சுருங்குவதில்லை. நரை, திரை இல்லாத காரணத்தால் என்றும் இளமையாக காணப்படும். இளநாகம் என்று சம்பந்தரின் முதல் பதிகத்திலும் மற்றும் பல தேவாரப் பதிகங்களிலும் கூறப்படுகின்றது.

முத்துவடக் கண்டிகை என்பதை, முத்து மாலையும் கண்டிகையையும் அணிந்தவர் என்று விளக்கம் கூறி, முத்துமாலையினை அம்பிகைக்கு உரிய அணிகலனாகவும் உருத்திராக்க மாலையை சிவபிரானுக்கு உரிய அணியாகவும் கூறி உமையம்மையுடன் இணைந்து இருக்கும் கோலத்தை குறிப்பிடுவதாகவும் பொருள் கொள்வார்கள்.

பொழிப்புரை:

தோளில் மாலையாக அணிந்த பாம்பினையும், தனது இரண்டு தோள்களிலும் உருத்திரபட்டத்தை உடையவரும், முத்து மாலை போல் வெண்மையான உருத்திராக்க கண்டிகை மாலையை உடையவரும், கையில் இருந்து முளைத்து எழுந்தது போன்று தோன்றும் மூவிலை சூலத்தை உடையவரும், சித்த வடம் என்ற மடத்தை அருகில் கொண்ட அதிகை நகரில் ஓடும் கெடில நதியைத் தனக்குத் தீர்த்தமாகக் கொண்டவரும் ஆகிய சிவபெருமானின் அடியவனாகிய ஆகிய நான் எதற்கும் அஞ்சமாட்டேன்; எனக்கு அச்சம் விளைவிக்கக் கூடிய பொருள் இனித் தோன்றப்போவதும் இல்லை

பாடல் 4

  மடமான் மறி பொற்கலையும் மழுப் பாம்பு ஒரு கையில் வீணை

      குடமால் வரைய திண்தோளும் குனிசிலைக் கூத்தின் பயில்வும்

      இடமால் தழுவிய பாகம் இருநிலன் ஏற்ற சுவடும்

      நடமார் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்

      அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும்இல்லை

விளக்கம்:

மடமான்=இளமான், மான்மறி=மான் கன்று, பொற்கலை=அழகிய ஆடை, குடமால் வரை=மேற்குத்திசையில் உள்ள பெரிய மலை. குனி சிலைக் கூத்து=வில்லினைப் போல் வளைந்து ஆடும் நடனம்

பொழிப்புரை:

இளமையான மான் கன்றினை தனது கையில் ஏந்தியவரும், அழகிய தோல் ஆடையினை உடையவரும், ஒரு கையில் மழுப்படையும், மற்றொரு கையில் பாம்பினையும், மற்றொரு கையில் வீணையையும் ஏந்தி இருப்பவரும், மேற்குத் திசையில் காணப்படும் மலை போன்ற திண்மையான தோள்களை உடையவரும், வில் போன்று வளைந்து ஆடும் நடனம் பயில்பவரும் ஆகிய சிவபெருமான் தனது உடலின் இடது பாகத்தில் பெரிய உலகங்களைத் தானமாக ஏற்ற சுவடினை உடைய திருமாலைக் கொண்டுள்ளார். குளிர்ந்த கெடில நதியைத் தீர்த்தமாக உடைய சிவபெருமானின் அடியவனாகிய ஆகிய நான் எதற்கும் அஞ்சமாட்டேன்; எனக்கு அச்சம் விளைவிக்கக் கூடிய பொருள் இனித் தோன்றப்போவதும் இல்லை

பாடல் 5

பலபல காமத்தராகிப் பதைத்து எழுவார் மனத்துள்ளே

      கல மலக்கிட்டுத் திரியும் கணபதி என்னும் களிறும்

      வலம் ஏந்தி இரண்டு சுடரும் வான் கயிலாய மலையும்

      நலமார் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்

      அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும்இல்லை

விளக்கம்:

காமத்தர்=பல விருப்பங்களை உடையவர். வலம் ஏந்துதல்=கண்ணாகக் கொண்டு இருத்தல். இரு சுடர்=சூரியன் சந்திரன் ஆகிய இருவர்

எங்கும் எதிலும் சிவபிரானையேக் காணும் அப்பர் பெருமானுக்கு, தன்னை எதிர்க் நோக்கி வரும் யானையைக் கண்டவுடன், பக்தர்களின் இடர் தீர்ப்பதற்காக சிவபிரான் அருளிய யானை முகம் கொண்ட கணபதி நினைவுக்கு வருகின்றார். கணபதி என்னும் களிற்றினை உடைய சிவபிரான் என்று இங்கே குறிப்பிடுகின்றார். கணபதிப் பெருமான் தோன்றிய விதமும், காரணமும் ஞானசம்பந்தப் பெருமானின் வலிவலம் பதிகத்திலும் மற்ற பல தேவாரப் பாடல்களிலும் காணப்படுகின்றன. தன்னை வழிபடும் அடியார்களின் இடர்களைக் களைவதற்காக கணபதியை படைத்ததாக இங்கே சம்பந்தர் கூறுகின்றார்.

 பிடி அதன் உரு உமை கொள மிகு கரி அது

       வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்

       கடி கணபதி வர அருளினன் மிகு கொடை

       வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே

தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, யானை முகம் கொண்ட கயமுகாசுரன் என்ற அரக்கனை வெல்வதற்காக சிவபிரானால் படைக்கப்பட்டவர் கணபதிப் பெருமான். எதிர்த்து வரும் யானைக்கு இந்த நிகழ்ச்சியை நினைவூட்டுவதன் மூலம், சிவபிரானின் அடியானாகிய தனக்கு இடையூறு ஏதும் செய்ய நினைத்தால், அந்த யானைக்குத்தான் தீங்கு நேரிடும் என்பதனை அந்த மதயானைக்கு உணர்த்தும் முகமாக கணபதியைப் பற்றிய குறிப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கம் கூறுவார்கள்.

பொழிப்புரை:

தங்களது மனத்தினில் பல பல விருப்பங்கள் உடைய அடியார்கள் அந்த விருப்பங்களுக்கு ஏற்படும் இடையூறுகளை நினைத்து பதைத்து எழுந்து அந்த இடையூறுகளை நீக்கும் பொருட்டு, கணபதியை வழிபடுகின்றனர். கணபதிப் பெருமானும், அத்தகைய அடியார்களின் மனதினில் உள்ள மலங்களை நீக்கி, அவர்களது விருப்பங்களை நிறைவேற்றுகின்றார். இத்தகைய பெருமை வாய்ந்த கணபதி என்று அழைக்கப்படும் யானை முகத்தானை தனது மகனாக உடையவரும், சூரியன் சந்திரன் ஆகிய இவர்களையும் தனது கண்களாக உடையவரும், பெருமை வாய்ந்த கயிலாய மலையினைத் தனது இருப்பிடமாக உடையவரும் ஆகிய சிவபெருமான், நீராடுவார்களின் பாவத்தை நீக்கித் தூய்மை படுத்தும் கெடில நதியினை, தான் விரும்பி மேவும் அதிகைத் திருக்கோயிலுக்குத் தீர்த்தமாகக் கொண்டுள்ளார். அவருக்கு அடியவனாகிய ஆகிய நான் எதற்கும் அஞ்சமாட்டேன்; எனக்கு அச்சம் விளைவிக்கக் கூடிய பொருள் இனித் தோன்றப்போவதும் இல்லை

பாடல் 6

கரந்தன கொள்ளி விளக்கும் கறங்கு துடியின் முழக்கும்

      பரந்த பதினெண் கணமும் பயின்று அறியாதன பாட்டும்

      அரங்கிடை நூல் அறிவாளர் அறியப் படாததோர் கூத்தும்

      நிரந்த கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்

      அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும்இல்லை

விளக்கம்:

இறைவன் சிவபெருமான் உயிர்களுக்கு செய்யும் அருளுதவியாகிய திருவருள் இங்கே கொள்ளி விளக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இறைவன் செய்யும் இந்த உதவி உயிர்கள் அறிய முடியாதபடி மறைந்து இருப்பதால் கரந்தன கொள்ளி விளக்கு என்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது, கறங்குதல்=சுழன்று ஆடுதல். முழக்கு=ஒலி. பயின்றரியாத பாட்டு= வெகு சிலரால் மட்டும் கற்கப்பட்டு, பலரும் அறியாத பாடல் அதாவது இசையுடன் பாடப்படும் சாம வேத கீதம்.

பொழிப்புரை:

மறைந்து நின்று உயிருக்கு உயிராய் நின்று உதவி செய்யும் திருவருளை உடையவரும் சுழன்று ஆடுகின்ற துடி என்னும் இசைக்கருவி எழுப்பும் ஒலியை உடையவரும், எல்லா இடங்களிலும் பரந்து இருக்கும் பதினெண் கணங்களை உடையவரும், மிகவும் குறைவான சிலரே அறிந்து பாடக்கூடியதும், பலரும் அறியாத சாம வேத கீதத்தை உடையவரும், கூத்தாடும் அரங்குகளில் பயிற்றுவிக்கப் படாத நடனத்தை ஆடுபவராக உடையவரும், நிரந்த கெடிலப் புனலைத் தனது தீர்த்தமாகிய உடையவரும் ஆகிய சிவபெருமானின் அடியவனாகிய ஆகிய நான் எதற்கும் அஞ்சமாட்டேன்; எனக்கு அச்சம் விளைவிக்கக் கூடிய பொருள் இனித் தோன்றப்போவதும் இல்லை.

பாடல் 7

 கொலை வரி வேங்கை அதளும் குவவோடு இலங்குபொன் தோடும்

      விலை பெறு சங்கக் குழையும் விலையில் கபாலக்கலனும்

      மலைமகள் கைக்கொண்ட மார்பும் மணி ஆர்ந்து இலங்கு மிடறும்

      உலவு கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்

      அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும்இல்லை

விளக்கம்:

அதள்=தோல். குவவு=திரட்சியாக உள்ள தோள். விலை பெறு=மிகுந்த மதிப்பினை உடைய. விலையில்=விலை மதிப்பில்லாத.

ஒரு காதினில் தோட்டினையும் மற்றொரு காதினில் குழையினையும் அணிந்த உருவமாக சிவபிரானை அப்பர் பிரான் காண்பதை நாம் இந்தப் பாடலில் உணரலாம்.

பொழிப்புரை:

தன்னால் கொல்லப்பட்ட கோடுகளை உடைய புலித்தோலை உடையவரும், தனது திரண்ட தோள்களின் மீது படுமாறுத் தொங்கும் தோட்டினை உடையவரும், விலை உயர்ந்த சங்கக் குழையினை காதினில் அணிந்தவரும் விலையே இல்லாத மண்டையோடாகிய உணவுக்கலனை உடையவரும், மலைமகள் தங்கும் இடமாகக் கொண்ட மார்பினை உடையவரும், நீலமணியின் நிறத்தோடு திகழும் கழுத்தினை உடையவரும், கெடில நதியினை தீர்த்தமாக உடையவரும் ஆகிய சிவபிரானின் அடியவனாகிய ஆகிய நான் எதற்கும் அஞ்சமாட்டேன்; எனக்கு அச்சம் விளைவிக்கக் கூடிய பொருள் இனித் தோன்றப்போவதும் இல்லை

பாடல் 8

ஆடல் புரிந்த நிலையும் அரையில் அசைத்த அரவும்

      பாடல் பயின்ற பல் பூதம் பல்லாயிரம் கொள் கருவி

      நாடற்கு அரியதோர் கூத்தும் நன்குயர் வீரட்டம் சூழ்ந்து

      ஓடும் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்

      அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும்இல்லை

விளக்கம்:

அசைத்த=கட்டிய

அரங்கிடை நூலறிவாளர் அறியப்படாததோர் கூத்து என்று ஆறாவது பாடலில் கூறிய அப்பர் பிரான், இந்த பாடலில் பல்லாயிரக் கணக்கான இசைக் கருவிகள் சேர்ந்தாலும் சிவபிரானின் கூத்திற்கு இசைய வாசிக்க இயலாது என்று அவரது கூத்தின் பெருமையைக் கூறுகின்றார்.

பொழிப்புரை:

எப்போதும் திருக்கூத்து ஆடிய நிலையில் விருப்பத்துடன் இருப்பவரும், தனது இடுப்பில் இறுக்கமாகக் கட்டிய பாம்பினை உடையவரும், பாடல்கள் பயின்ற பல பூதங்கள் ஆயிரக்கணக்கான கருவிகள் கொண்டும் அறியமுடியாதபடி கூத்தினை ஆட வல்லாரும், உயர்ந்த மதில்களைக் கொண்ட அதிகை வீரட்ட்டத்தில் உள்ள கோயிலைச் சூழ்ந்து ஓடும் கெடில நதியை தீர்த்தமாக உடையவரும் ஆகிய சிவபிரானின் அடியவனாகிய ஆகிய நான் எதற்கும் அஞ்சமாட்டேன்; எனக்கு அச்சம் விளைவிக்கக் கூடிய பொருள் இனித் தோன்றப்போவதும் இல்லை

பாடல் 9

 சூழும் அரவத் துகிலும் துகில் கிழி கோவணக் கீளும்

      யாழின் மொழியவள் அஞ்ச அஞ்சாது அருவரை போன்ற

      வேழம் உரித்த நிலையம் விரி பொழில் வீரட்டம் சூழ்ந்த

      தாழும் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்

      அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை

விளக்கம்:

கீள்=அரை ஞாண் கயிறு. துணியிலிருந்து கிழிக்கப்படுவதால் கீழ் என்று அழைக்கப்படுவது. இங்கே கீள் என்று மருவிவிட்டது. சம்பந்தப் பெருமான் தனது கோலக்காத் திருப்பதிகத்தில் கீள் என்று குறிப்பிடுவது இங்கே நினவுறத் தக்கது.

 மடையில் வாளை பாய மாதரார்

       குடையும் பொய்கை கோலக்கா உளான்

       சடையும் பிறையும் சாம்பல் பூச்சும் கீள்

       உடையும் கொண்ட உருவம் என்கொலோ

இந்தப் பாடலில் சிவபிரான் தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய யானையை உரித்த செயல் குறிப்பிடப்பட்டுள்ளது. மலை போன்ற யானை என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். தனது அடியார்களுக்காக எதனையும் செய்யவல்ல சிவபிரானின் வல்லமை இதன் மூலம் தன்னைத் தாக்க வரும் யானைக்கு ஓர் எச்சரிக்கை விடுவதை நாம் உணரலாம்.

பொழிப்புரை:

பாம்பினால் சுற்றப்பட்ட ஆடையினை உடையவரும், துணியிலிருந்து கிழித்து எடுக்கப்பட்ட கோவணத்தையும் கீளினையும் உடையவரும், யாழைப் போன்ற மொழியினை உடைய உமையம்மை அஞ்சும் அளவுக்கு பெரிய மலை போன்று வந்த யானையையும், தான் சிறிதும் அஞ்சாமல் அந்த யானையின் தோலை உரித்து வீழ்த்தியவரும், அகன்ற சோலைகள் கொண்ட அதிகை வீரட்டம் எனப்படும் தலத்தைச் சுற்றிப் பாயும் கெடில நதியினை தீர்த்தமாக உடையவரும் ஆகிய சிவபிரானின் அடியவனாகிய ஆகிய நான் எதற்கும் அஞ்சமாட்டேன்; எனக்கு அச்சம் விளைவிக்கக் கூடிய பொருள் இனித் தோன்றப்போவதும் இல்லை

பாடல் 10

நரம்பெழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை

உரங்கள் எல்லாம் கொண்டு எடுத்தான் ஒன்பதும் ஒன்றும் அலற

வரங்கள் கொடுத்து அருள் செய்வான் வளர் பொழில் வீரட்டம் சூழ்ந்து

நிரம்பு கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்

அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும்இல்லை

விளக்கம்:

தனது உடலின் வலிமை அனைத்தையும் திரட்டி, இராவணன் கயிலை மலையைப் பெயர்க்க முயன்றதால், அவனது உடலில் நரம்புகள் புடைத்து எழுந்த நிலையில் அப்போது இருந்தன. ஒன்பதும் ஒன்றும்=பத்து தலைகள்

பொழிப்புரை:

கயிலை மலையில் சிவபிரானுடன் அமைந்திருந்த உமையம்மை பயத்தால் நடுங்குமாறு, தனது கைகளில் உள்ள நரம்புகள் புடைத்து எழ, தனது வலிமை அனைத்தையும் ஒன்று திரட்டி கயிலை மலையினைப் பெயர்த்த இராவணனது பத்துத் தலைகளும் கதறுமாறு, அவனை மலையின் கீழ் அழுந்துமாறுச் செய்தவரும், பின்னர் அவன் பாடிய சாமகானம் கேட்டு மகிழ்ந்து அவனுக்கு அருள் செய்தவரும், வளர்கின்ற சோலைகளை உடைய அதிகை வீரட்டத்தைச் சூழ்ந்து ஓடும் கெடில நதியினை தீர்த்தமாக உடையவரும் ஆகிய சிவபிரானது அடியவனாகிய ஆகிய நான் நான் எதற்கும் அஞ்சமாட்டேன்; எனக்கு அச்சம் விளைவிக்கக் கூடிய பொருள் இனித் தோன்றப்போவதும் இல்லை. சிவபெருமான் வீரச்செயல்கள் புரிந்த இடங்கள் வீரஸ்தானம் என்று வடமொழியில் அழைக்கப்படுகின்றன. வீரஸ்தானம் என்ற அச்சொல் வீரட்டானம் என்று தமிழில் மாற்றப்பட்டு, மேலும் சுருக்கப்பட்டு வீரட்டம் என்று தேவாரப் பதிகங்களில் குறிக்கப்படுகின்றது.

முடிவுரை:

இந்த நிகழ்ச்சியில் அப்பர் பிரான் பெற்ற அனுபவம் அவரை பின்னாளில், மலை புரண்டு வந்து வீழினும் கலங்காமல் இருக்கவேண்டும் என்று மற்றவர்களுக்கு அறிவுரை வழங்க காரணமாக இருந்ததோ என்று நாம் நினைக்கத் தோன்றும் ஒரு குறுந்தொகை பதிகத்தின் ஒரு பாடல் (பதிக எண்: 5.91) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. கொலை செய் யானை என்பதற்கு கொல்லும் தன்மையுடைய ஐந்து புலன்கள் என்று பொருள் கூறுவார்கள். பாடலின் இறுதி அடியில் உள்ள ஏகாரம் எதிர்மறைப் பொருள் பட உள்ளது.

 மலையே வந்து வீழினும் மனிதர்காள்

       நிலையில் நின்று கலங்க பெறுதிரேல்

       தலைவனாகிய ஈசன் தமர்களைக்

       கொலைசெய் யானை தான் கொன்றிடுகிற்குமே

அப்பர் பிரானின் அருகில் வந்த யானை, அவரைத் தனது கால்களால் இடறித் தள்ளுவதற்கு பதிலாக அவரை மும்முறை வலம் வந்த பின்னர் அவர் முன்னே நிலத்தில் தாழ்ந்து வணங்கி திரும்பியது. நடந்ததை கண்ணுற்ற யானைப்பாகன், தனது கையில் இருந்த அங்குசத்தால் யானையின் மத்தகத்தில் குத்தி, யானையை மறுபடியும் அப்பர் பிரானின் மேல் ஏவினான். ஆனால் யானையோ, அவனது சொல்லைக் கேட்கவில்லை. அதற்கு மாறாக, பாகனை வீசி எறிந்து கொன்றது. நடப்பது என்ன என்பதை ஆவலுடன் வேடிக்கை பார்க்க வந்திருந்த சில சமணர்களையும் யானை தனது காலால் மிதித்து கொல்லவே, எஞ்சிய சமணர்கள் தப்பிப் பிழைப்பதற்காக ஓடினார்கள். அவர்கள் மன்னனிடம் சென்று, தனது மந்திர சாதகத்தால் தான் தப்பியதும் அல்லாமல், மற்றார்களை யானையின் மூலம் கொன்று மன்னனின் புகழுக்கு பங்கம் விளைத்த தருமசேனரை, கல்லுடன் சேர்த்துக் கயிற்றால் கட்டி கடலில் வீசி எறிதல் தான் சரியான தண்டனை என்று மன்னனிடம் கூறவே மன்னனும் அதற்கு அனுமதி அளித்தான். இறைவன் அருளால் அந்த சோதனையிலிருந்தும் அப்பர் பிரான் காப்பாற்றப்படுகின்றார்.

தொகுப்பு: என். வெங்கடேஸ்வரன்

damalvenkateswaran@gmail.com

98416 97196 & 044 24811300

கூற்றாயினவாறு

பதிக எண். 4.01     அதிகை வீரட்டானம்           பண்: கொல்லி

பின்னணி:

விழுப்புரம் மாவட்டத்தில் திருவாமூர் என்ற தலத்தில் புகழனார் என்பவருக்கும் மாதினியார் என்பவருக்கும் மகனாக சைவ வேளாளர் குலத்தில் அவதரித்தவர் மருள்நீக்கியார். தனது சிறுவயதில் பெற்றோர்கள் இருவரையும் இழந்த மருள்நீக்கியாரின் சகோதரி திலகவதியார் மணமுடிக்க இருந்த கலிப்பகையார் போர்க்களத்தில் மாண்டார். இவ்வாறு வாழ்க்கையில் தனது நெருங்கிய சொந்தங்களை சிறு வயதில் இழந்து, வாழ்க்கையில் பிடிப்பு ஏதும் இல்லாத நிலையில் சமண சமயத்துக் கொள்கைகள் அவரை ஈர்த்தன. துறவினை மேற்கொண்ட மருள்நீக்கியார் சமயங்களின் உண்மை நிலைகளை தெரிந்து கொள்வதற்காக சமண சமயம் சார்ந்தார் என்று கூறும் சேக்கிழார், இறைவனின் அருள் கூடாமையால் அப்போது சமண சமயம் சார்ந்தார் என்று பெரிய புராணத்தில் கூறுகின்றார். தனக்கு இயல்பாக இருந்த அறிவாற்றலால், சமண சமயக் கொள்கைகளை எளிதில் கற்றுத் தேர்ந்த மருள்நீக்கியார், சமணர்களின் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டு தருமசேனர் என்று அழைக்கப்பட்டு கடலூரை அடுத்துள்ள பாடலிபுத்திரத்தில் வாழ்ந்து வந்தார்.

நில்லாத உலகியல்பு கண்டு நிலையா வாழ்க்கை

       அல்லேன் என்று அறத் துறந்து சமயங்கள்

ஆனவற்றின்

       நல்லாறு தெரிந்து உணர நம்பர் அருளாமையினால்

       கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம்

குறுகுவார்.

தனது தம்பி தன்னை விட்டு நீங்கியபின்னர், திலகவதியாரும் துறவு நிலை மேற்கொண்டு அருகில் இருந்த திருவதிகை நகர் வந்து, சிவபிரானின் திருக்கோயிலில் அலகிடுதல் (பெருக்கி சுத்தம் செய்தல்), மெழுகிடுதல், பூக்கள் பறித்து மாலைகள் தொடுத்து இறைவனுக்கு அணிவித்தல் போன்ற தொண்டுகள் செய்து வந்தார். சமண சமயம் சார்ந்த தனது தம்பி மறுபடியும் சைவ சமயம் வந்து சேர்வதற்கு சிவபிரானின் அருள் என்று கூடுமோ என்று கவலையுடன் வாழ்ந்து வந்த அவர். சிவபிரானிடம் நாளும் தனது கவலையை தெரிவித்து வந்தார். ஒரு நாள் சிவபிரான் அவரது கனவில் தோன்றி, முன்னமே உமது தம்பி முனியாகி எனை அடையத் தவம் செய்தான்; இப்போது நான் அவனுக்கு சூலை நோய் அளித்து ஆட்கொள்வேன் என்று, சென்ற பிறவியில் மருள்நீக்கியார் செய்த தவத்தை குறிப்பிட்டு, கூறினார். திலகவதியார் மகிழ்ச்சி அடைந்து அந்த நன்னாளுக்காக காத்திருந்தார்.

இதனிடையில் தருமசேனருக்கு கொடிய சூலைநோய் ஏற்பட்டது. கடுமையான வயிற்று வலியால் துடித்த அவருக்கு சமண சமய மந்திரங்களும் தந்திரங்களும், மற்ற மருத்துவமும் பலன் ஏதும் அளிக்கவில்லை. தமது தமக்கையார் தனது அருகில் இருந்தால் ஏதேனும் நல்ல தீர்வு சொல்வார் என்ற நம்பிக்கையில், தமது தமக்கையாரை தான் இருக்கும் இடத்திற்கு அழைத்து வர தனது பணியாளன் ஒருவரை அனுப்பினார். சிவபிரான் தனது கனவில் கூறிய வார்த்தைகளால் தனது தம்பி சூலை நோய் கொடுக்கப்பட்டு சிவபிரானால் ஆட்கொள்ளப்படுவார் என்ற நம்பிக்கையில் இருந்த திலகவதியார், பணியாளர் தனது இல்லம் வந்தவுடன், ஏதேனும் தீங்கு உளதோ என்று ஆர்வத்துடன் கேட்டார். பணியாளர் தருமசேனர் சூலைநோயால் வருந்துவதை கூறி, தன்னுடன் பாடலிபுத்திரம் வருமாறு தருமசேனர் சார்பாக வேண்டினார்; ஆனால் நன்றியிலாத அமணர்கள் வாழும் மடத்திற்கு தான் வரமாட்டேன் என்று திலகவதியார் மறுத்தார்.

தனது உதவியாளர் மூலம் தமக்கை அளித்த இந்த பதிலைக் கேட்ட தருமசேனர் முதலில் வருந்தினார். சமணர்கள் செய்த மருத்துவங்கள் மந்திரங்கள் ஏதும் பலனளிக்காத நிலையில், இரவோடு இரவாக யாரும் அறியாமல் தமது தமக்கையார் இருக்கும் திருவதிகை சென்று அடைவது என்று தீர்மானம் செய்தார். இவ்வாறு முடிவு எடுத்தமைக்கு, அந்த நேரத்தில் சிவபிரான் திருவருள் கூடியதே காரணம் என்று சேக்கிழார் பெருமான் கூறுகின்றார்.

அவ்வார்த்தை கேட்டலுமே அயர்வு எய்தி இதற்கு

இனி யான்

       எவ்வாறு செய்வன் என ஈசர் அருள் கூடுதலால்

       ஒவ்வா இப்புன் சமயத்து ஒழியா இத்துயர் ஒழியச்

       செவ்வாறு சேர் திலகவதியார் சேர்வன் என 

நள்ளிரவில் தமக்கையார் இருந்த திருமடம் வந்து சேர்ந்தவர், திலகவதியாரின் திருவடிகளில் வீழ்ந்து, சூலை நோயினால் வருந்தி உம்மை வந்து சார்ந்தேன்; நான் வாழ்க்கையின் மாயங்களில் மயங்காமல் உய்வதற்கான வழியை நீர் காட்டியருள வேண்டும் என்று வேண்டினார். உடனே திலகவதியார், சிவபிரானின் கழல்களை வணங்கி அவருக்கு பணி செய்து உய்யலாம் என்று கூறித் தேற்றி, நமச்சிவாய என்ற மந்திரத்தை ஓதி அவருக்கு திருநீறு அளித்தார். தமக்கையார் அளித்த திருநீற்றினை, பெருவாழ்வு வந்தது என்று பெற்றுக்கொண்ட மருள்நீக்கியார் தமது திருமேனி முழுதும் அணிந்து கொண்டார்.

இதனிடையில் பொழுது விடியவே, திருவலகும், திருமெழுக்கும், தோண்டியும் கொண்டு திருக்கோயில் சென்ற திலகவதியாரைப் பின்தொடர்ந்து மருள்நீக்கியாரும் சென்றார்.  திருக்கோயிலை வலம் வந்த மருள்நீக்கியார், தரையில் விழுந்து பெருமானை வணங்கிய பின்னர் அவரது சன்னதியில் நின்று கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகத்தை பாடினார். இந்த பதிகம் உடல் குற்றமாகிய சூலை நோயினையும், உயிர்க் குற்றமாகிய பிறவிப் பிணியையும் தீர்க்கும் என்று சேக்கிழாரால் புகழப் படுகின்றது.

மூவர் பாடிய தேவாரப் பாடல்களில் இந்த பதிகம் தான் காலத்தால் முந்தையது ஆகும். கொல்லிப் பண்ணில் பாடிய இந்த பதிகத்திற்கு அருள் புரிந்த சிவபிரானை கொல்லியாம் பாட்டு உகந்தார் என்று, திருக்குறுக்கை தலத்தின் மீது அருளிய நேரிசைப் பதிகத்தில் நாவுக்கரசர் குறிப்பிடுகின்றார். குறுக்கை வீரட்டத்து இறைவனின் புகழைப் பாடி மகிழ்ந்த அப்பர் பிரானுக்கு, அதிகை வீரட்டனாரின் நினைவு வந்தது போலும்.

கல்லினால் எறிந்து கஞ்சி தாம் உணும் சாக்கியனார்

       நெல்லினால் சோறு உணாமே நீள் விசும்பு

ஆளவைத்தார் 

       எல்லி ஆங்கு எரி கை ஏந்தி எழில் திகழ் நட்டம் ஆடி

       கொல்லியாம் பண் உகந்தார் குறுக்கை வீரட்டனாரே

திருநாவுக்கரசு நாயனார், தனது முந்தைய பிறவியில் இராவணன் கயிலை மலையின் கீழ் நசுக்குண்டு இடர்ப்பட்டபோது, அவனுக்கு சங்கரன் சாமகானப் பிரியன் என்ற விவரத்தை சொல்லி. சாமகானம் பாடி தனது இடரிலிருந்து நீங்குமாறு ஆலோசனை கூறிய முனிவர் என்றும், அந்த கொடியவனான இராவணனுக்கு உதவி செய்ததற்கு தண்டனையாக இந்தப் பிறவியில் சூலை நோய் பெற்றார் என்று சிலர் கருதுகின்றனர் என்றும் இந்த பிறவியில் கோதாவரிக் கரையில் தன்னிடம் சமய உண்மை வினவிய முனிவர்களிடம் சமண சமயமே உயர்ந்தது என்று கூறி சைவ சமயத்தை இழிவாகப் பேசி சிவ அபராதம் புரிந்ததற்காக தண்டனையாக சூலை நோய் வாய்த்தது என்றும் வேறு சிலர் கருதுவதாகவும், சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணியம் தனது திருத்தொண்டர் புராணம் விளக்க உரையினில் கூறுகின்றார்.

பாடல் 1

 கூற்றாயினவாறு விலக்ககிலீர் கொடுமை பல

செய்தன நான் அறியேன்

       ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது

வணங்குவன் எப்பொழுதும்

       தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு

துடக்கி முடக்கியிட  

       ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில

வீரட்டானத்துறை அம்மானே.

விளக்கம்:

கூற்று+கூற்றுவன் என்பதன் சுருக்கம். இயமன் என்று பொருள். உடலுடன் ஒட்டி இருக்கும் உயிரினைக் கூறு செய்து பிரித்தலின் கூற்றுவன் என்று வந்த காரணப் பெயர். ஏற்றாய் என்பதற்கு ஏற்றினை வாகனமாக உடையவன் என்றும், என்னை அடிமையாக ஏற்ற இறைவன் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். விலக்ககிலீர்=விலக்காமல் இருக்கின்றீர்கள். கில் என்ற சொல் எதிர்மறைப் பொருளைத் தரும். கில்லேன் என்ற சொல்லை எதிர்மறைச் சொல்லாக அப்பர் பெருமான், சுந்தரர் மற்றும் மணிவாசகர் கையாண்டுள்ளனர். துடக்குதல்=சுருட்டுதல்

மூளை எலும்பு ஆகிய உறுப்புக்களை நரம்பு எனும் கயிற்றால் கட்டி தோற்ச்சட்டை போர்த்த உடலினுள் இருக்க முடியாமல் தவிப்பதாக கூறும் மணிவாசகர் இருக்க கில்லேன் என்று இங்கே கூறுவதை நாம் உணரலாம். குப்பாயம்=மேற்சட்டை.

மொய்ப்பால் நரம்பு கயிறாக மூளை என்பு

தோல் போர்த்த

குப்பாயம் புக்கு இருக்க கில்லேன் கூவிக் கொள்ளாய்

கோவேயோ

எப்பாலவர்க்கும் அப்பாலாம் என் ஆர் அமுதேயோ

அப்பா காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே

தான் தெளிந்து உணரமாட்டாத நிலையில் இருப்பதை தெளிய கில்லேன் என்று அப்பர் பிரான் கடவூர் வீரட்டம் பதிகத்தின் ஆறாவது பாடலில் கூறுவது இங்கே நினைவு கூறத் தக்கது.

பழியுடை யாக்கை தன்னில் பாழுக்கே நீர் இறைத்து

வழியிடை வாழ மாட்டேன் மாயமும் தெளிய

மாட்டேன்

அழிவுடைத்தாய வாழ்க்கை ஐவரால்

அலைக்கப்பட்டுக்

கழியிடைத் தோணி போன்றேன் கடவூர் வீரட்டனீரே

கொடுமை பல செய்தன என்ற தொடர் மூலம், தான் சமண சமயத்தைச் சார்ந்து இருந்த போது தான் செய்த கணக்கற்ற சிவ அபராதங்களுக்கு (என்னவென்று நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு)  வருந்தும் மருள்நீக்கியார், இனிமேல் தான் இரவும் பகலும் பிரியாது சிவபிரானை வணங்குவேன் என்றும் இங்கே கூறுகின்றார்.  தோற்றாது=வெளியே தோன்றாமல், என்ன காரணத்தால் தனக்கு சூலை நோய் வந்தது என்று எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். நோய் நாடி நோய் முதல் நாடி, மருத்துவம் செய்வது பண்டைத் தமிழர்களின் பழக்கம். ஆனால் இங்கே சூலை நோயின் மூலம் தெரியாத காரணத்தால், எவராலும் அந்த சூலை நோய்க்கு வைத்தியம் காண முடியவில்லை என்ற குறிப்பு இங்கே உணர்த்தப் படுகின்றது.

நான்காம் திருமுறையில் முதல் பதிகமாகிய இந்தப் பதிகம் கூற்று என்ற சொல்லுடன் தொடங்குகின்றது. சம்பந்தப் பெருமான் தனது முதல் பதிகத்தை அருளுவதற்கு முன்னர் சிவபிரான் உமையம்மையுடன் இடபத்தின் மீது அவருக்கு காட்சி கொடுக்கின்றார். சுந்தரரை சிவபிரான் ஆட்கொண்டவுடன் திருவெண்ணைநல்லூர் திருக்கோயிலின் முன்னர், வானத்தில் காட்சி கொடுத்தார். இவர்கள் இருவருமே இறைவனின் காட்சி கிடைக்கப்பெற்ற பின்னர் தேவாரப் பதிகங்கள் இயற்றத் தொடங்கினமையால், தோடுடைய செவியன் என்றும் பித்தா பிறைசூடி என்றும் இறைவனின் பெயருடன் தங்கள் முதல் பாடலை தொடங்கினார்கள் போலும். ஆனால் கொடுமையான வயிற்று வலியால் துடித்தபடி, மருத்துவம் ஏதும் பலன் அளிக்காத நிலையில் இறைவனை நோக்கி தனது வயிற்று வலி தீர வேண்டும் அப்பர் பிரான், வயிற்று வலி மிகவும் கடுமையாக உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் கூற்றுவன் வருத்துவது போல் சூலை நோய் வருத்துகின்றது என்று சொல்வது மிகவும் இயற்கையாக உள்ளது. கூற்றுவனை உதைத்து மார்க்கண்டேயரைக் காப்பாற்றிய சிவபிரான் தான் தன்னைக் காப்பாற்ற முடியும் என்பதை குறிப்பால் உணர்த்துகின்றார்.

வாகீச கலாநிதி கி.வா.ஜ. அவர்கள் இந்த பாடல் சிவபிரானுக்கும் அப்பருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் போல் காணப்படுகின்றது என்று தனது திருமுறை மலர்கள் என்ற புத்தகத்தில் குறிப்பிடுகின்றார். ஒரு கடுமையான நோயினால் வருந்தும் நோயாளி ஒருவன் மருத்துவரிடம் செல்லும்போது, நோயின் கொடுமை காரணமாக, இந்த நோய் கூற்றுவன்  என்னை வருத்துவதைப் போன்று உள்ளது என்பான். வயிற்று வலியால் வருந்தும் அவனிடம் மருத்துவர், நீ என்ன சாப்பிட்டாய் என்று முதலில் கேட்பார். அதற்கு அவன் என்னென்னவோ உட்கொண்டேன்; எதனால் இந்த வலி வந்தது என்று தெரியவில்லை என்பான். இனிமேல் நீங்கள் சொல்வதையே உட்கொள்வேன் என்பான்; அதே போன்று, அப்பர் பிரானும் சிவபிரானிடம், ஐயனே நான் பல தவறுகள் செய்திருக்கின்றேன்; என்னவென்று அறியேன்; இனிமேல் உன்னை இரவும் பகலும் வணங்குவேன்; என்று கூறுவது அவர் சிவபிரானிடம் நேரிடையாக உரையாடுவது போல் உள்ளது.

பொழிப்புரை:

கெடில நதிக்கரையில் உள்ள அதிகை வீரட்டானத்தில் அமர்ந்திருக்கும் சிவபிரானே, கூற்றுவன் போல் என்னை வருத்தும் இந்த சூலை நோயினை விலக்காமல் இருக்கின்றீர்களே, உமது பெருமையை அறியாமல் நான் பல கொடுமைகள் செய்துள்ளேன். என்னை அடிமையாக ஏற்றுக்கொண்டுள்ள இறைவனே, நான் உம்மை இன்றையிலிருந்து எப்போதும், இரவும் பகலும், உமது நினைவினின்று பிரியாமல் வணங்குவேன். வெளியே தோன்றாது, எப்படி வந்தது என்று எவராலும் உணரமுடியாத இந்த சூலை நோய், எனது வயிற்றின் உள்ளே புகுந்து எனது குடலினை சுருட்டி, மற்ற உறுப்புகளையும் செயல்படவிடாமல் முடக்கியுள்ளது இந்த சூலை நோய் அளிக்கும் துன்பத்தினை என்னால் பொறுக்க முடியவில்லை.

பாடல் 2

நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் நினையாது

ஒரு போதும் இருந்தறியேன்

       வஞ்சம் இது ஒப்பது கண்டறியேன் வயிற்றோடு

துடக்கி முடக்கியிட

       நஞ்சாகி வந்தென்னை நலிவதனை நணுகாமல்

துரந்து கரந்தும் இடீர்

       அஞ்சேலும் என்னீர் அடியேன் அதிகைக் கெடில

வீரட்டானத்துறை அம்மானே

விளக்கம்:

துரந்துதல்=நீக்குதல்; கரத்தல்=மறைத்தல். ஏதேனும் செய்து தனது நோயினை நீக்கவேண்டும் என்று நோயாளி துடிப்பதைப் போல் எப்படியாவது, நீக்கியோ அல்லது மறைத்தோ தனது சூலை நோயினைத் இறைவன் தீர்க்க வேண்டும் என்று அப்பர் பிரான் இங்கே விரும்புகின்றார்.

சிவபிரான் தன்னை ஏற்றுக்கொண்டதாக உணர்ந்த அப்பர் பிரான், ஏற்றாய் அடிக்கே என்று இந்த பதிகத்தின் முதல் பாடலில் பாடிய அப்பர் பிரான், இந்தப் பாடலில் தனது நெஞ்சத்தை சிவபிரான் இருப்பதற்காக ஒதுக்கியுள்ளதாக கூறுகின்றார். தனது தமக்கையின் கையால் திருநீறு பெற்றபோதே பெருவாழ்வு வந்தது என்று உணர்ந்து கூறிய அப்பர் பிரானின் மனம் அப்போதே சிவபிரானை இறைவனாக ஏற்றுக்கொள்வதற்கு பண்பட்டுவிட்டது. அதனால் தான் தன்னை அடிமையாக சிவபிரான் ஏற்றுக்கொண்டுள்ளதாக முதல் பாடலில் கூறியுள்ளார்.

வஞ்சம் என்று தனக்கு வந்துள்ள சூலை நோயினை இங்கே அப்பர் பிரான் குறிக்கின்றார். எப்படி வந்தது என்று எவராலும் உணரமுடியாமல் இருப்பதாலும், வெளியே தோன்றாமல் இருப்பதாலும் வஞ்சனையாக வந்துள்ள நோய் என்று குறிப்பிடுகின்றார். இத்தகைய சூலை நோயினை இதுவரை எவரும் கண்டதாக தான் அறிந்ததில்லை என்று கூறி, எவராலும் தீர்க்க முடியாத நோய் என்பதையும் இங்கே சிவபிரானுக்கு உணர்த்துவதை நாம் அறியலாம்.

முதல் பாடலில் கூற்று போல் தன்னை சூலை நோய் வருத்துவதாக கூரிய அப்பர் பிரான் இங்கே நஞ்சாகி வருத்துவதாக கூறுகின்றார். நஞ்சினையும் அமுதமாக மாற்றியவர் (ஆலகால விஷத்தை உட்கொண்ட பின்னரும் அந்த கொடிய விடத்தின் தன்மையை அமுதமாக மாற்றிய) சிவபிரான் தான், சூலை நோயின் தன்மையை மாற்றமுடியும் என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ள பாடல். சென்ற பாடலில் ஆரம்பித்த உரையாடல் இங்கும் தொடர்கின்றது. கடுமையான நோயால் வழிபடும் நோயாளி மருத்துவரிடம், முதலில் அவரிடம் வேண்டுவது, எனது உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்று சொல்லுங்களேன் என்பது தானே. அது போல் அப்பர் பெருமானும், அஞ்சேல் என்ற சொல்லை சிவபிரானது வாயிலிருந்து கேட்க ஆசைப்படுகின்றார்.

அஞ்சேல் என்று சிவபிரானின் வாயினால் ஆறுதல் வார்த்தை கேட்க விரும்பும் அப்பர் பிரானின் பாடல் நமக்கு மணிவாசகரின் திருவாசகப் பாடலை (ஆசைப்பத்து பதிகம் பத்தாவது பாடல்) நினைவுபடுத்துகின்றது.

வெஞ்சேல் அனைய கண்ணார் தம் வெகுளி

வகையில் அகப்பட்டு

நைஞ்சேன் நாயேன் ஞானச்சுடரே நானோர்

துணை காணேன்

பஞ்சேர் அடியாள் பாகத்தொருவா பவளத்

திருவாயால்

அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய்

அம்மானே

பொழிப்புரை:

கெடில நதிக்கரையில் உள்ள திருவதிகை வீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானே, எனது நெஞ்சத்தை உமக்கு உறைவிடமாக ஒதுக்கியுள்ளேன். இனிமேல் உம்மை ஒரு பொழுதும் நினையாமல் இருக்கமாட்டேன். நோயின் மூல காரணத்தை எவராலும் அறியமுடியாதாகவும், இத்தகைய கொடிய நோயினை இதுவரை எவரும் அனுபவித்ததாக தான் கேட்டறியாதாகவும் உள்ள இந்த சூலை நோய் மிகவும் வஞ்சனையான முறையில் என்னை வந்தடைந்துள்ளது. இந்த சூலைநோய் எனது குடரினை சுருட்டி, மற்ற உள்ளுறுப்புக்களை செயல்படவிடாமல் கொடிய விஷம் போல் என்னை வருத்தி நலிவடையச் செய்துள்ளது. இந்த சூலை நோய் என்னை வருத்தாமல் அதனைத் துரத்தியோ, மறைத்தோ எனக்கு அருள் செய்ய வேண்டும். அஞ்சேல் என்று நீர் ஆறுதல் கூறவேண்டும்.

பாடல் 3

   பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்

தலையில் பலி கொண்டு உழல்வீர்

       துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால்

சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர்

        பிணிந்தார் பொடிகொண்டு மெய் பூசவல்லீர்

பெற்றம் ஏற்றுகந்தீர் சுற்றும் வெண்தலைகொண்டு

       அணிந்தீர் அடிகேள் அதிகைக் கெடில வீரட்டானத்து

உறை அம்மானே

விளக்கம்:

பணிந்தார்=வழிபடும் அடியவர். பாற்றுதல்=போக்குதல், அழித்தல், கெடுத்தல்; பிணிந்தார்=இறந்தவர்

வெண்தலை=உலர்ந்த தலையோடு. உலர்ந்ததால் தலையில் உள்ள முடிகள் உதிர்ந்து, வெண்மை நிறமாக மாறிவிட்டது. படுதல்=அழிதல். கிள்ளப்பட்டதால் பிரமனின் உடலுடன் தொடர்பு இன்றி அழிந்த தலை. பிரமனின் செருக்கினை அழிப்பதற்காக அவனது தலையை. கிள்ளிய சிவபிரான், உலகெங்கும் சென்று பலி ஏற்பது, தனது உணவுத் தேவைக்காக அல்ல. உயிர்கள் தங்களது ஆணவம் கன்மம் மாயை எனப்படும் மலங்களை, சிவபிரானிடம் பலியாக கொடுத்துவிட்டு உய்யவேண்டும் என்ற ஆசையினால் தான் சிவபிரான் பலி ஏற்பதாக பெரியவர்கள் கூறுவார்கள். குங்கிலியக் கலிய நாயனார் புராணத்தின் முதல் பாடலில் சேக்கிழார் பெருமானார் ஊர்தொறும் பலி கொண்டு உய்ப்பவன் என்று சிவபிரானை குறிப்பிடுகின்றார்.

ஊர்தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது

அருளினாலே

பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடிச்

சீருடை அடிசில் நல்ல செழுங்கறி தயிர் நெய் பாலால்

ஆர் தரு காதல் கூற அடியவர்க்கு உதவும் நாளில்.

சமண சமய குருமார்களுடன் சுமார் நாற்பது ஆண்டுகள் பழகிய திருநாவுக்கரசருக்கு சமணர்கள் தங்களது மதத்தினை பரப்ப தீவிரமான முயற்சிகள் எடுப்பார்கள் என்பதும், அவர்களது மதத்தில் சாராதவர்களை, தங்களுக்கு பல்லவ அரசனிடம் இருந்த செல்வாக்கை பயன்படுத்தி எப்படியெல்லாம் தங்களது சமயத்திற்கு இழுப்பதற்கு முயற்சி செய்வார்கள் என்பதும் நன்றாகவே தெரியும். அவர்களது மதத்தில் குருவாக இருந்த தான் சைவ மதம் மாறியது அவர்களுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தும் என்பதையும் அறிந்த அவர் அவர்கள் தனக்கு தீங்கிழைக்கக் கூடும் என்பதையும் உணர்ந்ததால் தான் துணிந்தே என்ற சொல்லை இங்கே பயன்படுத்தியுள்ளார்.

ஊழிக்காலத்தின் முடிவில் அனைத்து உயிர்களும் இறந்த நிலையில், இறந்த உடல்களின் சாம்பலை பூசிக்கொண்டு, இறந்தவர்களின் தலையினை மாலையாக கோர்த்து தனது கழுத்தில் மாலையாக அணிந்துகொண்டு நடனம் ஆடுபவர் சிவபெருமான். சுந்தரரும் அஞ்சைக்களத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் சிவபிரானை தலைக்குத் தலைமாலை அணிந்தவராக காண்கின்றார். அலைக்கும் புலி என்று புலியின் கொலைத்தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது. கதம் என்றால் சினம், கோபம் என்று பொருள். மகோதை என்பது தலத்தின் பெயர். அஞ்சைக்களம் என்பது கோயிலின் பெயர். கச்சு என்பது இடுப்பில் உடுத்தப்படும் ஆடை.

தலைக்குத் தலைமாலை அணிந்தது என்னே சடை

மேல் கங்கை வெள்ளம் தரித்தது என்னே

அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்தது என்னே

அதன் மேல் கதநாகம் கச்சு ஆர்த்தது என்னே

மலைக்கு நிகர் ஒப்பான வன் திரைகள் வலித்து எற்றி

முழங்கி வலம்புரி கொண்டு

அலைக்கும் கடல் அங்கரை மேல் மகோதை அணியார்

பொழில் அஞ்சைகளத்து அப்பனே

ஊழிக்காலத்தில், கடல் நீர் பொங்கி உலகினை மூழ்குவிப்ப, பிரமன் திருமால் உட்பட அனைவரும் இறக்க, பிரமன் திருமால் ஆகிய இருவரின் சடலங்களைத் தனது உடலில் அணிந்தவனாக, ஒடுங்கிய உலகத்தினை மீண்டும் தோற்றுவிக்கும் எண்ணத்துடன் சிவபெருமான் வீணை வாசித்துக் கொண்டு இருப்பார் என்று கீழ்க்கண்ட பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார்.

பெருங்கடல் மூடிப் பிரளயம் கொண்டு பிரமனும்

போய்

இரும் கடன் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும்

கருங்கடல் வண்ணன் களேபரமும் கொண்டு

கங்காளராய்

வரும் கடன் மீள நின்று எம் இறை நல்வீணை

வாசிக்குமே

பொழிப்புரை:

ஊழிமுடிவினில் இறந்தவர்களின் உடல் சாம்பலை தனது உடலில் பூசிக்கொண்டும், விருப்பமுடன் எருதினை வாகனமாக ஏற்று உலகெங்கும் செல்பவரும், தனது கழுத்தினில் இறந்தவர்களின் தலையினை மாலையாக அணிந்தும் இருப்பவரும் கெடில நதிக்கரையில் உள்ள அதிகை வீரட்டானத்தில் உறைபவரும் ஆகிய சிவபெருமானே, உம்மை வழிபடும் அடியார்களின் பாவங்களை நீக்கும் வல்லமை உடையவரே, கிள்ளப்பட்டதும் உலர்ந்ததால் வெண்மை நிறத்துடன் உள்ள பிரமனின் தலையில் பிச்சை ஏற்றுத் திரியும் பெருமானே, நான் மதம் மாறியதற்காக என் மீது கோபம் கொண்டு சமண சமயத்தவர் சூழ்ச்சி செய்வார்கள் என்பதை அறிந்தும் நான் மிகவும் துணிந்து உமக்கு அடிமையாக வாழ்வது என்று முடிவினில் உள்ளேன். ஆனால் கொடுமையான சூலை நோய் என்னை நெருப்பு போல் எரிக்கின்றது. இந்த சூலை நோயினை நீர் தவிர்த்து அருள வேண்டும்.

பாடல் 4

 முன்னம் அடியேன் அறியாமையினால் முனிந்து

என்னை நலிந்து முடக்கியிடப்

       பின்னை அடியேன் உமக்கு ஆளும்பட்டேன்

சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்

       தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதன்றோ தலை

ஆயவர் தம் கடன் ஆவது தான்  

       அன்ன நடையார் அதிகைக் கெடில வீரட்டானத்துறை

அம்மானே

விளக்கம்:

முன்னம்=இதற்கு முன்னர். இந்தச் சொல் நாயனார் தனது கடந்த பிறவியை குறித்ததாகவும் கூறுவார்கள். சமண சமயம் முந்தைய பிறவி, மறுபிறவி என்ற கோட்பாடுகளை நம்புவதில்லை. திருவதிகை வந்த பின்னர் அப்பர் பெருமான் சமண சமயக் கோட்பாடுகளை மறந்து சைவ நெறியில் மறுபடியும் நம்பிக்கை வைக்கத் தொடங்கியது இங்கே குறிப்பால் உணர்த்தப்படுகின்றது. முன்னம் என்ற சொல்லுக்கு இந்த பிறவியில் என்ற பொருள் கொண்டு, தான் சமண சமயம் சார்ந்தது தனது அறியாமையால் என்று திருநாவுக்கரசர் குறிப்பிடுவதாகவும் பொருள் கொள்ளலாம். தனக்கு இறைவன் சூலை நோய் அளித்தது, தான் சமணசமயம் சார்ந்து இருந்த தவற்றிற்காக என்று உணர்ந்ததால், தான் தனது தவற்றினை உணர்ந்து சிவபிரானுக்கு அடிமையாக மாறியதாக அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். அடிமையாக மாறிய தான் ஏதாவது தவறு செய்தால் தன்னை கோபிக்கவும். புளியங்கொம்பால் அடிக்கவும், அவ்வாறு தனக்குத் தண்டனை கொடுப்பதற்கு மகிழ்ச்சி அடையவும் சிவபிரானுக்கு உரிமை உள்ளது என்பதை, கச்சி ஏகம்பத்தின் மீது அருளிய ஒரு பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிடுவது நாம் இங்கே நினைவுகூரத் தக்கது.

ஓதுவித்தாய் முன் அறவுரை காட்டி அமணரொடே

காதுவித்தாய் கட்ட நோய் பிணி தீர்த்தாய் கலந்தருளிப்

போதுவித்தாய் நின் பணி பிழைக்கில் புளியம்

வளாரால்

மோதுவிப்பாய் உகப்பாய் முனிவாய் கச்சி ஏகம்பனே

பொழிப்புரை:

அன்னம் போன்ற அழகு நடையைக் கொண்ட மகளிர் வாழும் அதிகை நகரில் கெடில நதியைத் தீர்த்தமாகக் கொண்ட வீரட்டானத்தில் உறையும் சிவபெருமானே, நான் இதற்கு முன்னம் அறியாமையால் செய்த தவறுகளுக்காக என்னை கோபித்து, தண்டைனையாக சூலை நோய் கொடுத்து நான் செயலேதும் அற்று இருக்குமாறு செய்தீர். நானும் எனது தவற்றினை உணர்ந்து, அதனை திருத்திக் கொண்டு உமக்கு அடிமையாக மாறிவிட்டேன். ஆனால் என்னை வருத்தும் சூலை நோய் இன்னும் நீங்கவில்லை. தயை செய்து அதனை தவிர்க்கவேண்டும். தன்னைச் சரண் அடைந்தவர்களின் துன்பங்களைத் தீர்ப்பது தான் தலைவராக உள்ளவர்களின் கடமை அல்லவா?

பாடல் 5

காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரை நின்றவர்

கண்டுகொள் என்று சொல்லி

       நீத்தாய கயம் புக நூக்கியிட நிலைக் கொள்ளும் வழித்

துறை ஒன்று அறியேன்

       வார்த்தை இது ஒப்பது கேட்டறியேன் வயிற்றோடு

துடக்கி முடக்கியிட

       ஆர்த்தார் புனலார் அடியேன் அதிகைக் கெடில

வீரட்டானத்துறை அம்மானே

விளக்கம்:

இகழ்தல்=மீறி நடத்தல். கயம்=நீர்நிலை; நோக்குதல்=அமிழ்தல்

முந்தைய பாடலில் தான் செய்த தவற்றுக்கு சிவபெருமான் சூலை நோய் தண்டனை கொடுத்ததாக கூறும் அப்பர் பிரான், தான் தவறு செய்ததற்கு காரணம் என்ன என்பதை சற்று நினைத்துப் பார்க்கின்றார். தான் அறியாச் சிறுவனாக இருந்தபோது, தனது பெற்றோர்களை இழந்து வருந்திய சமயத்தில், தமக்கையார் சொல்லையும் மீறி சமண சமயம் சார்ந்தது தவறு என்று உணர்கின்றார். தன்னைக் காத்தாண்ட தமக்கையாரின் சொற்களை மதிக்காமல் இருந்த நிலையை இங்கே காத்தாள்பவர் காவல் இகழ்ந்தேன் என்று ஒப்புக்கொள்ளும் அப்பர் பிரான், சமண சமயத்தில் தனக்கு ஒழுங்கான வழிகாட்டுதல் கிடைக்கவில்லை என்பதையும் இந்த பாடலில் தெரிவிக்கின்றார். சூலை நோய் வருத்திய நிலையில் தனது தமக்கையை வணங்கியபோது, திருநீறு அணிவித்து, இறைவனுக்கு பணி செய்தால் சூலை நோய் தீரும் என்று வழிகாட்டியதும் நினைவுக்கு வருவதால், தான் செய்த தவற்றின் விளைவை இங்கே உணர்ந்தவராக அப்பர் பெருமான் இந்தப் பாடலை பாடியுள்ளார்.

சமணசமயத்தை ஒரு நீர்நிலையாக உருவகித்து, நீர்நிலையின் கரையில் நின்றிருந்த சமண குருமார்கள், குளத்தின் ஆழம் என்ன என்று வினவிய போது, ஆழம் என்னவென்று விடையளிக்காமல். நீயே இறங்கி கண்டுகொள் என்று கூறியதைக் கேட்ட தான், குளத்தில் இறங்கி அமிழும் நிலைக்கு ஆளாகி வெளியே மீண்டு வரும் வழியை அறியாமல் திகைப்பதாகவும், இவ்வாறு சரியான வழிகாட்டுதலைத் தவிர்த்து என்னையே அறிந்து கொள்ளும் வார்த்தையினை இதற்கு முன்னர் (சைவத்தில் இருந்த போது) கேட்டதில்லை என்றும் அப்பர் பிரான் கூறுவதை நாம் உணரலாம்.

பொழிப்புரை:

பெருத்த ஆராவாரம் செய்யும் நீர்நிலைகளை உடைய அதிகை நகரில் கெடில நதியின் கரையில் உள்ள வீரட்டானத்தில் உறையும் சிவபெருமானே, கொடிய சூலை நோய் எனது குடரினைத் துடக்கி எனது உடல் உறுப்புகளைச்.செயலிழக்கச் செய்துவிட்டது. என்னைக் காத்துக் கொண்டிருந்த தமக்கையாரின் சொற்களை மதிக்காமல் சமண சமயம் சார்ந்தேன். குளத்தின் கரையிலிருந்த காவலர்கள் சரியாக என்னை வழிநடத்தாமையால், குளத்தில் மூழ்கும் நிலையில் உள்ள எனக்கு மீண்டு வரும் வழி என்ன என்று தெரியவில்லை. நீ தான் எனக்கு அருள்புரிந்து நான் மீள்வதற்கு உதவி புரியவேண்டும்.

பாடல் 6

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடு இசை

பாடல் மறந்தறியேன்

       நலம் தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம்

என் நாவில் மறந்தறியேன்

       உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய்

உடலுள் உறுசூலை தவிர்த்தருளாய்

       அலந்தேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்து

உறை அம்மானே

விளக்கம்:

உலந்தார் தலை=பிரமனின் தலை: அலந்துதல்=வருந்துதல், உடல் என்பது இங்கே குடலைக் குறிக்கின்றது.

தான் செய்த தவற்றினை உணர்ந்து வருந்தி, இறைவனிடம் தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டும் அப்பர் பிரான், தான் தனது வாழ்க்கையை இனி எவ்வாறு நடத்துவேன் என்பதையும் இங்கே விளக்குகின்றார். துன்பம் ஏற்பட்டபோது இறைவனின் அருளை வேண்டுவதும் அந்த துன்பம் துடைக்கப்பட்ட பின்னர், இறைவனை மறப்பதும் மனித இயல்பு. அந்த மனித இயல்பிற்கு மாறாக, தான் நலமாக இருக்கும் தருணத்திலும், இடர்படும் நேரங்களிலும் உன்னையே நினைத்து இருப்பேன் என்று இறைவனிடம் அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். இதற்கு ஏற்றாற்போல் தனக்கு பல இடர்பாடுகளை சமணர்கள் செய்தபோதும் கலங்காமல் சிவபிரானையே நினைந்து இருந்தார். சமணர்கள் அளித்த சோதனைகளில் இருந்து சிவபிரான் அருளால் தப்பிய அப்பர் பிரான் தனது எஞ்சிய வாழ்நாளில், பல தலங்கள் சென்று தேவாரப் பதிகங்கள் பாடி நாடெங்கும் சைவ சமய உணர்வினை பரப்பி, அதன் மறுமலர்ச்சிக்கு அடிகோலினார்.

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் என்று இங்கே கூறும் அப்பர் பிரான், முறையாக தீபம் தூபம் ஏற்றி வழிபடும் அடியவர்க்கு, அருள் புரிவதன் மூலம் சிவபிரான் மிகவும் இனிமையாக இருப்பார் என்று கடவூர் வீரட்டம் பதிகத்தினில் கூறுகின்றார். சிவபிரான் பித்தர் என்று இங்கே குறிப்பிடப்படுகின்றார். பெரும்புலர் காலை என்பது, இரவின் நான்காவது (இறுதி) பகுதி, சூரிய உதயத்திற்கு ஒரு ஒன்றரை மணி நேரம் முன்னர்:

பெரும்புலர் காலை மாலை மூழ்கிப் பித்தர்க்குப்

பத்தராகி

அரும்பொடு மலர்கள் கொண்டாங்கு ஆர்வத்தை

உள்ளே வைத்து

விரும்பி நல விளக்குத் தூபம் விதியினால் இட

வல்லார்க்குக்

கரும்பினில் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே

பொழிப்புரை:

பிரமனின் தலையில் பலி ஏற்று உலகெங்கும் திரியும் சிவபெருமானே, கெடில நதிக்கரையில் உள்ள அதிகை வீரட்டானத்தில் உறையும் இறைவனே, எனது உடலினை வருத்தும் சூலை நோயினை நீ தான் தவிர்த்து அருள வேண்டும். நான் இனி எப்போதும் நீர், மலர்கள், தூபம் இவை கொண்டு உன்னை மறவாமல் வழிபடுவேன்; இனிமையான தமிழில் இசைப்பாடல்கள் பாடி உன்னை புகழ்வேன். வாழ்க்கையின் எந்த நிலையிலும், துன்பம் வந்த காலத்திலும் மற்றும் துன்பமின்றி இருக்கும் காலத்திலும் உன்னை என்றும் மறவாமல், உனது நாமங்களைச் சொல்லுவேன்.

பாடல் 7

  உயர்ந்தேன் மனை வாழ்க்கையும் ஒண்பொருளும்

ஒருவர் தலை காவல் இலாமையினால்

       வயந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால்

வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்

       பயந்தே என் வயிற்றின் அகம்படியே பறித்துப் புரட்டி

அறுத்து ஈர்த்திட நான்

       அயர்ந்தேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்து

உறை அம்மானே

விளக்கம்:

வயந்தே=வயப்பட்டு (அருளின்). ஒண்பொருள்=நல்ல வழியில் பெற்ற செல்வம்.

திருநாவுக்கரசு நாயனார் மனை வாழ்க்கையில் ஈடுபட்டதாக குறிப்பு ஏதும் பெரிய புராணத்தில் காணப்படவில்லை. மேலும் சிறிய வயதில் சமண சமயம் சார்ந்து துறவியான நிலை தான் குறிப்பிடப்படுகின்றது. எனவே அவர் மனை வாழ்க்கையில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் சமண சமயத்தைச் சார்ந்த பின்னர் பல சமண சமய நூல்களை நன்கு கற்றுத் தேர்ந்து, பிற மதத்தவருடன் வாதங்கள் புரிந்து அவர்களை தனது வாதத்தால் வென்று புகழ் பெற்றதாக அவரது சரித்திரத்திலிருந்து நாம் அறிகின்றோம்.

இறைவனைப் பற்றிய சிந்தனை தோன்றாத காலங்களில், மனை வாழ்க்கை, நாம் ஈட்டும் செல்வம், நாம் பெற்ற புகழ் இவை அனைத்தையும் பெரிய பேறாக நாம் நினைத்து மகிழ்கின்றோம், அதனால் செருக்கும் அடைகின்றோம். ஆனால் இறையுணர்வு ஏற்படும் சமயங்களில், இறைவனை விட உயர்ந்த செல்வமோ, அவனது புகழினை விட உயர்ந்த புகழோ ஏதும் இல்லை என்பதை நாம் உணர்கின்றோம். சிவபிரானை வணங்காமல் சமண சமயத்தில் தான் பெற்ற புகழினைப் பெரிதாக கருதி வாழ்ந்த வாழ்க்கைக்கு அப்பர் பிரான் இங்கே வருத்தம் தெரிவிக்கின்றார் என்றே நாம் பொருள் கொள்ளவேண்டும்.

பொழிப்புரை:

கெடில நதிக்கரையில் உள்ள திருவதிகை வீரட்டானத்தில் உறையும் சிவபெருமானே, என்னை சரியாக வழி நடுத்துபவர் எவரும் இல்லாததால், மனை வாழ்க்கை, செல்வம், புகழ் இவைகளை பெரிதாக மதித்தேன். உமது அருள் வயப்பட்ட நான், வாழ்க்கையின் இன்பம், செல்வம். மற்றும் புகழ் அனைத்தும் உமது பெருமையின் முன்னே வெறுமை என்பதை உணர்ந்துவிட்டேன். எனவே உமக்கு அடிமையாக வாழ்வது என்ற முடிவில் இருக்கும் என்னை, கொடிய சூலை நோய் என்னை மிகவும் வருத்துகின்றது. எனது குடரின் உள்ளே புகுந்து, குடரினை பறித்தும், புரட்டியும், அறுத்தும் என்னை பல வகையில் துன்புறுத்தும் இந்த சூலை நோயால் நான் மிகவும் அஞ்சி தளர்ந்துவிட்டேன். நீர் தான் இந்த சூலை நோயினை தவிர்த்து அருளவேண்டும்.

பாடல் 8

   வலித்தேன் மனை வாழ்க்கை மகிழ்ந்து அடியேன்

வஞ்சம் மனம் ஒன்று  இலாமையினால்

       சலித்தால் ஒருவர் துணை யாருமில்லைச் சங்கவெண்

குழைக் காதுடை எம் பெருமான்

       கலித்தே என் வயிற்றின் அகம்படியே கலக்கி

மலக்கிட்டுக் கவர்ந்து தின்ன

       அலுத்தேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்து

உறை அம்மானே 

 

விளக்கம்:

வலித்தல்=உயர்வாக எண்ணி செருக்கு கொள்ளுதல். மனை வாழ்க்கை= உலக வாழ்க்கை. வஞ்சம்=உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல். கலித்தல்=பெருகுதல். ஒரு காதினில் குழை அணிந்தவனாக சிவபெருமானை சித்தரிக்கும் அப்பர் மற்றொரு காதில் தோடுடைய செவியன் என்பதை நமக்கு உணர்த்துகின்றார்.

பொழிப்புரை:

கெடில நதிக்கரையில் உள்ள திருவதிகை நகரில் வீற்றிருக்கும் சிவபிரானே, இந்த உலக வாழ்க்கையை உயர்வானதாக எண்ணிக்கொண்டு மிகவும் மகிழ்ந்து செருக்கு கொண்டு இருந்தேன். ஆனால் இந்த உலக வாழ்க்கையின் வெறுமையினை உணர்ந்த நான், எனது மனதினில் வஞ்சம் ஏதும் இல்லாத காரணத்தால் உண்மையை ஒப்புக்கொள்ளும் உணர்வு கொண்ட எனக்கு இந்த வாழ்க்கை எனக்கு சலிக்கின்றது; எனக்குத் துணையாக எவரும் இல்லை. வெண்ணிறச் சங்கினால் ஆன குழை என்ற அணியை காதினில் அணிந்தவனே, நாளுக்கு நாள் எனது வயிற்றின் உள்ளே வளர்ந்து கொண்டிருக்கும் இந்த சூலை நோய் எனது வயிற்றினை கலக்கி உறுப்புகளை மயக்கமுறச் செய்தமையால் நான் மிகவும் வெறுத்துவிட்டேன்.

பாடல் 9

  பொன் போல மிளிர்வதோர் மேனியினீர் புரிபுன்

சடையீர் மெலியும் பிறையீர்

       துன்பே கவலை பிணி என்று இவற்றை நணுகாமல்

துரந்து கரந்தும் இடீர்

       என் போலிகள் உம்மை இனித் தெளியார் அடியார்

படுவது இதுவே ஆகில்

       அன்பே அமையும் அதிகைக் கெடில வீரட்டானத்து

உறை அம்மானே

விளக்கம்:

மெலியும் பிறை=தேய்ந்து ஒரு கலையுடன் நின்ற சந்திரன். புரிசடை=சுருண்ட சடை. புன்சடை=செம்பட்டை நிறத்தில் உள்ள சடை

பொழிப்புரை:

பொன் போன்ற மேனியை உடையவரும், சுருண்டு செம்பட்டை நிறத்தில் உள்ள சடையினை உடையவரும், மெலிந்த நிலையில் தன்னைச் சரண் அடைந்த சந்திரனுக்கு அபயம் அளித்து அவனுக்கு வாழ்வு அளித்தவரும் ஆகிய சிவபிரானே, கொடிய சூலை நோயினால் எனக்கு ஏற்பட்டுள்ள துன்பம் கவலை ஆகியவற்றைக் களைந்து அருள் புரிவீராக. என்னைப் போன்றவர்கள் உமது கருணையின் திறத்தை அறியாததால் தெளியாத நிலையில் உள்ளனர். கவலைகள் மற்றும் துன்பங்களால் கட்டுண்டு இருக்கும் அடியார்களின்  கவலைகளை, துன்பங்களை நீக்கினால் அவர்களும் தெளிவு அடைவார்கள். உலகெங்கும் அன்பே நிலவும்.

பாடல் 10

 போர்த்தாய் அங்கோர் யானையின் தோல் புறங்காடு

அரங்கா நடமாட வல்லாய்

       ஆர்த்தான் அரக்கன் தனி மால்வரைக் கீழ் அடர்த்திட்டு

அருள் செய்த அது கருதாய்   

       வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால் என்

வேதனையான விலக்கியிடாய்     

       ஆர்த்தார் புனல்சூழ் அதிகைக் கெடில வீரட்டானத்து

உறை அம்மானே

 

விளக்கம்:

புறங்காடு=சுடுகாடு. ஊருக்கு வெளியே உள்ளதால் புறங்காடு என்று அழைக்கப் படுகின்றது.

கயிலை மலையை இராவணன் பேர்த்தேடுக்க முயற்சி செய்து, அந்த மலையின் கீழ் அமுக்குண்டதும், பின்னர் சிவபிரானின் மனம் மகிழும் வண்ணம் சாமகானம் பாடி அவரது அருள் பெற்ற நிகழ்ச்சியும் பெரும்பாலான அப்பர் பிரானின் பதிகங்களின் கடைப் பாடலில் கூறப்படுகின்றன. தெருவில் விளையாடும் சிறுவர்கள், தங்களது விளையாட்டில் நமது வீட்டின் ஒரு ஜன்னல் கண்ணாடியை உடைத்தால் நமக்கு உடனே கோபம் வருகின்றது. நாம் அந்தச் சிறுவர்கள் குறித்து அவர்களது பெற்றோர்களிடம் வாதாடி, ஜன்னல் கண்ணாடிக்கான பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் தான் அடுத்த வேலையினைச் செய்கின்றோம். சிறுவர்களின் விளையாட்டினால் பந்து மறுபடியும் ஜன்னலின் மீது படலாம் என்று நம்மை சமாதானபடுத்திக் கொண்டு கண்ணாடியை மாற்றாமலும் இருந்து  விடுவோம் ஆனால் கண்ணாடிக்கான காசினை வாங்காமல் விடமாட்டோம். இது மனித இயற்கை. தான் இருந்த வீட்டினையே, கயிலை மலையினை, பேர்த்தேடுக்க முயற்சி செய்த அரக்கனை, அவன் தனக்கு மிகவும் விருப்பமான சாமகானம் பாடியதற்காக மன்னித்து, அவனுக்கு வரங்கள் அருளிய நிகழ்ச்சி ஒவ்வொரு பதிகத்திலும் கூறப்படுவதன் காரணம், நாம் இதற்கு முன்னர் எத்தனை பாவங்கள் செய்திருந்தாலும், இப்போது சிவபிரானை மனமுருக வேண்டினால், நாம் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு இறைவனது அருள் பெறலாம் என்ற செய்தியை நமக்கு உணர்த்தவே.

பொழிப்புரை:

அதிகமான நீரினை உடையதால் மிகுந்த ஆரவாரத்துடன் ஓடும் கெடில நதிக்கரையில் உள்ள திருவதிகை நகரில் உறையும் இறைவனே, தாருகாவனத்து முனிவர்களால் உன் மீது ஏவிவிடப்பட்ட யானையின் தோலை உரித்து உனது உடலின் மீது போர்த்துக் கொண்டாய். ஊருக்கு புறம்பே உள்ள காட்டினை அரங்கமாக மாற்றிக்கொண்டு நடமாட வல்லவனே, தனது வழியில் எதிர்ப்பட்ட கயிலாய மலையை பேர்த்தேடுப்பேன் என்று மிகுந்த ஆரவாரத்துடன் முயற்சி செய்த இராவணனை, முதலில் அவனது செருக்கு அடங்குமாறு மலையின் கீழே அழுத்தி வருத்திய பின்னர், அவன் பாடிய சாமகானத்திற்கு மகிழ்ந்து அவனுக்கு அருள்கள் பல செய்தாய். அதே போல், முன்னர் நான் செய்த கொடுமைகளை பொருட்படுத்தாது, சூலை நோயின் கொடுமையால், வேர்த்தும், புரண்டும், எழுந்தும், விழுந்தும் துன்பப்படும் எனது வேதனைகளை, நீர் தான் களையவேண்டும்.

முடிவுரை

இந்தப் பதிகத்தை கோதில் திருப்பதிகம்

3

 

(குற்றமற்ற திருப்பதிகம்) என்று குறிப்பிடும் சேக்கிழார் பெருமானார், இந்தப் பதிகத்தைப் பாடுவதால், ஏழு வகையான பிறப்புகளில் ஏதேனும் ஒன்றாக பிறந்து துயரம் அடையக்கூடிய நிலையிலிருந்து நாம் விடுதலை பெறலாம் என்று கூறுகின்றார். குடல் சம்பந்தமான நோய்கள் அனைத்தையும் பக்தியுடன் இந்த பதிகம் பாடியும் படித்தும் தீர்த்துக் கொள்ளலாம் என்பது பெரியோர்களின் நம்பிக்கை.

அகத்தியர் தேவாரத் திரட்டில், குருவருள் என்ற தலைப்பின் கீழ் இந்தப் பதிகமும், தோடுடைய செவியன் (சம்பந்தர் அருளியது) பித்தா பிறைசூடி (சுந்தரர் அருளியது) பதிகங்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பதிகம் பாடிய பின்னர் அப்பர் பிரானுக்கு உலகத்தின் குருவாகிய இறைவனின் அருள் கிடைத்தது. சுந்தரரும் சம்பந்தரும் இறைவன் அருள் பெற்ற பின்னர் பாடிய முதல் பதிகங்கள் மற்ற இரண்டு பதிகங்கள். எனவே இந்த பதிகங்களை தினமும் பாடினால் குருவருள் கிடைக்கும் என்றும் நம்பப்படுகின்றது.

இந்தப் பதிகம் பாடிய பின்னர் மருள்நீக்கியாரின் சூலை நோய் முற்றிலும் நீங்கியது. நடந்த அதிசயத்தை உணர்ந்த நாயனார் சிவபிரானின் அருள் ஆகிய கடலுள் மூழ்கினார் என்று சேக்கிழார் கூறுகின்றார். தான் சமண சமயத்தைச் சார்ந்து பிழை செய்த போதிலும் தன்  மீது கருணை கொண்டு இறைவன் அருள் செய்ததை நினைத்து, மகிழ்ச்சியினால் அவரது திருமேனி முழுதும் உரோமங்கள் சிலிர்த்து நிற்க, கண்கள் இடையறாது ஆனந்தக் கண்ணீர் பொழிய, தரையின் மீது பலமுறை புரண்டு வீழ்ந்தார். சிவபிரானின் அருளைப் பெறுவதற்கு காரணமாக இருந்த சூலை நோயினுக்கு எவ்விதம் நன்றி சொல்வேன் என்று சூலை நோயினை வணங்கினார். அப்பொழுது செந்தமிழில் சொல்வளம் கொண்ட பாடலைப் பாடியதால் உமது பெயர் நாவுக்கரசர் என்று உலகினில் விளங்கும் என்ற ஒலி, அனைவரும் வியப்புறும் வண்ணம் வானில் எழுந்தது.

சிவபிரான் பெயர் சூட்டிய மற்ற அடியவர்கள், கண்ணப்பர், சண்டீசர், மாணிக்க வாசகர், இராவணன் ஆவார்கள். பின்னாளில், திருநாவுக்கரசர், ஞானசம்பந்தரை சீர்காழியில் சந்தித்த போது, சம்பந்தப் பெருமான், அப்பரே என்று அழைக்க, இவருக்கு அப்பர் என்ற பெயரும் ஏற்பட்டது. திருநாவுக்கரசர் என்ற பெயரை விட அப்பர் பிரான் என்ற பெயரால் மக்கள் இவரை அழைக்கலானார்கள். தான் அளித்த பெயரை விட தனது அடியானாகிய சம்பந்தர் சூட்டிய பெயர் மிகவும் அதிகமாக பிரபலம் அடையவேண்டும் என்பது சிவபிரானின் திருவுள்ளம் போலும்.

தனது பெயர் திருநாவுக்கரசர் என்று சிவபிரான் உலகுக்கு அறிவித்த செய்தியினை, அப்பர் பிரான், குறுவித்தவா என்று தொடங்கும் திருவையாறுப் பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிடுகின்றார். குறுவித்தல் என்றால் உடல் குறுகுதல்; இங்கே உடலினைக் குறுக்கி வணங்கிய செயல் உணர்த்தப்படுகின்றது. செறிவித்தல்=சிறப்பு செய்தல்.

குறுவித்தவா குற்ற நோய் வினை காட்டிக் குறுவித்த

நோய்

உறுவித்தவா உற்ற  நோய் வினை தீர்ப்பான்

உகந்தருளி

அறிவித்தவாறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே

செறிவித்தவா தொண்டனேனைத் தன் பொன்னடிக்

கீழ் எனையே

கூற்று என்று சொல்லை முதற்சொல்லாகக் கொண்ட நான்காம் திருமுறை, கூற்றுவன் பற்றிய குறிப்புடன் முடிகின்றது. கூற்று என்று தனது அச்சத்தை முதல் பாடலில் வெளிப்படுத்தும் அப்பர் பிரான், சிவபிரானால் ஆட்கொள்ளப்பட்ட பின்னர், மனவலிமை பெற்றவராய் திகழ்ந்து கூற்றுவனை கேலி செய்யும் அளவுக்கு மாறியுள்ளதை நாம் இங்கே உணரலாம், சிவபெருமானால் இயமன் உதையுண்டதை, திருமாலும் நான்முகனும் காணமுடியாத சிவபெருமானின் திருப்பாதத்தை, தான் உதைபட்டதால் காணும் வாய்ப்பு இயமனுக்கு கிடைத்தது என்று நகைச்சுவையாக கூறுகின்றார்.

மேலும் அறிந்திலன் நான்முகன் மேல் சென்று

கீழிடந்து

மாலும் அறிந்திலன் மாலுற்றதே வழிபாடு செய்யும்

பாலன் மிசைச் சென்று பாசம் விசிறி மறிந்த

சிந்தைக்

காலன் அறிந்தான் அறிதற்கு அரியான் கழலடியே

அப்பர் பிரான் தன்னை உழவாரப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டு, பலரையும் அந்தத் தொண்டினில் ஈடுபடுத்தி. இன்றும் அத்தகைய திருத்தொண்டினுக்கு முன்மாதிரியாக திகழ்வதற்கு அவரது தமக்கையார் திலகவதியார் தான் காரணம். சூலை நோயால் வருந்திய தன்னை விடியற்காலையில் எழுப்பி, திருநீறு அணிவித்து, திருவதிகை கோயிலுக்கு அழைத்துச் சென்றபோது, தனது தமக்கையார் கையில், அலகு (துடைப்பம்), மெழுகு (சாணி) தோண்டி (கிணற்றிலிருந்து தண்ணீர் இழுக்க குடம்) ஆகியவற்றுடன் சென்றதும், சிவபிரானது பணியில் ஈடுபடுத்திக் கொள்வது தான் சூலை நோய் தீர்க்கும் உபாயம் என்று கூறியதும் தான் அவரது வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தை நிகழ்த்தியது. மேலும் இந்த மாற்றம் தான் சமண சமயத்தின் பிடியில் இருந்த தமிழகத்தை மீட்டு சைவசமய மறுமலர்ச்சி ஏற்படவும் காரணமாக இருந்தது என்றால் மிகையாகாது. ஒரு தீபாவளி மலர் கட்டுரையில் அப்பர் பிரானின் வாழ்க்கையில் நடந்த மேற்கண்ட சம்பவத்தை விளக்கும், காஞ்சி பூஜ்யஸ்ரீ சந்திரசேகர சுவாமிகள், திலகவதியார் மற்றும் அரசி மங்கையர்க்கரசியார் இருவரும் மாதர் குல மாணிக்கங்கள் என்றும் அவர்கள் இருவரும் தான் சைவ சமய மறுமலர்ச்சிக்கு தமிழகத்தில் வித்திட்டவர்கள் என்றும் கூறுகின்றார்.

தொகுப்பு: என். வெங்கடேஸ்வரன்

damalvenkateswaran@gmail.com

98416 97196 & 044 24811300

murugan

 

திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் – பாடியவர் தருமபுரம் ப சுவாமிநாதன் MP3:  40 Mb

பாடல்கள் 56Kbps தரமாக உள்ளதால் சற்று தரம் குறைவாக இருக்கும். 

பதிவிறக்கம் செய்ய : 

http://www.mediafire.com/download/h4a6xth5cg4hoeh/ThiruchchendhUr_Pillaiththamizh.rar

நன்றி : கௌமாரம்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 126 other followers

%d bloggers like this: